கிரேக்க மருத்துவம் - 2

Dr. எட்வின் ஆன்றோ ராஜ்

05th Oct 2019

A   A   A

கிரேக்கர்கள் இயல்பாகவே மனதளவில் உயர்ந்தவர்கள், இவர்களுக்கு எப்படி சிந்திக்கவேண்டும், எவ்வாறு பேசவேண்டுமென சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இவர்கள் தான் இன்றைய நவீன அடிப்படை அறிவியலின் விதைகள் என்கிறார்கள் பல வரலாற்று மற்றும் மருத்துவ நிபுணர்கள். இவர்களை நவீன உலகத்தின் போராளிகள் என்கிறார்கள் சிலர்.

உலகத்தை கையில் அடக்க துடித்த மாவீரன் அலெக்ஸாண்டரை பெற்றெடுத்த நாடு, தன் மன மற்றும் உடலழகால் உலக சாம்ராஜியத்தை தனக்குள் அடக்க நினைத்த கிளியோபட்டராவை செதுக்கிகொடுத்த நாடு இந்நாடு. மருத்துவத்தில் புத்துணர்ச்சியையும், அழியாப் புகழையும் உருவாக்கி இன்றும் உலகளவில் சாகா வரம் பெற்றிருக்கும் ஹிப்போகிரேடஸை உலக மருத்துவத்திற்கு வழங்கிய நாடுதான் கிரேக்கநாடு. அரிஸ்டாடில் முதல் ஆர்க்கிமிடிஸ் வரை மருத்துவம் மற்றும் தத்துவங்களையும் உலகத்திற்கு வழிகாட்டியாக காட்டியவர்கள் இவர்கள். இவர்கள் மருத்துவதில் எவ்வாறு விதைவிதைத்தார்கள் என்பதை பார்ப்போம்.

இவர்களது வளர்ச்சியென்பது இவர்களது சிந்தனையில் ஆரம்பிக்கிறது, இயல்பாக சிந்திப்பதும், சகஜமாக பேசுவதும் இவர்களது பலம், இவர்களுக்கு முழு உரிமையும் கிரேக்க அரசியலால் இன்றும் கொடுக்கப்படுகிறது. இவர்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் (free thinkers), தோராயமாக கூர்ந்து பார்ப்பவர்கள் (exact observation), இவர்களுக்கு கிடைத்த தத்துவத்தை அறிவியல் பூர்வமாக பேசுபவர்கள் (rational speech).

நான் முந்தைய இதழில் கூறியதுபோல இவர்களும், மந்திர தந்திர செயல்பாடுகளின் மூலமாக நோயைவிரட்ட முற்பட்டனர். பிற்காலங்களில் பிளேட்டோ, சாக்ரட்டிஸ், அரிஸ்டாட்டில், யூக்லிட் போன்றவர்கள் கிரேக்க மருத்துவத்திற்கு உரமிட்டனர்.

கிரேக்கர்கள் ஆரம்பகாலம் முதலே உடல்நல பேணல்களுக்கும், உடல் வலிமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர், காரணம் தகுதியான உடல் நலம் உள்ளவர்கள் மட்டும்தான் இராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ நுணுக்கம் தெரிந்த போர்வீரர்கள் போர்காலங்களில் மருத்துவராகவும், அறுவைசிகிட்சை மருத்துவ நிபுணர்களாகவும் செயல்பட்டனர்.

போரின்போது அம்பு துளைத்து காயப்படுதலைப் பற்றி விரிவாக 147 வகைகளாக பிரித்து, அறுவைசிகிட்சையை கையாளும் முறைகளை உலகத்திற்கு சொல்லிகொடுத்தனர் என்று இலியட் (iliad) என்பவர் தனது நாட்குறிப்பேட்டில் எழுதியுள்ளார். அதிசயம் என்னவென்றால் இவர்கள் சாதாரண நோய்களை குறித்து ஒரு குறிப்பேடு கூட ஆரம்பகாலங்களில் எழுதவில்லை. மாறாக போர் காயங்களைப் பற்றி விரிவாக பட்டைத்தீட்டி உள்ளனர்.

காலங்கள் மாற மாற கிரேக்கம் பல மருத்துவ மேதைகளை உருவாக்கியது அவர்களில் ஒருவர்தான் அஸ்குலாபியஸ் (aesculapius). இவர் யாரென்றால் இன்றைய மருத்துவ சின்னத்தில் இருக்கும் இரட்டை பாம்பிற்குச் சொந்தக்காரர், இவர் மாயமந்திரத்தாலும், மருத்துவ மூலிகைகளாலும் நோயை குணப்படுத்தினார், இவர் இறந்தபிறகு கிரேக்கர்கள் இவருக்கு கோயில்கட்டி கும்பாபிஷேகம் செய்து நோயாளிகளை அந்த கோயிலில் படுக்க வைத்தனர், காரணம் அஸ்குலாபியஸ் கனவில் வந்து இரட்டைபாம்பு போன்ற கோலால் நோயாளியை தொடுவார், அந்த நொடியே நோய் குணமாகுமென்று நினைத்தனர்.

இவர் காலத்திற்கு பிறகு அஸ்கிலிபிடஸ் (asclepieds) இவர் அஸ்குலாபியஸின் மகன். இவர் காலத்தில் தான் மருத்துவம் நவீன மாற்றத்தை பார்க்க தொடங்கியது, இவர் நோய் காரணத்தை அறிவியல் பூர்வமாக சிந்தித்தார். அஸ்குலாபியஸின் மற்ற மகன்கள் மாஸேயான் மற்றும் போடாவிரிஸ், மூன்றுபேருமே இன்றைய (practica medicine) செய்முறை மருத்துவத்திற்கு பங்காற்றியவர்கள்.

