தொடர்புடைய கட்டுரை

கடலோரப் பகுதிகளை காக்க பனைமரம்

Dr. பா. சாம்ராஜ்

23rd Feb 2019

A   A   A

கடந்த நவம்பர் கடைசியில் (2017) திடீர் வெள்ளம் மற்றும் “ஓகி புயலினால் குமரி மாவட்டம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கடலோரம் மற்றும் மலைப்பகுதி மக்கள் மிகுந்த துயரத்திற்குள்ளானார்கள். சூரைக்காற்றின் வேகத்தால் உறுதியான, பழமையான மரங்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் வேரோடு சாய்ந்தும் முறிந்தும் விழுந்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டதுமல்லாமல் மின்சார விநியோகமும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள். 

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தார் பாலைவனத்தின் ஒரு பகுதியில் இந்திய – இஸ்ரேலிய கூட்டு முயற்சியோடு பயிரிடப்பட்டு வெற்றிகண்ட ஒலிவமரம் போல் நீண்ட காலம் உறுதியாக நின்று வளரும் தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார மரங்களில் ஒன்றான பனை மரத்தை கடலோரங்களில் அரணாக நட்டு பாதுகாப்பத்தின் மூலம் அவை செழித்து வளர்ந்து மரம் வைத்தவருக்கு இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்காவது நீண்ட காலம் கனிதருவதுடன் பாதுகாப்பு அரணாகவும் விளங்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. மத்திய மாநில அரசுகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பனைமர ஆராய்ச்சி முடிவுகளை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற அறைகூவலை முன் வைக்கிறேன்.

பனை மரம் எத்தகைய வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது. இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள். பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும், உணவல்லாத வேறு முக்கியமான பொருள்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் பனையோலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள், கைப்பணிப் பொருட்கள், மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படுகின்ற பொருட்கள் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயர, அடித்தளமாக விளங்குகிறது..

தமிழர்களின் புனித மரமாக கருதப்படுவதும், தமிழ்நாட்டின் மாநில மரமுமாகிய பனைமரங்கள் 1970-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி தமிழகத்தில் சுமார் 6 கோடி இருந்துள்ளதாகவும். கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி பனை மரங்களின் எண்ணிக்கை 5 கோடியாக குறைந்திருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்திருப்பதாக கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் தெரிவித்திருக்கிறது.

இதன் தாயகம் ஆப்பிரிக்காவாக இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக வளரக்கூடியதும் கடலோர பிரதேசங்களுக்கு உகந்ததுமான மரமுமாகும்..

இன்று உலகளவில் பனையிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒலிவ எண்ணையை போல பனம் பழங்களைக் கூழாக்கி அதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வெண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். மேலும், இவ்வெண்ணெய் வாகன எரிபொருளாகவும் பயன்படுகிறது. 2007 முதல் மலேசியாவில் விற்பனையாகும் அனைத்து டீசலிலும் 5% பனை எண்ணெய் கலக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

4 பானங்கள் - இதிலிருந்து பதநீர் என்னும் சுவை மிகுந்த நீரும், கள்ளு என்னும் பானமும் தயாரிக்கப்படுகிறது.

4 நுங்கு - இது வெயில் காலங்களில் கிடைக்கப்பெறும் ஒரு இயற்கை வெப்ப தணிப்பானாகும்.

4 பனங்கிழங்கு - இதிலிருந்து பெறப்படும் கிழங்கானது நார்ச்சத்து நிறைந்த, சத்துள்ள உணவாகும்.

4 வெல்லம் - இம்மரம் உலகில் காணப்படும் ஒரு வகைச் சர்க்கரைப் பனை மரமாகும். இதிலிருந்து பனைவெல்லம் என்னும் சுவையும் மருத்துவப் பண்பும் உள்ள இனிப்புப் பொருள் தயாரிக்கப்படுகிறது.

