தொடர்புடைய கட்டுரை


கன்னியாகுமரி ‘உலகின் தோட்டக்கலை கிண்ணம்’

Dr.R. ரிச்சர்ட் கென்னடி

13th Oct 2018

A   A   A

உலகின் சர்க்கரைக் கிண்ணம் (Sugar bowl of the world) என கியூபா தேசம், அதன் உலக தரமான, உயர்வான சர்க்கரை உற்பத்திக்காக சிறப்பாக அறியப்படுகின்றது. அவ்வண்ணமாக தோட்டக்கலை வளங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், விஞ்ஞானிகளால் தோட்டக்கலை கிண்ணம் (Horticultural bowl of the world) என சிறப்பித்து போற்றப்படுகின்றது. “என்ன தோட்டக்கலை வளம் இல்லை இந்த மண்ணில்?” என இல்லாதவைகளை பட்டியல் போட இயலாத வண்ணம் தோட்டக்கலை வளங்கள் அனைத்தும் கொலுவிருக்கும் அற்புத பூமியாக இத்தென்கோடி திகழ்கிறது. உலகிலேயே அனைத்து தோட்டக்கலை அம்சங்களும் நிறைந்திருக்கும் இம்மண் இந்தியாவின் பாதமாக, புனித மண்ணாக ஆன்மீகவாதிகளால் கருதப்படுகிறது. தோட்டக்கலை வளங்களான பழங்கள், காய்கறிகள், பூக்கள், அலங்காரச் செடிகள், மணமூட்டும் பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள் என அத்தனை வளங்களும் இம்மாட்டம் முழுவதும் வியாபித்து கடவுளின் பூமியாக (God’s land), இயற்கை காணுமிடமெங்கும் வியாபித்து அரசாளுகின்றது.

மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளை கொண்ட குமரி, அனைத்து வகை தோட்டக்கலை பயிர்களின் உற்பத்திக்கும் ஏற்ற பூமியாக விளங்குகிறது. இங்கு மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிபூமி என மூன்று வகை நிலபரப்புகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள ஏழு தோட்டக்கலை மண்டலங்களில் குமரி அதிக மழைபொழிவு பெறும் மண்டலமாக (High Rainfall zone) வகைப்படுத்தப் பட்டுள்ளது. தமிழக மாவட்டங்களில் இரண்டு பருவமழை காலங்களிலும் அதிக மழை பெறும் மண்டலமாகத் தனி சிறப்பை இது பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் (அக்டோபர் – டிசம்பர்) 594 மிமீ மழை 24 மழை நாட்களில் பொழிகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் (ஜூன் – செப்டம்பர்) 534 மிமீ மழை 27 மழை நாட்களில் பொழிகிறது. மட்டுமின்றி குளிர் காலங்களில் (ஜனவரி-பிப்ரவரி) 47 மிமீ மழை மூன்று மழை நாட்களில் பொழிகிறது.

