தொடர்புடைய கட்டுரை

ரிலாக்ஸா வச்சிருக்கப் போறேன்…

அதிமேதாவி ஆனந்தன்

16th Aug 2018

A   A   A

வீட்டின் மொட்டை மாடியில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தேன். மனதில் தோன்றிய கேள்விக்கு விடை தெரியாமல். நீண்ட நேரமாகியும் மிஸ்டர் அனுபவமும் வரவில்லையே, கண்கள் தேடின அவரை.

கேள்வி இதுதான், எப்போது பார்த்தாலும் அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில் திரைப்படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை உண்மையிலேயே ஓய்வையும், மனதிற்கு அமைதியையும் தருகிறதா? என்பது தான்.

“உனக்கு இவற்றை செய்வதால் மன அமைதி கிடைக்கிறதா ஆனந்தா?” கேட்டபடியே வந்தார் மிஸ்டர் அனுபவம்.

“எனக்கு அதில் மன அமைதி கிடைப்பதில்லை. ஆனால் யாரிடம் கேட்டாலும், கொஞ்சம் ரிலாக்ஸுக்கு டிவி பார்க்கிறேன், ரிலாக்ஸா ஒரு படம் பார்த்தேன், கொஞ்சம் ஓய்வுக்கு பாடல் கேட்டேன்னு சொல்றாங்களே அதான் குழப்பமே. ஒருவேளை எனக்கு மட்டும்தான் அதிலெல்லாம் திருப்தி கிடைக்கவில்லையா? அதுதான் என் கேள்விக்கான காரணமே.” அவருக்கு புரிய வேண்டும் என்பதற்காக விளக்கினேன்.

ஏற்கெனவே புரிந்துதான் கேட்டார் என்பது அவரது சிரிப்பில் தெரிந்தது. “அப்படி அவர்கள் நினைத்துக் கொள்வதால் அப்படி ஆகிவிடாது ஆனந்தா. மனம் ஏதாவது ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் போது அல்லது ஏதாவது ஒன்றைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு மாற்றத்திற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் தற்காலிகமாக ஏற்கெனவே இருந்த பிரச்சனைகளை கொஞ்சநேரம் மனம் மறந்துவிடும். ஆனால் மீண்டும் அதே அழுத்தம், அதே வேகத்துடன் பழைய எண்ணங்கள் வரத்தான் செய்யும்.

“ஆனால், மனதை வேறு எதிலும் ஈடுபடுத்தாமல், அமைதியாக அமர்ந்து தியானம் செய்வது, இயற்கை சூழ்ந்த இடங்களில் உலாவருவது, சிறு சிறு விளையாட்டுக்களில் ஈடுபடுவது மகிழ்ச்சியான உரையாடல்களில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம். அதன்மூலம் மனம் அமைதியடைந்து, பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை சிந்தித்து கண்டுபிடிக்கும் நிலைக்கு உயர்வடையும்.”

“அப்படியானால், மனம் சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் போது அதற்கு ஓய்வு கொடுப்பது கடினமா?” என்றேன்.

“ஆம் ஆனந்தா. யோசித்துப் பார் இரவு உறங்கச் செல்லும்போது எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் உறங்கி காலையில் எழுந்திருக்கும்போது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்தது போன்ற ஒரு அமைதியும், ஏதோ புதிய உலகில் இருப்பது போன்ற ஒரு உணர்வும் கிடைப்பதை கவனித்திருப்பாய் அல்லவா.. அதனால்தான் மனநோய் பாதிக்கப்பட்டவர்களை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மருந்து கொடுத்து உறங்க செய்கின்றனர். அதன் மூலம் அவர்களது மனம் பழைய சிந்தனைகளை மறந்து அமைதியடைகிறது. அதன்பிறகே மருத்துவர்கள் நோயாளிக்கு உரிய சிகிட்சை அளிக்கின்றனர்.”

“உறக்கம் அவ்வளவு முக்கியமானதா என்ன?”

“ஆம் ஆனந்தா. உறக்கம் மனதிற்கு மட்டுமல்ல பல வழிகளில் உடலுக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. சில சுரப்பிகள் ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமே சுரக்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக அந்த சுரப்பிகள் உடல்நலத்திற்கு மிக முக்கியமானவையாகும்.”

“ஆனால், நாம் தூங்குபவர்களை சோம்பேறிகள் என்றல்லவா சொல்கிறோம்.”

“தேவைக்கு அதிகமாக அல்லது பகலில் தூங்குபவர்களை மட்டுமே சோம்பேறிகள் என்போம். ஆனால் தேவையான அளவு அதுவும் இரவில் தூங்கவில்லை என்றால் அது உடலுக்கும், மனதுக்கும் தீமையையே உருவாக்கும்.”

“சரி சொல்லுங்கள் மிஸ்டர் அனுபவம், கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேறு என்னவெல்லாம் செய்யலாம்?”

“ரிலாக்ஸா இருக்கணும்னா, முக்கியமா மனசுக்கு பிடிச்சதையெல்லாம் செய்யலாம். ஆனா விஞ்ஞானிகள் ரொம்ப தெளிவா சொல்றாங்க, எவ்வளவுதான் மனசுக்கு பிடிச்சி டிவி அல்லது திரைப்படம் பார்த்தாலும் அதனால ரிலாக்ஸ் கிடைக்கிறதில்லையாம்.

“பாடல்களை விட வெறும் இசைக்கு மனதை வசீகரிக்கும் சக்தி இருக்கிறதாம். கண்களை மூடிக்கொண்டு வசதியாக அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இசையை கேட்கும்போது வேறு எந்த சிந்தனைக்கும் இடமில்லாமல் மனம் அமைதியடையும்.

“அதேப் போல் நடனம் ஆடுதல், ஓவியம் வரைதல், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருதல், இசைக்கருவிகளை மீட்டுதல், பாடுதல் போன்றவையும் மனதிற்கு ரிலாக்ஸ் தருபவை. சிலர் சமையல் செய்வதிலும் இதுபோன்ற அமைதியை பெறுகின்றனர். ஆனால் அது கட்டாயத்தின் பேரில் செய்வதாக இருக்கக் கூடாது.”

“அப்படியானால் என் சந்தேகம் சரிதானே?” கேள்வியுடன் மிஸ்டர் அனுபவத்தின் முகத்தைப் பார்த்தேன்.

“ஆம் ஆனந்தா, உன் சந்தேகமும் கேள்வியும் சரியானது தான். சரி இப்போதுதான் விடை கிடைத்து விட்டதல்லவா! இனி என்ன செய்யப்போகிறாய்?”

“இனி என் மனதிற்கு தேவையான ரிலாக்ஸ் எதுன்னு சரியா கண்டுபிடிச்சு அதை செய்ய போகிறேன். எப்போதும் மனதை ரிலாக்ஸா வச்சிருக்க”

மிஸ்டர் அனுபவம் விடைபெற்றார். நானும் விடைபெறுகிறேன்.

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது.

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.