4 எண்ணெய் - இம்மரத்தில் இருந்து சமையல் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

4 ஓலைகள் - விசிறியாகவும், நுங்கு விற்பவருக்கு கூடையாகவும், ஒரு காலத்தில் படுக்கும் பாயாகவும் முற்காலத்தில் எழுது ஏடாகவும் பயன்பட்டது.

 

பனை மரத்தின் பிற பயன்கள்.

1. பதனீர், இது உடலை குளிர்ச்சியாக வைப்பதுமல்லாமல் எலும்புகளையும் கல்லீரலையும் பலப்படுத்துகிறது. தமிழக தென் மாவட்டங்களில் தை மாதம் முதல் பனை மரத்தில் இருந்து பதனீர் இறக்க ஆரம்பிப்பார்கள்.

2. ஆடி மாதம் வரை பதனீர் கிடைக்கும். பதனீரில் அடங்கியிருக்கும் சத்துக்கள் சர்க்கரை சத்து, கால்சியம், தையாமின், வைட்டமின் சிநிகோனிக் அமிலம், புரதம் பதனீர் எடுக்காத பனை மரத்தில் இருந்து பனங்காய்கள் வெட்டி எடுக்கப்படும் நுங்கு இனிப்பு சுவைமிக்க நல்ல உணவாகும்.

3. மரங்களில் ஆண்பனை, பெண்பனை என்று இரண்டு வகை உண்டு. பழம் பழுக்காமல் இருந்து முற்றினால் பனங்காய் என்றும் சிறிய அளவில் குறும்பலாக இருந்தால் நுங்கு என்றும் அழைக்கப்படுகிறது.

4. இதன்மூலம் சிறுநீர் பெருக்கி, வாயு தொல்லை, பல்வலி, நாள்பட்ட காய்ச்சலுக்கும் மருந்தாகி உதவுகிறது. உடல் வீக்கம், நெஞ்சு எரிச்சலும், பித்தக்கோளாறுக்கும், கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் வீக்கத்தையும் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

பனை மட்டைகளை வீடு கட்டவும், வேலிகள் அமைக்கவும் பயன்படுத்தினார்கள். மட்டையில் இருந்து நார் எடுத்து கயிறாக்கினார்கள். நாரை கட்டில் கட்டவும், பனை மரத்தினை கட்டிலின் சட்டங்களாகவும் செய்தார்கள். வீடுகள் கட்டவும் ஜன்னல்கள் செய்யவும், வீட்டு நிலைகளுக்கும் பனை மரங்களை பயன்படுத்தி வந்தார்கள்.

பனை மரத்தின் குருத்தோலைகளை வீடுகளில் நடைபெறும் விஷேங்களுக்கும் தோரணங்களாகவும் பயன்படுத்தி வந்தார்கள். இன்றும் விசிறிகள், தொப்பிகள், கலைப்பொருட்கள் செய்து வருகிறார்கள்.

பனை மரம் 30 அடி உயரம் வரை நேராக செங்குத்தாக வளரும். 1 முதல் 3 அடி வரை சுற்றளவு கொண்டது. பனம்பழத்தில் உள்ள கொட்டையை (விதையை) மண்ணில் புதைத்து அது வளர்ந்து பருவம் அடையும் வரை பல நிலைகளாக பிரித்துள்ளனர். 22 நாட்கள் விதைப்பருவம் 22 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கிழங்கு பருவம். 3 முதல் 9 மாதம் வரை நார் கிழங்கு பருவம். 4 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை பீலிப்பருவம். 2 முதல் 10 ஆண்டுகள் வரை வடலிப்பருவம்.

"இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்" என்ற வாசகம் நடமாடும் கறுத்த யானைக்கு மட்டுமல்ல என்றும் நிலையாக கறுத்து உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும் பொருந்தும்.

