கடவுள் நம்பிக்கை..!

Dr. பா. நாகராஜன்

20th Aug 2018

A   A   A

ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக எனக்கு பரிச்சையமான ஒரு நபரைப் பற்றிய கட்டுரை இது.

ஓர் மனிதனின் மன வலிமை எத்தகையதாக உள்ளது என்பதற்கு ஓர் சான்றாக இதை எழுதுகிறேன். அந்த நபர் எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாத அதிதீவிர கடவுள் பக்தி உடையவர். பொதுவாக கிறிஸ்தவ பிரிவுகளில் பெந்தகோஸ்தே சபைகளில் அங்கத்தினராக இருப்பவர்கள் அதிதீவிர பற்றுடையவராகவும் பழக்க வழக்கங்களில் பிடிவாத குணம் உடையவர்களாகவும் இருப்பதுண்டு. இத்தகைய ஒரு சபையில் அங்கத்தினராக இருப்பவர் இவர்.

சென்னையில் அத்தகைய சபை ஒன்றில் தங்கி இருந்து அவர்களுக்குண்டான வேலைகளை செய்து வருபவர். அவரது மூன்று மகன்களும் பாலிடெக்னிக் முடித்துவிட்டு சென்னையிலேயே வேலை பார்த்துக்கொண்டு தன் தந்தையுடன் தங்கியிருக்கிறார்கள். நம் நபர் திறமையான பெயிண்டர். பொறுமையாக, சிறப்பாக, பணிவுடன் வேலை செய்பவர். இவரை வைத்து வேலை செய்தவர்கள் எவரும் தங்களது எதிர்கால வேலைகளுக்கு இவரைத் தவிர வேறு யாரையும் கூப்பிட மாட்டார்கள். அம்மாதிரியான ஆளுமை படைத்தவர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு லிபோஅ எனும் கொழுப்பு கட்டி ஒன்று இருந்ததை என்னிடம் காண்பித்தார். மிகச் சிறியதாக இருந்ததால் அதை ஒன்றும் செய்ய வேண்டாம் விட்டுவிடுவோம் என கூறினேன். மூன்று மாதங்களுக்கு முன் அந்த கொழுப்பு கட்டியானது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி கொண்டிருந்தது. அதை என்னிடம் அவர் தெரிவிக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் அந்த நபரது பெயரைக் கூறி அவர் சென்னையை விட்டு முழுமையாக காலி செய்துவிட்டு நாகர்கோவில் வந்துவிட்டதாக என் மனைவி என்னிடம் தெரிவித்தார். என்ன விஷயம் என்று கேட்டதற்கு அவரது முதுகில் இருந்த கட்டி மிகப்பெரிதாக ஆகி வேலை செய்ய முடியாதபடி ஆகிவிட்டதால் சென்னையை விட்டு வந்து விட்டதாக தெரிவித்தார். அதற்கென ஒரு சிகிட்சையும் இதுவரை எடுக்கவில்லை. எந்த மருத்துவரிடமும் காண்பிக்கவும் இல்லை என கூறினார்.

அவர் மிக தெரிந்த நபர் என்பதால் நானும் மனைவியும் அவரது வீட்டிற்கு கிளம்பினோம். அவரை நேரில் பார்த்ததும் திகைத்துப்போனேன். இடது பக்க முதுகு முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது. அவர் சென்னையில் இருந்து வரும்பொழுது ஸ்லீப்பர் கோச்சில் மல்லாக்க படுக்க முடியாமல் கவிழ்ந்து படுத்தே பயணித்திருக்கிறார். எனக்கு ஆதங்கம் தாங்கவில்லை. மொபைலில் கட்டியை போட்டோ எடுத்துக் கொண்டு எனது நண்பர் ஒருவரின் (அவர் ஓர் அறுவை சிகிட்சை நிபுணர்) யோசனையை கேட்டேன். அவர் அந்த நபரை உள் நோயாளியாக அனுமதித்து ஆபரேஷன் தியேட்டரில் வைத்து தான் சிகிட்சை செய்ய முடியும், மயக்க மருந்தும் கொடுக்க வேண்டும் என கூறினார்.