கிரேக்கர்களிடம் இருந்துதான் இத்தாலி மருத்துவம் உதயமானது. இந்த பிரிவின் காலத்திலிருந்துதான் மருத்துவமும், மதமும் விவாகரத்தானது. மருத்துவ நுணுக்கங்கள் அறிவியல் பூர்வமாகவும், தத்துவங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறாகவும் மாறியது. இந்த காலத்தில்தான் மருத்துவம் பெயர் சொல்ல முடியாத மருத்துவ வல்லுனர்களால் வல்லரசாக முயற்சித்தது.

கிரேக்க மருத்துவத்தில் புதியதோர் விதிசெய்ய நினைத்தவர்களில் ஒருவர்தான், பித்தாகோரஸ். பித்தாகோரஸ் மனிதனை நுண்ணுயிர் ஆட்டிப்படைக்கிறது என்றார், இவர்தான் பின் நாட்களில் தட்பவெட்ப காலநிலைகள் நோயின் தன்மையை நிர்ணயிக்கின்றது என்றார்.

பின் நாட்களில் இவரின் வழித்தோன்றல் மாணவர்கள் அல்க்மேன், பஹிலொலன்ச் மற்றும் ஹிப்போகிரேடஸ் இவர் கருத்தை மெருகேற்றி மேலும் நவீன மயமாக்க முற்பட்டனர். அவைகளில் சில இன்றும் உலகமயமான மருத்துவத்தில் பின்பற்றப்படுகிறது.

கிரேக்கம் தந்த கிரேட் மனிதர் தான் ஹிப்போகிரேடஸ், இவர்தான் நவீன மருத்துவத்தின் தந்தை என்று இன்றும் அழைக்கப்படுகிறார். நடைமுறை நோய் மருத்துவத்தை (clinical medicine) உலகத்திற்கு அடையாளம் காட்டியவர். இவர் நோயின் காரணம், நோயின் அறிகுறி, அதை குணப்படுத்தும் முறைகள் என புதுகோணத்தை உருவாக்கியவர். இவர் எழுதிய ஹார்பஸ் ஹிப்போகிரேடிசம் (corpus hippocraticum) இன்றைக்கும் ஆய்வு குறிப்பு புத்தகமாக பயன்படுத்த படுகிறது. இவர் 72 பாடபுத்தகங்களை எழுதியுள்ளார்.

ஹிப்போகிரேடஸ் காலத்திற்கு பிறகு மருத்துவமும், மருத்துவர்களும் பல கோணங்களில் வெடித்தெழுந்தனர். அவர்களின் அறிவு, அனுபவத்தின் அடிப்படையில் நோயை நாடினர். அவைகள் பின்நாட்களில் மொதாடிஸ்ட், நியூமாஸ்டிக், மற்றும் எக்கிலியாஸ்டிக் என பிரிந்தது.

மொதாடிஸ்ட்: மருத்துவத்தில் பஞ்சபூத தத்துவத்தை மறுத்தனர்.

நியூமாஸ்டிக்: மருத்துவத்தில் உயிர்சக்திதான் நோயின் காரணி என்றனர்.

எக்கிலிஸ்ட்: வேறு வேறு கொள்கைகளை பரிசோதித்து, தங்கள் மருத்துவதில் சேர்த்துக் கொண்டனர்.

(இந்த மருத்துவத்தில் இருந்து தோன்றியவர்தான் கியாலன்.. மருத்துவத்தின் முடிச்சூடா மன்னன்).

கிரேக்கத்தின் மருத்துவ கல்விமையங்கள்:

கிரேக்கர்களுக்கு மருத்துவ கல்லூரிகள் முற்காலத்திலிருந்தே இருந்தன. அவைகள் சைனிடஸ் (Cnidus) ஸைரினி (Cyrene) ரோடஸ் (Rhodes) மற்றும் கோஸ் (Cos) இந்த கோஸ் கல்லூரியில் தான் ஹிப்போகிரேடஸ் பேராசிரியராக பணியாற்றினார்.

கிரேக்கத்தில் மருத்துவ மாமணிகள் நிலத்தில் புதைய கிளைகள் இல்லாமல் வீழ்ச்சியை தேடியது மருத்துவம். பின் காலங்களில் மாவீரன் அலெக்சாண்டர் மறைவிற்கு பிறகு, பெயர் சொல்லக்கூடிய அளவில் யாரும் கிரேக்கத்தை ஆண்டதில்லை, பிறகு ரோமாபுரி கிரேக்கத்தை கைப்பற்ற இவர்கள் சக்தியற்று சத்தற்றவர்கள் ஆனார்கள்.

(இந்த காலங்களில் தான் கிளியோபட்ரா, தான் தலைதூக்க சீஸரை திருமணம் செய்ய நினைக்கிறாள்) இவர்களிடமிருந்து நாம் கற்கவேண்டியவைகள் தான் சாதனையும், சரித்திரமும்.

வீழ்ச்சியை பார்த்தவர்கள், சாதிக்க தவறியதில்லை;

! சாதித்தவர்கள், தயங்கியதில்லை;

தயங்கியவர்கள், தலை நிமிர்ததில்லை;

ஆகவே,

சாதிப்போம் தயங்காமல்,

தலைநிமிர்வோம் சரித்திரம் படைக்க!!

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.