தொடர்புடைய கட்டுரை

நெஞ்சம் மறப்பதில்லை – 3

குமரி ஆதவன்

26th Jul 2018

A   A   A

1981 - 1982 இல் நான் ஆறாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்தேன். அப்போதும் எங்கள் ஊரில் சாதி வெறியின் தாக்கம் குறைந்திருந்தாலும் அதன் எச்சம் ஆங்காங்கே ஈரப்பதத்தோடு இருந்து கொண்டுதான் இருந்தது. ஒரு காலத்தில் வெள்ளைத் துணிகளை அணிந்துச் சென்றால் அதில் மாட்டின் சாணத்தை தெளித்து அதன் அழகை கெடுத்து விடுவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். கேரளாவுக்கு வேலைக்குப் போய்விட்டு ஊருக்கு வந்த ஒருவர் அழகான சூ போட்டிருந்தார். அவர் சூ போட்டிருந்ததைக் கவனித்த ஒருவர், ‘மற்றவன்ற மொவன் தானே இவன், போண போக்கு. அவனும் அவன்ற சூவும் என்று மலையாளத்தில் திட்டியதை எதற்குத் திட்டுகிறார் என்றேத் தெரியாமல் நானும் நின்று சிரித்திருக்கிறேன். ஆனால் அது, மற்றவர்களின் முன்னேற்றத்தைச் சகிக்க முடியாத மற்றொரு சாதியின் புலம்பல் என்று பின்னொரு அனுபவத்தில்தான் நான் உணர்ந்து கொண்டேன்.

அன்று சாதி பெரியவர்களிடம் இருந்ததேயொழிய, பள்ளியில் பயின்ற எங்களுக்குள் எந்த சாதியும் கிடையாது. பெருஞ்சிலம்பிலிருந்து வரும் இஸ்லாமியச் சகோதரர்கள், முட்டைக்காடு பகுதியைச் சார்ந்த நாயர் சமூக நண்பர்கள், முட்டைக்காடு, வலியவிளை பகுதிகளிலிருந்து வரும் இரட்சணிய சேனை அன்பர்கள், கைதோட்டிலிருந்து வரும் கிருஷ்ணன் வகை சமூகத்தினர், எல்லா இடமும் பரந்திருந்த நாடார் சமூக மாணவர்கள் அனைவருமே ஒருதாய்ப் பிள்ளைகள் போலவேப் பழகுவோம். ஒருவர் கொண்டு வருகிற மாங்காயை, மற்றொருவர் கொண்டுவருகிற வறுத்தப் புளியங்கொட்டையை, வேறொருவர் கொண்டு வருகிற கடலைப் புண்ணாக்கை ஒருவர் மாற்றி ஒருவர் கடித்து உண்ட பொதுமையும் அன்பும் இன்றளவும் மறந்த பாடில்லை.

எல்லோருடையப் புத்தகங்களும் எல்லோருடைய வீடுகளிலும் சுற்றி வரும். அதிலும் என்னுடைய கணித வீட்டுப்பாட நோட்டு ஊர் முழுவதும் சுற்றும். இப்படி அன்போடு எல்லோரும் ஒன்றாக இருந்த நேரத்தில்தான் எனக்கு சாதி என்ற வார்த்தையையே ஒரு சக மாணவனுடைய தாய் கற்றுத் தருகிறார். மனிதர்களுக்குள் பாகுபாடும் வேறுபாடும் இருக்கிறது என்கிற புதிய நரகத்தை எனக்குக் காண்பிக்கிறார். ஒரு கணத்தில் என் இதயத்தை உடைத்து எனக்கும் என் நண்பனுக்கும் இருந்த உறவைச் சிதைக்கிறார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனைக் கூண்டில் நிறுத்துகிறார். அவரது ஒரேக் கேள்வியில் தொட்டவாடிச் செடி போல் வாடிப்போகிறேன் நான். அவர்களைச் சார்ந்த எத்தனையோ பேர் என்னை ஒரு மகனைப்போலவே பாவித்து அன்பு காட்டியிருக்கிறார்கள். என் டவுசர் பாக்கட்டிலிருந்த வறுத்த நிலக்கடலையை பறித்து எடுத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். உணவும் தின்பண்டமும் தந்து ஆனந்தித்திருக்கிறார்கள். ஆனால் இந்தச் சகோதரியைவிட்டு சாதி வெளியேறாமல் கருக் கொண்டு உக்கிரத்திற்குச் சென்றிருக்கிறது.

பள்ளிக்கூடம் முடிந்த மாலை நேரமாக இருந்தது. நாங்கள் நண்பர்கள் சேர்ந்து தேவர் விளையில் அம்பு எறிந்து விளையாடிவிட்டு ஆறு மணி வாக்கில், மாங்காய் எறிந்து சாப்பிட்டபடி வருகிறோம். குறிப்பிட்ட நண்பனின் வீட்டருகில் வரவும், அவன் என் கையிலிருந்த பாதி மாங்காயை வாங்கிப் பறித்து ஒரு கடி கடித்துவிட்டு கையில் கொண்டு ஓடுகிறான். நான் அவன் பேரைச் சொல்லி, ‘காலையில குளிக்கப்போவும்ப கூப்புடுடே என்றேன்.