ஆக இம்மாவட்டத்தின் சராசரி வருட மழை பொழிவான 1465 மிமீ 64 மழைநாட்களில் பொழிகிறது. இம்மண்டலம் கடல் மட்டத்தினின்று (அரபிக்கடல்) 600 மீட்டர் உயரம் வரை (மேற்கு தொடற்சி மலைத்தொடர்) பரந்து விரிந்துள்ளது. இம்மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பநிலை 36OC (34-38OC) அளவிலும், குறைந்தபட்சம் 21OC (20-22OC) அளவிலும் மாறுபடுகிறது. காற்றின் ஈரப்பதம் 60 – 100 சதம் வரை நிலவுகின்றது. அதிக ஈரப்பதம் நிலவும் காலங்களில் புழுக்கம் நிரம்பி வியர்வை மிகுதியாக வெளிப்படும். இம்மாவட்டதிற்கு அரணாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பல்லுயிர் பெருக்கம் (Biodiversity of flora and fauna) நிரம்பிய வளமான பகுதியாக திகழ்கிறது. மேலும் இரு பருவ காற்றுகள் மூலமும் மழையை பெற்றுத் தரும் அரணாகவும் இது திகழ்கிறது. இது உலக விஞ்ஞானிகளால் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அபூர்வ இனங்கள் நிரம்பிய முக்கிய மண்டலமாக (Hot spot) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் வடமேற்கு பகுதிகளில் ஈரப்பதமும், மழைப்பொழிவும் மிகுந்து காணப்படுவதால் மணமூட்டும் பயிர்கள் சாகுபடி அதிகமாக மேற்கொள்ளப் படுகிறது. மரவகை வாசனைப் பயிர்களான கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, சர்வசுகந்தி, குடம்புளி போன்றவையும், நல்லமிளகும் மலைப்பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப் படுகின்றன. கிராம்பு உற்பத்தியில் குமரி மாவட்டம் இந்தியாவிலேயே முதலிடம் பெறுகிறது. மொத்த இந்திய கிராம்பு உற்பத்தியில் 60 விழுக்காடுக்கும் மேல் குமரியில் உற்பத்தியாகிறது. உலக அளவில் தரமும் அதிக மகசூலும் கொண்ட கிராம்பு குமரியில் விளைகிறது. இதனால் இம்மண்டலம் உலகின் கிராம்பு தேசம் என சிறப்பித்து கூறப்படுகிறது. மேலும் மலைப்பகுதிகளில் இரப்பர், வாழை, அன்னாசி, ரம்பூட்டான், துரியன், மங்குஸ்தான், ரோஸ் ஆப்பிள், அத்தி, முட்டை பழம், ஐவிரலி போன்ற பழப்பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இரப்பர், பாக்கு, தென்னை போன்ற பயிர்கள் மலைகள் மற்றும் சமவெளிகளிலும் பயிரிடப்படுகின்றன.

சமவெளிகளில் காய்கறிகள், வெப்பமண்டல பழங்கள் (மா, வாழை, பலா, சப்போட்டா, கொய்யா, பப்பாளி), மலர்கள் (மல்லிகை, முல்லை, ரோஜா, அரளி, கோழிக்கொண்டை, சாமந்தி, கேந்தி, கெலிக்கோனியா, அழகீடுகள், ஆந்தூரியம்) போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள மருந்துவாழ் மலையில் அபூர்வ மூலிகைகளும் (பொன்குறண்டி, சிற்றரத்தை, இன்சுலின் இலை, திப்பிலி, மலைஇஞ்சி), நறுமணமூட்டும் பயிர்களும் (எலுமிச்சைப்புல், இஞ்சிப்புல், வெட்டிவேர், சந்தனம். . .) போன்றவைகளும் மண்டிக் கிடக்கின்றன. காய்கறிகளில் அபூர்வ இனங்களான பத்தியத்திற்கு உதவும் வழுதனை, கஸ்தூரி வெண்டை, காந்தாரி மிளகு, சிகப்பு கீரை, சிகப்பு பயறு, சாம்பார் வெள்ளரி, நெய் மற்றும் சாம்பார் கும்பளங்காய், பன்றிபுடல் போன்ற இனங்கள் இம்மாவட்டத்திற்கே உரித்தான சிறப்பான ரகங்களாகும். மலர் பயிர்களில் அழகீடுகள் மற்றும் ஆந்தூரியம் ஆகியன காற்றில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும் பகுதிகளில் சிறப்பாக உற்பத்தியாகின்றன.

அதிசயமே வியந்துபோகும் அதிசயம்:

இம்மண்ணில் தோட்டக்கலை அதிசயங்கள் அபரிமிதமாக மண்டிகிடக்கின்றன. உலக தோட்டக்கலை விஞ்ஞானிகளால் வியந்து நோக்கப்படும் இம்மண்ணின் இடைப்பருவ மா (Off season Mango) விளைச்சல் பன்னெடுங்காலமாகவே உலகிற்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. முக்கனிகளில் முதல் கனியாகிய மா ஒரு வெப்பமண்டலப் பயிர். இது வருடத்திற்கு ஒரு முறை (ஏப்ரல் – ஜூன்) மட்டுமே உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகிறது. ஆனால், குமரியின் இயற்கை வளங்களும், பூமத்திய கோட்டுக்கு அருகாமையும் இடைப்பருவ மா உற்பத்தியை (நவம்பர் – ஜனவரி மாதங்களில்) கொடுக்கின்றன. அதாவது இரு முக்கிய பருவங்களுக்கு இடையே ஒரு பருவம் கூட மா இங்கு விளைகின்றது. சில பகுதிகளில் ஆண்டு முழுதும் கூட மா விளைகின்றது. இந்த புதுமை உலகிலேயே குமரியில் மட்டுமே நிகழும் அதிசயமாகும். இந்த இடைப்பருவத்தில் உலகில் வேறெங்கும் மா கிடைப்பது அரிதாகையால் இவை பலமடங்கு உலக சந்தையில் விலை பெறுகின்றன.

