கலைஞருக்கு தமிழ்பயிற்றுவித்த இலக்குவனார்

தமிழ்வானம் செ. சுரேஷ்

17th Sep 2018

A   A   A

”சலுகை போனால் போகட்டும் – என்

அலுவல் போனால் போகட்டும்

தலைமுறை ஒரு கோடி கண்ட – என்

தமிழ் விடுதலை ஆகட்டும்”

என்ற புரட்சிக்கவிஞரின் பாட்டு இலக்கணத்திற்கு இலக்கியமாகவும் தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் விளங்கியவர் தான் ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்’ என்று போற்றப்படும் பேரா. சி. இலக்குவனார். நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும் உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளி பேராசிரியர் சி. இலக்குவனார்.

”என் வாழ்க்கையே தமிழ்நலம் நாடிய போராட்டக்களம் தான்” என பேராசிரியரே ‘என் வாழ்க்கைப்போர்’ என்னும் தம் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். புகழ் வாய்ந்த தமிழறிஞர்களையும், நாட்டுத்தலைவர்களையும் கண்டுள்ள தமிழ் உலகில் மொழி காக்கும் போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர். சி. இலக்குவனார் அவர்கள்தாம். கட்டுக்கடங்காத தமிழார்வமும் பொங்கி எழும் பைந்தமிழ் எழுச்சியும் பேராசிரியரின் மாணவ வாழ்க்கையையே போர்க்களமாக அமைத்தது.

பேரா. சி. இலக்குவனார் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம், வாய்மேடு என்ற சிற்றூரில் மு. சிங்காரவேலு, இரத்தினம் அம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 17-11-1909 இல் பிறந்தார். பெற்றோர் அவருக்கு சூட்டிய பெயர் இலட்சுமணன். தமிழர் தலைவர் தந்தை பெரியார் என்ற நூலின் ஆசிரியர் அறிஞர் சாமி சிதம்பரனாரின் அறிவுறையை ஏற்றுத் தன் பெயரை இலக்குவன் என்று மாற்றி தமிழர்க்குப் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்தினார். வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும், கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் பயின்றார். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல் வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாக இருந்தது. தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று அவரது தாயார் விழைந்தமையால் உயர்நிலைப் படிப்பை படித்து முடித்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் கல்வி கற்றுத் தேர்ந்தார். பணியில் அமர்ந்தபின் படித்து B.O.L., M.O.L., M.A பட்டங்களைப் பெற்றார். தொல்காப்பியம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

1936 ஜூன் மாதத்தில் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். பொதுவாழ்வில் வைரவிழா கண்ட கலைஞர். மு. கருணாநிதி இவரிடம் தமிழ் பயின்றார். ‘தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர் பேரா. சி. இலக்குவனார்’ என்று தமது தன் வரலாற்று நூலாகிய நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

1955 – 56 ஆம் கல்வியாண்டில் திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 1956 முதல் 1958 வரை ஈரோடு காசனக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர், 1958 முதல் 1961 வரை நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர், 1961 முதல் 1965 வரை மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர், 31-12-1970 வரை நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாகும். இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்திலும் தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை.

மாணவர்களிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியமை, இவர் மாணவர்களை புரட்சிக்குத் தூண்டுவதாக கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது. 1944 இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது இவரிடம் தமிழ்பயின்ற இன்றைய இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லக்கண்ணு இவரது அஞ்சா நெஞ்சத்தையும் சிறப்பாக பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறி வந்த நிலையை மாற்றி ‘உள்ளேன் ஐயா’ எனக்கூற வைத்தவரும், பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லக்கண்ணு அவர்கள் கூறுகிறார்.

முனைவர் கி.வேங்கட சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, கவிஞர் நா. காமராசன், கவிஞர் இன்குலாப், சேடப்பட்டி முத்தையா ஆகியோர் இவரிடம் தமிழ் பயின்ற மாணாக்கர் ஆவர்.

