நோய் தீர்க்கும் மையங்ளே நோய்களைப் பரப்பினால்…!

Prop. Dr. தங்க மாரியப்பன்

16th Oct 2018

A   A   A

அறிவியல் என்பது உலகின் இருளை போக்கிய இரண்டாம் கடவுள். இவை ஆறாம் அறிவான பகுத்தறிவை மனிதனுக்குள் பதியமிட்ட புதுமை விரும்பி. தொடர்ந்து பல அதிசயங்களை பிரசவித்துக் கொண்டிருக்கும் கருவறை. நிகழ்கால அறிவியலின் வளர்ச்சியானது ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சிகளின் கடைசி அத்தியாயம். பிரான்சில் உள்ள ஒரு இதயநோயாளிக்கு மருத்துவர்கள் நியூயார்க்கில் இருந்துகொண்டே 54 அறுவைசிகிச்சைகளை செய்து சாதனை, இது பத்திரிக்கைச் செய்தி, இன்றைய உலகம் அறிவியல் வளர்ச்சியை பெறத் தவறும்போது, மனிதனைக் கொண்டே மனிதனை அளிக்கும் எதிர்மறை ஆயுதமாய் அறிவியல் மாற்றம் கொள்கிறது, இவற்றின் ஏற்றத்தாழ்வு மனித சமுதாயத்தை அழிக்கவல்ல நோயாகவும் மாறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 

ஒவ்வொரு நாடும் அரசியலைவிட அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நோக்கி பயணிக்கின்றன. விஞ்ஞானத்தில் தன்னிறைவடையும் நாடுகளுக்கு மட்டுமே வல்லரசு பட்டியலில் முதலிடம். இத்தகைய போட்டியில் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளே தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. அறிவியல் வளர்ச்சியில் உச்சம் பெற்ற நாடுகள் எந்த ஆதாயமுமில்லாமல் பிறநாடுகளின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க முன்வருவதில்லை. வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தபடும் தொழில்நுட்பங்களை பிறநாடுகளுடன் பரிமாறிக்கொள்ள செய்யும் உடன்படிக்கை கூட பணம் ஈட்டும் நிகழ்வாய்தான் இருக்கிறது. இதன்படி தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான உரிமைக்கட்டணம் மற்றும் மூலப்பொருள்கள் விற்பனை செய்வது என நலிவடைந்த நாடுகளிடம் கொள்ளையடிப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும். மொத்தத்தில், தங்களின் பொருள்களை வாங்கும் நுகர்வோர்களாகவும் குப்பைகளை கொட்டும் இடமாகவும் பின்தங்கிய நாடுகளை வைத்திருக்க விரும்புகின்றன வளர்ந்த நாடுகள். இந்த திட்டங்களை எளிதாக்கவே, உலகின் அனைத்து அதிகாரமையங்களும் ஒன்றுகூடி அமுலாக்கிய வர்த்தக கொள்கைதான் உலகமயமாதல். ஏழை நாடுகளுக்கும் பொருளாதார முன்னேற்றத்தை எடுத்துச் செல்வோம் என்பது இவர்களின் கவர்ச்சி விளம்பரம். இது குண்டூசியிலிருந்து அணுகுண்டு வரை ஏகாத்திபத்ய நாடுகளை மட்டுமே அண்டியிருக்கச் செய்யும் செப்படிவித்தையாகும்.  

உலகவணிகத்தில் ஈடுபட்டுள்ள வளர்ந்த நாடுகளின் கருத்துப்படி, உணவு சார்ந்த ஏற்றுமதி மட்டுமே இரண்டு மடங்கு இலாபம் தருகின்றனவாம். ரசாயனம் கலந்த உணவுப்பொருளை பயன்படுத்தி பாதிப்புகளுக்கு உட்பட்ட நாடுகள், மருந்துகளையும் அதிக அளவு கொள்முதல் செய்வதே இரட்டிப்பு இலாபத்திற்கு காரணம். பின்தங்கிய நாடுகளில் உள்ள நுகர்வோர்கள் பெரும்பாலும் விளம்பரப் பிரியர்கள் என்பதை சர்வே மூலம் அறிந்த வல்லரசுகள் உணவுதரத்தை குறைத்து விளம்பரத்திற்காக அதிகம் செலவிடுகின்றன. இந்த வணிகப்போட்டியில், உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனத்தோடு போட்டியிட முடியாமல் நிறுவனத்தையே மூடிவிடுகின்றன. ஒவ்வொரு வளரும் நாடுகளும் தமது சொந்த உள்நாட்டு உணவு தயாரிப்பு முறைகளை மறந்துவரும் அவலநிலை நீடிக்கிறது.

