தொடர்புடைய கட்டுரை


மலைக்காடுகளும் கடலோர பகுதிகளும்

Dr. பா. சாம்ராஜ்

12th Mar 2019

A   A   A

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச்சூலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

உலகில் நாம் வாழ்கின்ற பூமி இன்று மனிதனுடைய செயல்பாடுகளால் பாழாகி கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மலைகளிலுள்ள நலிந்த காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதின் விளைவாக, இந்தியாவின் கடலோர சூழல் அமைப்பு பலவீனமாகிக் கொண்டே போகிறது. அடர்ந்த காடுகளுள்ள மலைகளிலிருந்துதான் பெரும்பாலான நீரோடைகளும், ஆறுகளும் உற்பத்தியாகின்றன. நீர்மின்சாரம் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் காடுகளிலிருந்து புறப்படும் நீரே முக்கிய வாழ்விடமாகும்.

மேலும் அது இயற்கையின் சீற்றங்களாகிய திடீர் வெள்ளப்பெருக்கு, மண் அரிமானம், நிலச்சரிவுகள், நிலநடுக்கங்கள், புயல்காற்று, சுனாமி, எரிமலை வெடித்தல் போன்றவைகள் ஏற்பட வழிவகுக்கிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தை ஓகி என்ற சூறாவளிப் புயல் நவம்பர் 30, 2017 அன்று தாக்கிய கோர சம்பவம் நம் கண்முன் நிற்கிறதல்லவா? தீபகற்ப இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மேலும் இது போன்ற இயற்கைப் பேரிடர்கள் நடைபெறாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் மணல் மேடுகளை ஸ்திரப்படுத்தி பசுமைப்படுத்தும் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறான பணிகளை மேற்கொள்ளும்போது முடிந்தவரை இயற்கையோடு குறுக்கிடாமல் மலைக் காடுகளை பேணிகாத்து கடலோர பகுதிகளில் பாதகமற்ற திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம்.

இந்தியாவிலுள்ள தார் பாலைவனப் பகுதிகளை சோலைவனமாக மாற்றும் நோக்கத்தில் 1956 ஆம் ஆண்டில் மத்திய பாலைவன மண்டல ஆராய்ச்சி நிறுவனம் (CAZRI, Jodhpur) ஆரம்பிக்கப்பட்டு, அது வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை நான் 1968 முதல் 1970 வரை அங்கு பணிபுரிந்ததால் நன்கு அறிவேன்.      

அதேப்போல், மத்திய மண்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSWCRTI, Dehra Dun) துணை மையம் தெற்கு இந்திய மலைகளில் நிகழக்கூடிய இயற்கையின் சீற்றங்களுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் ஊட்டியில் 1956-ல் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.            

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை சீற்றங்களினால் குறிப்பாக சுனாமி மற்றும் ஓகிப்புயல் ஆகியவற்றால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானதால், இந்தியாவின் கடற்கரை மணல் திட்டுகளை காப்பாற்றி பசுமைப்படுத்தும் நோக்கத்தில் தாமதமின்றி ஒரு ஆராய்ச்சி மையத்தை ஜோத்பூர், ஊட்டி மாதிரியில் நிறுவினால், அது சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து தீபகற்ப இந்தியாவின் எல்லா கடற்கரை மாநிலங்களிலுமுள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வழிகாட்டும் என்பதை நான் ஒரு வனவியல் விஞ்ஞானி என்கிற முறையில் பரிந்துரை செய்கிறேன்.        

தமிழ் நாட்டின் கடற்கரை நீளம் ஏறக்குறைய 1000 கி.மீ வரை நீண்டு, அதிகமான வறட்சியுள்ள உலர் மண்டலங்களிலேயே அமைந்துள்ளது. விவசாயத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பான வனமேம்பாட்டுப் பணிகள், மழைநிறைவாக இல்லாத இந்தப் பகுதிகளில் உற்பத்தி அளவை அதிகரிக்கும் சூழலியலைத் சமநிலைக்கு கொண்டு வரவும் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களிடையே இவ்வித விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கடலோர மணல்மேடுகளை ஸ்திரப்படுத்தி, பசுமைப்படுத்தும் பணியைப் பற்றிய அறிவை இந்தக் கட்டுரை வழங்குகிறது.  

இந்தியாவில் கடலோர பகுதியின் நீளம் 6,090 கி.மீ என்றும், இதில் மணற்பாங்கான பகுதி 8.4 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இக்கடலோர பகுதிகள் கிழக்கிலும் மேற்கிலுமாக அமைந்துள்ளது. இவை பெரும்பாலும் உவர் நிலங்களாகவும், வடிகால் வசதியின்மையால் நீர் தேங்கிய சதுப்பு நிலங்களாகவும் மாறி விவசாய உற்பத்தியை பெரிதும் பாதித்து உள்ளன. இவ்வாறு பாதிப்படைந்த பகுதிகளாக சுமார் 13 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன.

இதன் பரப்பு மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. போதிய மழையின்மையாலும், அதிக வெப்பத்தாலும் காற்றின் அதிவேகத்தாலும் களர் உவர் நிலங்கள் உருவாகியுள்ளன. இங்கு கார அமிலத் தன்மை 7.8 முதல் 9.7 வரையும் அங்ககப் பொருள் 0.03 % முதல் 0.06 % வரையும் அதிக அளவில் சோடியம் உப்பும் உள்ளது. இது ஏறத்தாழ 7 மில்லியன் ஹெக்டேர் பரப்பிற்கு பரவி உள்ளது. இது விவசாயத்திற்கு தகுதியற்ற பகுதியாக உள்ளதால் பயிர்கள் குன்றிய வளர்ச்சியுடனும் காய்ந்தும் காணப்படுகின்றன. இப்பிரச்சனைக்குரிய நிலங்களுடன் காற்றினால் ஏற்படும் மணல் மேடுகளாலும் ஒடைகளாலும் பல பகுதிகளில் தரிசு நிலங்கள் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் முடிந்தவரை தகுந்த நம் நாட்டு மரங்களை தேர்ந்தெடுத்து மக்களின் ஒத்துழைப்பால் நட்டு பராமரித்தால் கடலோர வனப்பரப்பை அதிகரித்து ஓகிப்புயல், சுனாமி போன்ற பேரிடர்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுவதோடு விவசாய நிலங்களையும் வளப்படுத்தலாம்.

இதற்கு அரசு செயல்படுத்தி வரும் சமூக நலக்காடு வளர்ப்பு, கூட்டு வன மேலாண்மை போன்ற திட்டத்துடன் தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால் இது ஒரு வெற்றிகரமான திட்டமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 


2018 மே மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.