’இன்சைட்’ இல்லாமல் போனால்..?

Dr. பா. நாகராஜன்

13th Aug 2018

A   A   A

பொதுவாக என்னிடம் வரும் நபர்களுள் நிறைய பேர், தான் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது புரியக் கூடிய வாய்ப்பு இல்லாதோராக இருப்பர். மனவியலில் ’இன்சைட்’ எனும் ஒரு பகுதி உள்ளது. அதன் பொருள் என்னவென்றால், ஒரு நபர் தன் உள்ளும் புறமும் அறிந்திருத்தலே. அதாவது தான் என்ன நினைக்கிறோம், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் இவற்றை எவ்வாறு உணர்கிறோம் என்பது மட்டுமல்லாது தன்னை சுற்றி இருக்கும் காலம், இடம், நபர், பொருள், ஏவல் அத்தனையையும் உணர்ந்து செயல்படுவதேயாகும். இந்த ‘இன்சைட்’ இல்லாதோருக்கு சாத்தியக்கூறு என்பதோ அல்லது காரணம் என்பதோ தெரிவதற்கு வாய்ப்பில்லை என்பதாம். இப்பொழுது இக்கட்டுரை எழுத விளைந்ததன் காரணமே ஒரு வாரத்திற்கு முன்பு என் கலந்தாலோசனை அறைக்கு வந்த பெற்றோர்கள் தான்.

மருத்துவமனை வைத்திருக்கும் ஒரு மருத்துவரின் நெருங்கிய நண்பர்கள் அவர்கள். அந்த மருத்துவர் என்னிடம் எனக்கு மிக வேண்டியவர் என்று கூறியதால் அதிக சிரத்தை எடுத்து சிகிட்சை தர வேண்டியிருந்தது.

குறிப்பிட்ட வாலிபர் ஓர் பிரசித்தி பெற்ற கல்லூரியில் பி.டெக் முடித்த அதிக வசதியுள்ளவர். பெற்றோர்களின் கூற்றுப்படி கீழ்கண்ட காரியங்களை மட்டும் செய்தபடி கடந்த ஆறு மாதங்களாக தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தார் எனத் தெரிய வந்தது. சென்னை நகரில் மத்திய பகுதியில் வசதியான ஒரு பங்களா. ஆறு மாதங்களாக தனிமையில் வசித்து வருகிறார்.

அவரது செயல்பாடுகள் சமூக வரைமுறைகளுக்கு மாறுபட்டதாக இருக்கிறது, மதியம் 12 மணியளவில் எழுந்து காலை உணவாக பிரட், பட்டர், ஜாம், ஒரு முட்டை மற்றும் புரதசத்து மிகுந்த ஒரு மாவுபொருள் எடுக்கிறார். பிறகு இரண்டு மணிநேரம் ஓய்வுக்கு பின்பு பால் அல்லது ஏதாவது ஓர் பானம் அருந்திவிட்டு மூன்று மணி அளவில் உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வது அங்கு இரண்டு மணிநேரம் பழுதூக்கும் பயிற்சி மட்டும் செய்வது, பின்பு திரும்ப வீட்டிற்கு வந்து ஒரு குளியல் போட்டுவிட்டு ஏதாவது பிஸ்கட் போன்ற சிற்றுண்டிகள் சாப்பிட்டுவிட்டு டிவி முன் அமர்ந்து ஆங்கிலப் படங்கள் மாத்திரம் பார்ப்பது. எட்டு மணியளவில் சமையல் அறை சென்று சப்பாத்தி அல்லது ஓட்ஸ் இத்துடன் ஆம்லெட், ஜாம் அல்லது ஊறுகாய் போன்றவை எடுத்துக்கொள்வது.

தோன்றினால் மட்டுமே சாதம் குக்கரில் கொஞ்சமாக சமைத்து பருப்பு, பொடி போன்றவற்றை கலந்து சாப்பிடுவது வழக்கம். காய்கறி, பழவகைகள் எதுவும் எடுப்பதில்லை. இந்த ஆறு மாதங்களும் அந்த வாலிபர் புரத பொருட்களை மாத்திரமே சாப்பிட்டு வந்திருக்கிறார். இரவு 2 மணிவரை அமர்ந்து லாப்டாப்பில் புரௌசிங் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். 2 மணிக்கு மேல் உறங்கி காலை 12 மணிக்கு எழுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தாயார் சென்றால், சமைத்துக் கொடுத்தால் அவருக்கு விருப்பமானதை மட்டும் சாப்பிட்டு விட்டு ரூமில் சென்று கதவை அடைத்துக் கொள்வது வழக்கம். நண்பர்கள் கிடையாது. தேவையான பொருட்களை வாங்குவதற்கு மட்டும் கடைக்கு சென்று வாங்குவது வழக்கம்.