புவியமைப்பு தட்பவெப்பம் மற்றும் விவசாய செயல்முறை போன்றவைகளின் அடிப்படையில்தான் ஒரு நாட்டு மக்களின் உணவுப்பழக்கம் அமைகிறது இந்தியாவின் கலாச்சாரமும், வளங்களும் வரலாற்றுச்சிறப்பு பெற்றவையாகும். காலங்காலமாய் நமது நாட்டின்மீது நடைபெற்ற அனைத்து படையெடுப்புகளின் பின்னணி காரணமாய் இந்த அற்புத வளங்களே இருந்திருக்கின்றன. கனிம வளங்களையும் செல்வங்களையும் கொள்ளைக்கு பறிக்கொடுத்தாலும், இந்தியாவின் பாரம்பரிய பழக்கங்கள் இன்னும் கொஞ்சம் எஞ்சி இருபதாய் நம்பப்படுகிறது.   

உண்னும் உணவு எளிதில் செரிக்கவும், உணவில் சேர்க்கும் இதரப்பொருள்களினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்கவும் நம் முன்னோர்களால் பயன்படுதப்பட்ட பொருளே மசாலா எனப்படும் கூட்டு மருத்துவ உணவுபொருள்கள். அதிக ஆயுளை மனிதனுக்கு அருளிய இந்தியாவின் அற்புத பொருள்கள் தற்போது அந்நியநாட்டு மோகத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நாகரிகம் என்ற பெயரில் செயற்கை ரசாயன பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட அந்நியநாட்டு உணவுக்கு அடிமையாகிப் போன நம் புதிய தலைமுறைகள் இயற்கையோடு பிணைக்கப்பட்ட நமது வாழ்வை செயற்கையெனும் வேதிப்பொருள்களின் சூழ்ச்சிகொண்டு மாற்றியதின் தொடக்கமே புதுப்புது நோய்களின் தொடர் படையெடுப்புக்கு காரணம். இது நம் தேசநலத்தை வீழ்த்திட அந்நியரோடு கைகோர்த்து நம்மீது நாமே தொடுக்கும் உள்நாட்டுப்போர் என வர்ணிக்கப்படுகிறது

இவற்றின் வரிசையில் மக்கள்தொகை பெருக்கம், பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், காடுகளை அழித்தல் தட்பவெப்பநிலையில் மாற்றம், பாதுகாப்பில்லாத நீர் நிலைகள், அதிகமாகப் பயன்படுத்தும் நிலத்தடி நீர், பின்பற்றாத சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் பொருளாதார நிலையின்மை போன்ற காரணிகள் மனிதனின் மொத்த வாழ்நாட்களில் சராசரியாக 20 முதல் 30 சதவிகிதத்தை குறைந்துள்ளது என்கிறது புதிய ஆய்வறிக்கை. இவற்றின் நீட்சி வினையாய், தற்போது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 60 முதல் 70 சதவிகிதம் நபர்கள் தினந்தோறும் மருத்துவமனைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் 

பாதிப்பின் தாக்கம் நோய்களாக உருமாறும்போது சுகாதார மையங்களே மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் இடமாக இருக்கிறது. ஆனால் கொடுமை கொடுமையென்று கோவிலுக்கு போனால் அங்கும் இரண்டு கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்ற பழமொழிக்கு ஏற்ப சில மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு நோய்களை ஏற்படுத்துகின்றன. மேலும் இவர்களில் சுமார் 1.4 மில்லியன் நபர்கள் வரை மருத்துவமனை சார்பு தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 80,000 நபர்கள் வரை இறுதியில் உயிரிழக்கின்றனர். ஆகவே இவ்வகையான தொற்றுநோய்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை பொதுமக்களிடையே உருவாக்கியுள்ளது

மருத்துவமனைகள் மூலம் பரவுகின்ற இத்தகைய நோய்களை நோசோகோமியல் தொற்றுக்கள் (Nosocomial Infections) அல்லது மருத்துவமனை மூலம் பரவும் தொற்றுக்கள் (Hospital Acquired Infection) என குறிபிடுகின்றனர். இவற்றின் தீவிர பரவலை தடுக்கும் வகையில் சர்வதேச நோசோகோமியல் நோய்கள் கட்டுப்படுத்தும் கூட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பின் தலைவர் விக்டர் D. ரோசந்தல் தமது ஆய்வின் முடிவில் மருத்துவமனை சார்பு தொற்றுநோய்களை பரப்பிடும் நுண்ணுயிரிகளின் வீரியத்தை கட்டுபடுத்தல் மிக அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இவற்றில் எச்சொர்ஸியா கோலை ஃபேசிலஸ் சூடோமோனெஸ் போன்ற சில பாக்டீரியாக்கள் நோய் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் அதிவேகமாக பெருகிடும் பண்புகளே நோய் பரப்பும் தன்மைக்கு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது

