தொடர்புடைய கட்டுரை

மலர்களே… மலர்களே…

Dr. S. பிரகாஷ்

15th Aug 2018

A   A   A

இந்தியாவில் விவசாய சீதோஷ்ண நிலைகள் பல நிலைகளில் காணப்படுகின்றன. இவற்றுள் பூக்கள் உற்பத்திக்கு உகந்த சீதோஷ்ண பகுதிகள் பல இடங்களில் காணப்படுகின்றன. தேசிய தோட்டக்கலை கழகம் 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வெளியிட்டுள்ள தகவலில் 2.55 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து 7,54,000 மில்லியன் டன் உதிரிப்பூக்களும், 5.43 மில்லியன் டன் துண்டு பூக்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பூக்கள், தற்போது வியாபார நோக்கோடு பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றுள் முதன்மையாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 25 சதவிகிதமும், கர்நாடகா 20 சதவிகிதமும், ஆந்திரா 14 சதவிகிதமும் மீதமுள்ளவை மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம், ஒடிஸா, ஜார்கண்ட், உத்திரபிரதேசம் மற்றும் சண்டிகர் மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 37,000 கோடி ரூபாய்க்கு பூக்கள் பல மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 300 க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. அவற்றுள் 50 சதவிகித ஏற்றுமதி நிறுவனங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவில் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் குறிப்பாக மொத்த விவசாய நிலத்தில் (9,22,005 ஹெக்டேர்) 32,400 ஹெக்டேர் நிலப்பரப்பில் பூக்கள் பயிரிடப்படுகின்றன. திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சேலம், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் மலர்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. பிச்சி, முல்லை, ரோஜா, சாமந்தி, அரளி, ஜாதிமல்லி, Crossandra, Chrysanthimum போன்ற பூக்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன.

தென் இந்தியாவின் மிகப்பெரிய பூச்சந்தையாக தோவாளை பூ மார்கெட் கருதப்படுகிறது. இச்சந்தையில் அதிகமான மலர்கள் பிற மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வந்து குவிகின்றன. தோவாளை சுற்றுப்புற பகுதிகளில் விளைவிக்கப்படும் மலர்கள் இந்த சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றன.

தென் இந்தியாவின் மிகப்பெரிய பூச்சந்தை அமைந்திருக்கும் குமரி மாவட்டத்தில் மலர் சார்ந்த பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்தும் இதுவரை அமைக்கப்படவில்லை. மலர் மற்றும் மலர் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதிகமான அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் இத்தொழில்நுட்பங்களை அதிகரித்தால் குமரிமாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கலாம். பூக்களை கொண்டு மூன்று விதமான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். புதிய மலர்களை வைத்து செய்யப்படும் பொருட்கள், காய்ந்த மலர்களிலிருந்து செய்யப்படும் பொருட்கள், மலர்களிலிருந்து செய்யப்படும் பிறப்பொருட்கள் என பல வகைப்பட்ட பொருட்கள் மலர்களிலிருந்து தயாரிக்க முடியும். சிறு தொழிற்சாலைகள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை இந்த மலர்களை மூலப்பொருளாக வைத்து தொடங்க முடியும். எண்ணெய் பொருட்கள், ஜேம், ஜெல்லி, குளிர்பான பொருட்கள், வைன், கோழி தீவனம், பூச்சிகொல்லி மருந்துகள், அழகுசாதன பொருட்கள், கிரீம், ரோஸ் வாட்டர், ரோஸ் கிரீம், கல்கண்டு, மண்மூட்டிகள், வண்ணச்சாயம் போன்ற பலப் பொருட்கள் பூக்களிலிருந்து தயாரிக்க முடியும்.

புற்று நோயை குணப்படுத்தும் பலப்பொருட்கள் (Vincristine, Catharathine) தற்போது மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்கர்லி போன்ற நோயை குணப்படுத்தும் விட்டமின் சி மருந்துகள் பூக்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கண் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் சில உணவுக்குறைபாடுகள் குறிப்பாக லூட்டின் (Lutein) போன்ற பொருட்கள் பூக்களில் காணப்படுகின்றன. ஜாமந்தி (marigold) பூக்களில் லூட்டின் அதிகமாக காணப்படுகின்றன. கண்களில் ரெட்டினாவில் ஏற்படும் குறைபாடு கண்பார்வையை இழக்கச் செய்யும். இத்தகைய கண்பார்வை இழப்பு குறைபாட்டை லூட்டின் மூலம் சரிசெய்ய இயலும்.

பூக்களின் இதழ்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கரோட்டினாய்ட் நிறமிகள் கோழி தீவனத்தில் கலந்து கோழிகளுக்கு கொடுத்தால் முட்டையின் மஞ்சள்கரு அதிக நிறத்தோடு இருக்கும். அதேசமயம் அந்த முட்டையில் லூட்டின் அளவு அதிகமாக இருக்கும். இந்த முட்டையை சாப்பிடும்போது கண்பார்வை குறைபாட்டை நிவர்த்தி செய்ய இயலும்.

ரோஜா மலர்களின் இதழ்களை பயன்படுத்தி தேயிலை தூள் தயாரிக்க முடியும். இவற்றில் அதிக அளவு வைட்டமின் சி சத்துக்கள் இருக்கும். இதுதவிர அஸ்டிஜென்ட் (Astringent) டேனின் போன்ற பொருட்கள் ரோஜா இதழ்களில் காணப்படுகின்றன. இவை இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் குணமுடையவை. பிச்சிபூக்களையும் தேயிலை தூள் தயாரிக்க பயன்படுத்த முடியும்.

பல வண்ண சாயங்களை மலர்களிலிருந்து தயாரிக்க முடியும். இத்தகைய சாயங்கள் பேப்பர், டெக்ஸ்டைல், உணவு, குளிர்பான தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அழகு சாதன பொருட்கள் குறிப்பாக முடியை கருமையாக்கும் சாயங்கள், தோலில் பச்சை குத்தும் சாயங்கள் போன்ற பலப் பொருட்கள் மலர்களிலிருந்து தயாரிக்க முடியும். நறுமணப்பொருட்கள், பூச்சிகொல்லி மருந்துகள் போன்ற தொழிற்சாலைகளில் அதிக அளவில் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதிக மலர் வளங்களை கொண்டுள்ள குமரிமாவட்டத்தில் மலர்சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது. மலர்களை மூலப்பொருளாக வைத்து இயங்கும் பல தொழிற்சாலைகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் அரசு கவனத்தில் கொண்டு, பூக்கள் தொடர்ந்து கிடைக்க மலர் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, குறிப்பாக உயிரி தொழில்நுட்பங்களை (Biotechnology) பயன்படுத்தி அதிகரிக்க வேண்டும். உற்பத்தியிலும், தரத்திலும், பதப்படுத்துதலிலும் இத்தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் இத்தகைய தொழிற்சாலைகளை உருவாக்க மத்திய மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 


அக்டோபர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.