மா மட்டுமின்றி பலா, மிளகு, கிராம்பு போன்ற பயிர்களிலும் இத்தகைய இடைப்பருவ காய்ப்பு நிகழ்கின்றது. மேலும் இம்மண்ணின் மா ரகங்களான செங்கா வருக்கை, திருவரம்பு, கற்கண்டு, பொட்டல், சூரன்குடி, செட்டி ஒட்டு, கப்பை, கலயம், மயிலாப்பூர் போன்ற அபூர்வ ரகங்களில் பெரும்பாலான ரகங்கள் இன்று வெட்டப்பட்டு அழிந்து வருகின்றன. வருங்கால சந்ததிகளுக்கு இவை ஏட்டில் மட்டுமே இருக்கும் பெயர்களாக மாறி வருகின்றன. குமரியின் வாழை ரகங்கள் வேறு எங்கும் விளைவிக்க முடியாதவை. விளைந்தாலும் இந்த சுவையும் தரமும் பெற இயலாது. மட்டி, ஆனைக்கொம்பன், நைவேத்திய கதளி, நெய் கதளி, கருந்துழுவன், கருமட்டி, பூங்கொள்ளி, கூம்பில்லா வாழை, பனை வாழை, சிங்கன் வகைகள் (குதிரைவால், சிங்கவால்) என பல்வேறு வாழை இனங்கள் இம்மண்ணின் சிறப்பை பறைசாற்றி வருகின்றன.

பலாவில் தேன் பலா, வேர் பலா, செம்பருத்தி வருக்கை, முண்டன் பலா, முட்டம் பலா, முளகுமூடு வருக்கை, தாமரை வருக்கை போன்றவற்றில் பல வழக்கொழிந்து விட்டன. ’ஏமான் வீட்டு சக்கை’, இளம் ஆரஞ்சு நிறத்தில் கையளவு நீளம் மற்றும் அகலமுடைய சுளைகள், அரை விரலளவு கெட்டியுடன் (Thickness) அடியில் தேங்கிய தேன்துளிகள் தேங்கி இருக்கும். ஒரு சுளை சாப்பிட்டாலே வயறும் மனதும் நிரம்பும் அபூர்வ சுளைகள் அவை. இன்று காணாமல் போன இந்த அபூர்வ ரகத்தை மீட்டெடுக்க முடியுமா என்பது என் மனதில் அவ்வப்போது வட்டமிட்டு வேதனைப்பட வைக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

கிளைக்கும் தென்னை, அதிசய வாழைகள் (இருகுலை வாழை, இருபூ வாழை, குட்டை வாழை, தண்டு வழி குலை), முண்டன் பலாவின் அபூர்வ விஞ்ஞானம், அதிசய பூக்கள், அபூர்வ இன தாவரங்கள், ஆண்டு தோறும் வாவுபலி பொருள்காட்சியில் அணிவகுக்கும் தோட்டக்கலை விநோதங்கள் என இம்மண்ணின் தாவர அதிசயங்களில் கடவுளின் வள்ளல்தன்மை மிளிர்கிறது. அளவில்லா தோட்டக்கலை வளங்களை வாரி வழங்கியிருக்கும் இறைவன் இம்மாவட்ட மக்களுக்கு அதிகமாக கொடுத்திருக்கும் அறிவினாலும் இப்புதுமைகளுக்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனை அதிசயங்களும் உலகை அதிசயிக்க வைக்கின்றன. வருங்கால சந்ததி இக்கட்டுரையில் பொதிந்துள்ள ரகசியங்களுக்கு விடைதேடி கண்டுபிடிக்க முடிந்தால் அது உலகிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பது திண்ணம்.

 


மார்ச் 2017 அமுதம் இதழில் வெளியானது..

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.