தார் பாலைவனத்தில் ஒலிவமரம் பல்லாண்டு நின்று பயன்தருவதுபோல தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் பனை மரம் ஒரு இயற்கை அரணாக இருப்பதுமல்லாமல் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து பயனையும் தரும் என்பதில் எவ்வித ஜயப்பாடும் இல்லை.

நான் ராஜஸ்தானிலுள்ள மத்திய பாலைவன மண்டல ஆராய்ச்சி நிறுவனம் (CAZRI) ஜோத்பூரில் பணிபுரிந்தபோது, காற்றுத்தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு அரண்கள் முறையாக அமைத்து பண்ணைக்காடுகள் உருவாக்கி பசுமைப்படுத்தியதையும், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இராதாபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் காற்றுத்தடை பாதுகாப்பு அரண்கள் அமைத்திருப்பதை பார்வையிட்டிருக்கிறேன், 1995 ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டில் உள்ள டானிடா (DANIDA) திட்டத்தின் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அங்கத்தினராகச் செயல்பட்டு தொழில்நுட்ப தணிக்கை செய்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தோம். அந்த அறிக்கையில் பனை போன்ற நாட்டுமரங்களின் சிறப்புகளையும், பயன்களையும் கூறியுள்ளோம். மண்வள பாதுகாப்பு மற்றும் காற்றுதடை முறைகளை பின்பற்றி அதை சரிவர பராமரிக்க தவறினால், அதனுடைய விளைவு இது போன்ற ஓகி புயலாகும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. “இயற்கையை அழித்தால், இயற்கை நம்மை அழித்துவிடும்!

நலிவுற்ற காடுகளையும், தரிசு நிலங்களையும் மேம்படுத்த மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு, காற்றரிப்பு தடுப்பு, நீர் சேமிப்பு முறைகள் முதலிய மேம்பாட்டு திட்டங்களை “நீர்ப்பிடிப்பு பராமரிப்புப் பகுதி வாரியாக செயல்படுத்த வேண்டும். வளரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இயற்கை வளமான மண் மற்றும் நீரைப் பாதுகாத்து என்றும் நிரந்தரமாக பயன்படுத்த வழிகோல வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோம். நாட்டில் ஆண்டுதோறும் தரிசு நிலங்கள் அதிகமாகிக் கொண்டும், வருடாவருடம் வறட்சியும், வெள்ளமும், புயலும் மற்றும் இயற்கைச் சீற்றங்களும், காலநிலை மாற்றங்களும் மக்களை பயமுறுத்தியும் வருகின்றன.

இவற்றையெல்லாம் சமாளித்து, வரும் ஆண்டுகளில் நமது எதிர்கால சந்ததிகள் நன்றாக வாழ முயற்சிகள் எடுப்பதில் முதல்படியாக தமிழ்நாட்டில் பனைமரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை கடலோர பிரதேசங்களில், பயிர் சாகுபடி செய்ய தகுதியற்ற நிலங்களிலும் மணற்பாங்கான நிலங்களிலும், பாறை நிலங்களிலும் வளர்ப்பதினால் “வருமுன் காப்போம் என்ற கூற்றின்படி, சரியான விகிதத்தில் நட்டு நன்கு பராமரித்து நம்மையும், நமது பாரதத்தையும் மற்றும் வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்கவேண்டியது நம்மேல் விழுந்த தலையாய கடமையாகும். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பாலைவன ஆராய்ச்சி நிறுவனம் என்ற ஒரு அமைப்பை செயல்படுத்தி வருவதுபோல “கடலோர மணல்திட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் குமரி கடலோர கிராமத்தில் பனை மரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறுவினால் இங்குள்ள வளர்ச்சி திட்டங்களாகிய துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைப்பதற்கு இது ஒரு ஊன்றுகோலாக அமையும்.  “பனை மரம் நடுவோம். இயற்கை பேரிடரிலிருந்து தப்பித்துக் கொள்வோம்.

 


2018 ஏப்ரல் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.