இவர் தன்னை நோயாளியாக கருதவே இல்லை என்பதால் இவரை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு வருவது என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. எப்படியாவது கூட்டி வரவேண்டும் என்று கருதி அவரது தாய்மாமன் ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைத்து உணவுடன் கலந்து கொடுக்க முடியும் என்பது போன்ற சில திரவங்களை கொடுத்துவிட்டேன். பின்னர் அவர்களது நண்பரான மருத்துவரின் மருமகன் ஒருவருக்கு காலில் அடிபட்டு விட்டதாகவும் அவருக்கு சிகிட்சை செய்ய நாகர்கோவில் சென்றாக வேண்டும் என்று கூறி அவருக்கு உதவியாக நம் வாலிபரையும் துணையாக்கி நாகர்கோவிலுக்கு வரவழைத்து என் கலந்தாலோசனை அறைக்கு எதிரிலேயே உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருக்க வைத்தோம். அன்று இரவு அவருக்கு காக்காய்வலிப்பு வந்ததாக அவரது நண்பரை கூற வைத்தோம். அதை அவரும் நம்பிவிட்டார்.

ஆகவே அடுத்த நாள் அவரது நண்பருடன் மருத்துமனைக்கு வந்தார். அவருக்கு சிகிட்சை செய்வது போல் எப்படியோ சமாளித்துக் கொண்டு சென்றோம். பின்பு அவர்களுக்கும் எனக்கும் நண்பரான அந்த மருத்துவர் இவரது உடலை பரிசோதனை செய்வது போல் சில டெஸ்ட்களை எடுத்தார். ஏற்கனவே குறைந்த அளவு மனநோய்க்கான மருந்துகளை அவருக்கு தெரியாமலே கொடுத்திருந்ததால் அது அவருக்குள் சிறிதளவு இதயதுடிப்பு, நாடித்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கூட்டி காண்பிக்கும். மேலும் அந்த மருத்துவரை வைத்தே அவருக்கு இரவில் வந்த வலிப்பு பற்றி விவரமாக கேட்க வைத்தேன். ஒரு நாள் முழுவதும் அம்மருத்துவர் சில பரிசோதனைகளை செய்த பின் கொழுப்பு சத்து கூடுதல் இருப்பதையும், இருதய துடிப்பு கூடுதல் இருப்பதையும், இரவு உறக்கம் இல்லாது இருப்பதையும் சுட்டிக்காட்டி இன்னொரு மருத்துவரையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று என்னை கூப்பிட்டு விட்டார்.

நான் அச்சமயம் அவருடன் இருந்த அவரது பெற்றோரிடம் இவரைபற்றி ஒன்றும் தெரியாதது போல் நடித்து அவரது தாயாரிடம் வலிப்பு நோயை பற்றி விலாவாரியாகக் கேட்டேன். ஏற்கெனவே நான் கூறியபடி அவரும் அந்த பையனுக்கு இரண்டரை வயதுக்கு முன் காய்ச்சல் வரும்போதெல்லாம் வலிப்பு வரும் என்று கூறினார். பின்னர் அவருக்கு நரம்பின் வழியாக சில மருந்துகளை செலுத்தி சில பக்க விளைவுகளை உருவாக்கும்படி செய்தேன். இந்த பக்கவிளைவுகள் வலிப்பு நோய் போன்றே இருக்கும். ஆதலால் அந்நபர் தனக்கு வலிப்பு நோய் இருப்பதை ஓரளவு நம்பினார்.

இரண்டு மூன்று நாட்கள் மூன்று பேருடனும் உட்கார்ந்து, அவரது வாழ்க்கை முறையினை பள்ளிப் படிப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை இப்பொழுது சென்னையில் இருக்கும் வாழ்க்கை முறை வரை விலாவாரியாக தெரிந்து கொண்டேன்.

அந்த மூன்று நாட்கள் அவருடன் பேசியதில் எனக்கு தோன்றியவற்றை கீழே கூறுகிறேன்.