சங்க இலக்கியம், இலக்கியம், திராவிடக்கூட்டரசு, குறள்நெறி, Dravidan Fedaretion, Kural Neri ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி ஆசிரியர், வெளியீட்டாளர் பொறுப்பு ஏற்று, அவை மூலம் தம் கொள்கைகளைப் பரப்பினார். தமிழ்ப் பேராசிரியர்களில் தமது வாழ்க்கை முழுவதும் இதழ் வெளியீட்டுப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு மொழிக்கென தியாகம் செய்தவர் இலக்குவனாரே ஆவார்.

மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறை தலைவராகப் பணிசெய்த போது 1965 ஆம் ஆண்டு மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக இருந்தது. அதற்கு இலக்குவனாரே மூலக்காரணம் என்று குற்றம் சாட்டி காவல்துறையினர் 1-2-1965, 1-5-1965 நாட்களில் இரண்டுமுறை கைது செய்தனர். அவருடைய அச்சகமும் வீடும் சோதனையிடப்பட்டன. புத்தகங்களும் பொருள்களும் காவல்துறையால் எடுத்துச்செல்லப்பட்டன. அதனால் மதுரை தியாகராசர் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.

தமிழ் மொழியைக் காப்பதற்கும் வளர்ப்பதற்கும் தமிழ்க்காப்புக் கழகம் நிறுவினார். அதன் சார்பில் மாணவர்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைப்பெயர்களைத் தமிழில் எழுதுமாறு கோரினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தமிழியக்கம் வெளியிட்டுள்ள கொள்கைகளையே இக்கழகத்தின் குறிக்கோள் ஆக்கினார். பாரதிதாசன் இக்கழகத்தின் செயல்முறைகளைப் பாராட்டினார்.

7-1-1963 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் தத்துவப்போர் என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா பேசினார். அப்போது அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் இலக்குவனார் பேசுகையில் விலைவாசிப் போராட்டம் தேவையான ஒன்று தான். அதைவிட முக்கியமாக இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுப்பதற்குரிய போராட்டங்களைத் தொடங்க வேண்டும் என்று கோரினார். நல்ல கருத்து, பொதுக்குழுவைக் கூட்டிப் போராட்டத் திட்டம் வகுப்பேன் என்று அறிஞர் அண்ணா அவருடைய கோரிக்கையை ஏற்றுப் பேசினார். அதன்படியே சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆட்சிமொழிச் சட்டப் பிரிவை எரித்துப் பலரும் சிறை சென்றார்கள். மாணவர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு காரணமாகவும், அதற்கு தலைவராகவும் இருக்கிறார் என்றும், அமைச்சர்களைக் கொல்ல சதி செய்தார் என்றும் 14 குற்றச்சாட்டுக்களைக் கூறியும் 1-2-1965 இல் காவல்துறையினரால் இலக்குவனார் கைது செய்யப்பட்டார்.

இலக்குவனார் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963 இல் முனைவர் பட்டப்பேற்றிக்காக Tholkappiyam in English with Critical Studies என்னும் ஆய்வேட்டை அளித்து 1963 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும் காலந்தாழ்ந்து 53 ஆவது அகவையில் இப்பட்டத்தை இவர் பெற்றதும் தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ந்து போற்றின. குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டு விழாக்கள் நடந்தன. இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற போது, தமது அயல்நாட்டு சுற்றுபயணங்களின் போது இந்நூலை போப்பாண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக வழங்கினார்.

இலக்குவனாருக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்து குடும்ப வாழ்வுக்கும், தமிழ்த் தொண்டுக்கும் பெருந்துணை செய்தவர்கள் மலர்கொடி, அவருடைய தங்கை நீலகண்டேசுவரி என்ற பெருமைக்குரிய பெண்மணிகள் ஆவர். இவர்களுக்கு ஆறு ஆண்மக்களும் ஐந்து பெண்மக்களும் பிறந்து பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுள் பொறியாளர் திருவேலன், முனைவர் மறைமலை, ஆட்சித்தமிழ் அறிஞர் திருவள்ளுவன் மூவரும் தந்தையின் தொண்டு, பேச்சு, எழுத்து மூன்றையும் போற்றிப் பேணி பரப்பி வருகிறார்கள்.