அவனது அம்மா எங்கிருந்தார் என்று தெரியாது, ‘டேய் இங்க வாடா என்று குரல் கேட்கிறது. நானும் நண்பனின் அம்மா அழைக்கிறார் என்று ஓடிப் போகிறேன். அவனது வாசல் படியில் அவர்கள் நின்றபடி உக்கிர கோபத்தோடு என்னை முறைத்துப் பார்க்கிறார்கள். சப்பதமிட்டபடி, ‘நீ எனக்க மகன எப்படிடா கூப்பிட்ட? பேரு சொல்லிக் கூப்பிட்டியா? நீ நாடார் சாதியாக்கும்; நீ இனிமேல் எம் பையன யாமானேணுதான் கூப்பிடணும். இந்த நாய் வேற உன் கையிலிருந்த மாங்காய வாங்கிச் சாப்பிடுது. குளிக்கியதுக்கு உங்கூட எல்லாம் அவன் வரமாட்டான். நாங்க உங்களவிட உயர்ந்த சாதியாக்கும் என்றபடி அவன் கையிலிருந்த மாங்காயின் மீதியை தட்டி எறிந்தார். நான் எதுவும் புரியாதவனாய் அழுகிறேன். சாதி எவ்வளவு விஷம் நிறைந்த பாம்பு என்று அறியாதவனாய் நடுங்குகிறேன். அவன், அவன் அம்மாவுக்குப் பயந்து அவர்கள் முந்தானைக்குப் பின் மறைந்து கொள்கிறான்.

என்னல நிக்கிற? போக வேண்டியதுதானே! இனி கூட்டுக்காரன் அது இதுண்ணு இங்க வரப்பிடாது என்று என்னைத் தள்ளி விட்டார். எனக்கு அழுகையும் கோபமும் எங்கிருந்து வந்ததென்றேத் தெரியாது. அழுதபடியே, ‘உங்க மொவன் எண்ணைக்கும் எனக்க கணக்கு நோட்டப்பாத்துத்தான் வீட்டுக் கணக்கு எழுதுவான். இனி கணக்கு நோட்டுக் கேட்டு எங்க வீட்டுக்கு அவனும் வரப்பிடாது. பரிச்சைக்கு என்னப்பாத்துத்தான் அவன் எழுதுவான். இனி எனக்கிட்ட எதுவும் கேக்கப்பிடாது. நீங்களும் சொல்லிவையுங்க என்றேன். உடனே, அவர், ‘என்ற மோன நான் டியூசனுக்கு விடும்டா என்றார்கள். நான் அழுகையோடே வீடு நோக்கி நடந்தேன்.

வரும் வழியில் என்னுடைய சித்தப்பா தேவசகாயம் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். நான் அழுதபடி வருவதைக் கண்டதும், ‘யான்டா அழுற? யாரு அடிச்சா?’ என்றார். பனம் கள் அருந்துகிற பழக்கம் அவருக்கு உண்டு. அன்றைக்கும் கள் அருந்தியிருந்தார். நடந்ததையெல்லாம் அவரிடம் சொன்னேன். அவர் எனக்குச் சில கெட்டவார்த்தைகளைச் சொல்லி, வெட்டுகத்தியைச் சுழற்றியபடி, ‘இப்படிப் போய் அவளுக்கிட்ட கேழு. நான் பின்னால வாறேன் என்றார்.

நானும் சித்தப்பா சொன்னபடி, அவர்கள் முற்றத்தில் நின்றபடி, ‘சாதிண்ணு சொன்னல்லியாட்டி. சாதி எங்க இருக்குக் காட்டு? உங்க சாதி ………..……….. …………….. ………………… சாதி தானடி என்று திட்டிவிட்டு நான் திரும்பவும் எனது சித்தப்பா உள்ளே நுழைந்தார். அரைமணி நேரம் கெட்ட வார்த்தை அபிஷேகம் நடத்தினார். போதையிலும் நாராயண குரு, இராமகிருஷ்ணர், விவேகானந்தர் அடைமொழிகளையெல்லாம் அள்ளி விட்டார். ஒருசிலர் வந்து அவரைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வு இன்றளவும் என் நெஞ்சை விட்டு மறையவில்லை.

ஆனால் அதிசயம் என்னவென்றால், அடுத்த நாள் காலையில் தட்டான் குளத்திற்குக் குளிக்கப் போவதற்காக என் வீட்டு வாசலில் அவன் வந்து நின்றான். என் அம்மா கொடுத்த மாம்பழத்தை வாங்கிச் சாப்பிட்டான். நாங்கள் தோளில் கை போட்டபடியே குளிக்கப் போனோம். அவன் அப்பா சாலையில் வைத்து எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே போனார். தட்டான் குளக்கரையில் தேங்காய் வெட்டிக் கொண்டு நின்ற என்னுடைய சித்தப்பா, ஒரு இளனியை வெட்டி என்னிடம் தந்தார்.  நாங்கள் இருவரும் மாறி மாறி உறுஞ்சி குடிப்பதை அவர் பார்த்துச் சிரித்தபடி, ‘என்னடே உங்க அம்ம கண்டா திட்டுவாளே!’ என்றார். அவன் மறுபதிலாக, ‘அவ கெடக்கிணா....’ என்றான்.

இன்றுவரை எங்கள் நட்பு தொடர்கிறது. குழந்தைகளுக்கு இடறலாய் இருப்பவர் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் அமிழ்த்திவிடுவது நல்லது என்ற விவிலிய வார்த்தைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. இன்றும் இது போன்ற பெற்றோர்கள் நாடெங்கிலும் சாதி மத விஷமேற்றுபவர்களாய் இருக்கிறார்கள் என்பது உண்மை. சாதி வெளியரங்கமாய் இல்லாவிட்டாலும் அவரவர் மனங்களில் அக்கினியாய் கனன்றுகொண்டுதான் இருக்கிறது. இது மனித நேசத்திற்கு தடைக்கல்லாய் உள்ளது. இது தகர்க்கப்பட வேண்டும்.

(நினைவுகள் தொடரும்....)

 


மார்ச் 2018 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.