நாமக்கல்லில் பள்ளி வாழ்க்கையில் தங்கும் விடுதியில் இருந்ததால் பெற்றோருடன் பெரிதளவு பிடிமானம் இல்லாது இருந்திருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து ஒரு வருடம் நல்லபடியாக சென்றுள்ளது. அடுத்த வருடம் முதல் இவருக்கு முழு சுதந்திரம் என ஆகிவிட்டதால் காலையில் 9 மணிக்கு எழுந்து 9.30 மணியளவில் கல்லூரிக்கு சென்று பின்பு மாலையில் ஆறில் இருந்து எட்டு வரை கல்லூரி வளாகத்தில் உள்ள ஜிம்மிற்கு சென்று இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்து பின்பு ஒரு மணி நேரம் மட்டும் படித்துவிட்டு 12 மணிவரை லாப்டாப்பில் பொழுதை கழித்து பின்னரே தூங்குவது வழக்கம். இவ்வாறே மூன்று வருடங்கள் சென்றுள்ளது.

இவர் ஏன் ஜிம்மிற்கு சென்று பழகினார் என கேட்கவில்லை. பொதுவாக பிறர் தம்மை கேலி கிண்டல் செய்யும்போது தம்மை மிகுந்த ஆண்மை உள்ளவராக காண்பிக்க வேண்டும் எனத் தோன்றும். எனவே தான் இவர் உடற்பயிற்சியை மாத்திரம் மிக பெரிதாக எடுத்து, அதற்கு மாத்திரம் முதன்மை இடம் கொடுத்து அவ்வாறே தனது அன்றாட வாழ்க்கையை நடத்துவதாக எனக்கு தோன்றியது. கல்லூரியில் இருக்கும் பொழுதுகூட வட இந்திய உணவுகளையே உண்டதாக கூறினார்.

இம்மாதிரியான நபர்களை மனவியலில் உடல் வடிவத்திற்கு முக்கியத்துவம் தருபவர்களாக கூறுவர். தன் உடலுக்கு முக்கியத்துவம் தருபவர் மற்ற காரியங்களில் கோட்டை விடுவதுண்டு. சென்னையில் அவரது ஜிம்மில் கொடுக்கும் புரோட்டின் பொடிகளை அதிகமாக எடுத்துக்கொள்வதாக தெரிந்தது. இவருக்கு சரி விகித அளவில் மாவுசத்து, புரதசத்து, தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் வேண்டிய அளவு இல்லாமல் புரதம் மட்டும் கூடுதலாக போவதாக தெரிந்தது. இவரது வாழ்க்கை சமூகத்தில் மற்ற நபர்களைப் போல் இல்லாமல், தனக்கென்று ஒரு தனிவிதமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார்.

இரவில் அதிக நேரம் விழித்திருந்து பகலில் அதிக நேரம் அயர்ந்து உறங்கி பகல் நேரத்தை மிக குறைவாக சமூகத்தில் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒட்டுமொத்தமாக சமூகத்தை அவர் ஒதுக்கி வந்துள்ளார் என தெரிய வந்தது. பெற்றோர்களை பின்னர் நண்பர்களை கடைசியாக தன்னை சமூகத்தினின்று முழுமையாக ஒதுக்கி வைத்து தனித்தொரு வாழ்க்கையை கடந்த ஆறு மாதங்களாக அவர் வாழ்ந்து வருகிறார். இந்த மாதிரியான நிலையை மனநோயியலில் “SCHIZOID PERSONALITY DISORDER” அல்லது “SCHIZOTYPAL PERSONALITY DISORDER” என்றும் கூறுவர். ஒரு நபரை சமூகத்திற்குள் கொண்டுவர வைப்பது என்பது மிக பெரிய காரியமே. ஏனெனில் அவரது “COMFORT ZONE” ஐ தன்னை சுற்றி சிறிய அளவிலேயே வைத்துள்ளார்.

இவரை கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு தெரியாமலேயே சமூகத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதே என் முன் இருக்கும் சவாலாக உள்ளது. இவரை தடாலடியாக தலைகீழாக மாற்றுவது இயலாத காரியம். எனவே அவருக்கு உடல் ரீதியாக சிறிய கோளாறு இருப்பதாக கூறி மனரீதியாக சிகிட்சையை ஆரம்பித்துள்ளேன். மன ரீதியாக தினமும் ஒன்றரை மணிநேரம் ஆற்றுப்படுத்தலை செய்து கொண்டிருக்கிறேன். ஓரளவிற்கு என் வழிக்கு வருவார் என தெரிகிறது.

அவரது விருப்பப்படியே இரண்டு நாளில் மருத்துவமனையிலிருந்து விடுவித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டு, வாரம் ஒருமுறை வரும்படி கூறியுள்ளேன். அவர் நிச்சயம் சராசரி மனிதராக சமூகத்தில் வலம் வருவார் என முழுமையாக நம்புகிறேன்.

 


அக்டோபர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.