பேரா. வையாபுரிப் பிள்ளையின் திருக்குறள் பற்றிய தவறான கருத்துக்களை அவர் வாழ்ந்த காலத்திலேயே மறுத்து முறையான கருத்துக்களை நிலைநாட்டிய பெருமை இலக்குவனாரையே சாரும். ‘என்னை உருவாக்கியதில் பெரும்பங்கு திருக்குறளுக்கு உண்டு’ என உள்ளத்தால் உரைத்தவர் இலக்குவனார்.

இவர் முத்தமிழ்க் காவலர், செந்தமிழ்மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர்தளபதி, தமிழ் காத்த தானைத்தலைவன், இலக்கணச்செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச்செம்மல் என்றும், மேலும் பல பட்டங்களையும் தமிழ்கூறும் நல்லுலகு அளித்து சிறப்பித்துள்ளது.

இலக்குவனார் எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள் - 1933), மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்), துரத்தப்பட்டேன் (செய்யுள்), தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்), என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி - 1972), அமைச்சர் யார்? (ஆராய்ச்சி – 1949), திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை), தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை), மாமூலனார் காதற்காட்சிகள், வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி), வள்ளுவர் வகுத்த இல்லறம் (ஆராய்ச்சி), இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், கர்மவீரர் காமராசர், அண்ணாவிற்கு பாவியல் வாழ்த்து, பழந்தமிழ் சங்க இலக்கியச் சொல்லோவியங்கள், தமிழ் கற்பிக்கும் முறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் (ஆராய்ச்சி – 1956) உட்பட 22 தமிழ் நூல்களும், 10 ஆங்கில நூல்களும் இவர் எழுதி வெளிவந்துள்ளன. தொல்காப்பியர் நாள், திருவள்ளுவர் நாள், இளங்கோ அடிகள் நாள், ஔவையார் நாள் என்று நால்வருக்கும் அரசு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என்பது இலக்குவனாரின் நோக்கமாகும்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் கொள்கை அடிப்படையில், உறுபசியும், ஓவாப்பிணியும் செறுபகையும் நீங்கிய மக்களினத்தை உருவாக்கவும், மொழிவழி மாநிலங்கள் முழுத் தன்னாட்சி பெற்று முழு உரிமையுடன் சாதி மத வர்க்க வேறுபாடு அற்ற மக்களாட்சி சமநிலைக் குடியரசுகளாய் இணைந்து வாழும் வன்மைமிக்க பாரதக் கூட்டரசை உருவாக்கவும், அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகட்கே முதன்மை என்ற அடிப்படையில் மொழிகளின் சம உரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம்பெறவும், காலத்துக்கேற்ப, மரபுகெடாது தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும், ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே இனி எனது வாழ்நாட் பணியாகும் என இலக்குவனார் உறுதிபட உரைத்துள்ளார்.

தமிழும் தமிழர் முன்னேற்றமுமே தம் மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் வாழ்ந்த இலக்குவனார் 3-9-1973 அன்று உலகை விட்டு மறைந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினரால் 26-11-2009 அன்று இலக்குவனாருக்கு நூற்றாண்டு விழா நடத்தி சிறப்பித்தார்கள். விழாவில் பேரா. அன்பழகன், ஔவை நடராசன் முதலான அறிஞர் பெருமக்களும் கலந்துக் கொண்டனர். நாகர்கோவிலில் குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் 2012 ஆம் ஆண்டில் இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் விளங்கி வாழ்ந்து காட்டிச் சென்றுள்ள பேரா. சி. இலக்குவனாரின் பிறந்த நாளை ‘தமிழ் எழுச்சி நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென்பதே தமிழ் அமைப்புகளின் கோரிக்கையாகும்.

 


ஜூன் 2017 அமுதம் இதழில் வெளியானது…



Error
Whoops, looks like something went wrong.