சுகாதார மையங்களில் பின்பற்றப்படும் அலட்சியப்போக்கே பல நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கும் தொடர்ந்து நோய் பரவுவதற்கும் அடிப்படைக் காரணம் என INICC மையத்தின் தலைவர் குறிப்பிடுகிறார். இதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவின் 20 பெரிய நகரங்களில் அமைந்துள்ள 40 பொது மருத்துவமனைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, தீவிரசிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தும் பல்வேறு மருத்துவ உபகரணங்களிலிருந்தும் ஆய்வுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சுமார் 75% மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனை தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளை பெற்றிருந்ததாக ஆய்வின் முடிவுகள் தெறிவிக்கின்றன. இந்த ஆய்வின் முடிவினை மிகப்பிரபலமான சர்வதேச நோய்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மையமும் உறுதி செய்துள்ளது. மேலும் பாதிப்புகளின் விகிதத்தை சர்வதேசளவில் ஒப்பிடும்போது அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகளில் 10 நபர்களுக்கு ஒருவரும் இந்தியா போன்ற நாடுகளில் 4 நபர்களுக்கு ஒருவருமாக பாதிப்படைகின்றனர்

சர்வதேச சுகாதாரா அமைப்பின் தகவல்படி இந்தியா உள்ளிட்ட வளரும்நாடுகள் அதிகமான பாதிப்பிற்கு உட்பட்ட நாடுகளின் வரிசையில் உள்ளன. மேலும், இந்நாடுகளில் மருத்துவதுறைகளில் நடைபெறும் விதிமீறல்களே இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.

இவ்வமைப்பின் கூற்றுபடி மருத்துவமனைகளிள் காணப்படும் பராமரிக்கப்படாத உபகரணங்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை செயல்படுத்த முடியாத ஆய்வகவசதி, சர்வதேச தரச்சான்றிதழ்களை பெறவேண்டிய நிர்ப்பந்தமில்லாமை சுகாதாரம் பேணும் விதிமுறைகளில் ஏற்படும் தொய்வுகள் நிர்வாகத்திறமையின்மை மற்றும் நிதிப்பற்றாக்குறைகள் போன்றவைகள் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் காரணங்களாக இருக்கின்றன. குறிப்பாக 100 நபர்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவமனையில் பத்துக்கும் குறைவான செவிலியர்களே பணியாற்றுகின்றனர். இதனால் அடிக்கடி நடைபெறும் சிறப்பு வழிகாட்டுதல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு நவீனமருத்துவம் தொடர்பான அறிவுத்திறனை இவர்களால் பெறமுடிவதில்லை என்பது சீர்கேட்டிற்கு காரணமாய் கூறப்படுகிறது.

குறைவான ஆய்வகவசதி தொடர்பாக நோய்களின் தன்மைகள் மற்றும் நோய்கள் உருவாகும் காரணங்கள் மருத்துவர்களால் கணிக்கமுடிவதில்லை. எனவே ஆய்வக வசதி என்பது ஒரு மருத்துவமனையின் இதயப்பகுதியாகும். தரமான ஆய்வகம் இல்லாத மருத்துவமனைகள் வெறும் கான்கிரீட் கட்டிடமாக இருக்கும்.

இவர்களின் ஆய்வறிக்கையில், மருத்துவமனைகளின் உள்ளமைப்புகளை மட்டுமன்றி சிகிட்சையளிக்கும் முறைகளிலுள்ள குறைகளையும் குறிப்பிட்டுள்ளார்கள். இதன்படி ஆன்டிபயாடிக்ஸ் எனப்படும் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளின் அதிக மற்றும் தொடர் பயன்பாடு நோயாளிகளின் நலனுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது தொற்றுநோய்களை பரப்பும் பாக்டீரியாக்களின் மரபணுவான டி.என்.ஏ திடீர் மாற்றத்திற்குட்படுகின்றன. இவ்வாறு மரபுப்பண்புகளில் ஏற்படும் மாற்றம் எதிர் நுண்ணுயிரி மருந்துகளுக்கு எதிராக செயல்படும் பலமிக்க உயிரிகளாக பாக்டீரியாக்கள் வீரியமடைகின்றன. நாளடைவில் இவைகள் வேறெந்த ஆன்டிபயாடிக்குக்கும் கட்டுப்படாமல் நோய்களை பரப்புவதை அதிகரிக்கின்றன. அதிக வீரியமடைந்தபின் மருத்துவமனைகளில் அறுவைசிகிட்சை உள்நோயாளிகளை குறிவைத்து தாக்குகின்றன. இவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். மருத்துவமையங்களில் நோயாளிகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதில் இதுவும் ஒரு முக்கிய காரணியாய் இருக்கின்றது.

ஆகவே மருத்துவமனைகளில் தங்கி சிகிட்சை மேற்கொள்ளும்போது, பல வகையான கூடுதல் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமுள்ள மையங்களில் தேவையான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் மற்றும் அவசரமுமாகும். தவறும்பட்சத்தில் நோய் தீர்க்கும் மையங்கள், நாளடைவில் ஆள் தீர்க்கும் மையங்களாக மாறுவதை யாராலும் தடுக்க இயலாது.

 


மார்ச் 2017 அமுதம் இதழில் வெளியானது...



Error
Whoops, looks like something went wrong.