அந்த நபரின் நிதி நிலைமை சரியில்லை என்பதால் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் வைத்து சிகிட்சை செய்து விடலாம் என தீர்மானித்து அதற்கான ஆயத்தங்களை ஆரம்பித்தேன். மருத்துவமனை கண்காணிப்பாளர் எனது நண்பர் ஆதலால் அவரிடம் கூறி இவரை உள்நோயாளியாக இருக்க வைத்தேன். ஒரு வாரத்தில் இரத்த பரிசோதனைகள், எக்ஸ்ட்ரே, இசிஜி, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ என அனைத்தும் எடுத்து முடித்தனர். நான் மீண்டும் முருத்துவ கல்லூரி கண்காணிப்பாளரை பார்த்துக் கேட்டதில், இவருக்கு லிப்போசர்கோமா எனும் புற்றுநோய் கட்டி என்றும், குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதால் அக்கட்டியின் அடியில் இருக்கும் பெரிய இரத்தக் குழாய்களில் இருந்து இப்புற்று நோய் கட்டிக்கு வளர்ச்சி வரும் விதத்தில் நிறைய கிளைகளாக சிறிய இரத்தக் குழாய்கள் வேர் விட்டிருப்பதாக கூறினார்.

அறுவை சிகிட்சை செய்தால் அறுவை அரங்கிலேயே இரத்தபெருக்கு காரணமாக உயிர் பிரியவும் வாய்ப்பு உள்ளது என கூறினார். அவரை திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்திற்கு கூட்டிச் செல்லும்படி கூறினார். எனவே அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும் படி கூறினேன். இரண்டு நாட்கள் கழித்து அவர் வீட்டிற்கு சென்று பார்த்தேன். ஏற்கனவே அவர் எந்த மருத்துவ பரிசோதனைக்கும், மருத்துவ சிகிட்சைக்கும் தான் தயாராக இருக்கவில்லை என்றும், உங்களுக்காக மட்டுமே நான் அதற்கு சம்மதித்தேன். ஆண்டவர் என்ன நினைக்கிறாரோ அதன்படி நடக்கட்டும் என்று என்னிடம் கூறினார். ஒருநாள் விட்டு ஒருநாள் அத்திப்பழத்தை அரைத்து மேலே பூசுவதாகவும், சில சமயங்களில் நல்லெண்ணெய் பூசி வருவதாகவும் கூறினார்.

உண்மையிலேயே அவர் முகத்தில் மிகத்தெளிவு இருந்ததால் இது புற்றுநோயாக இருக்காது என்றும், நிச்சயமாக சிகிட்சை முடிந்தபின் என் வீட்டிற்கு அவரை வைத்து பெயிண்டிங் செய்ய வேண்டும் என்பது என் அவாவாய் இருந்தது.

சில நாட்களுக்கு முன் அவரது வீட்டிற்கு நான் மனைவி மற்றும் மகனோடு சென்று பார்த்தேன். உடல் சோர்ந்து, முகம் சோர்ந்து மிகவும் தளர்வாய் இருந்ததை கண்டு மனம் வருந்தினேன். அவரிடம் எதுவும் கூறவில்லை. அந்த கட்டியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இரத்தமும் சீழும் வருவதாக கூறினார். அருகிலிருக்கும் ஒரு கம்பௌண்டர் வந்து துடைத்து மருந்து வைத்து கட்டுவதாக கூறினார். தப்பித்தவறி இரவில் கட்டி உடைந்து இரத்தப் பெருக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்று கூறவே முடியாது.

ஒரு நபருடைய கடவுள் நம்பிக்கை என்பது எத்துணை ஆழமாக இருக்கக் கூடும் என்பதை என்னால் கணிக்க முடிந்தது இந்த நபரை பார்த்ததில். அத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் காண முடிந்தது. எதையும் தாங்கக் கூடிய ஓர் இதயத்தை ஆண்டவனால் கொடுக்க முடியும் என்பதை புரிய வைத்தார் அந்த மனிதர். அவரது நம்பிக்கை வீண் போக வேண்டாம் என்பதே எனது பிரார்த்தனை. முப்பது ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஒரு பிரிவை சேர்ந்த நபர் ஒருவர் டைபாய்டு காய்ச்சல் என தெரிந்தும் சிகிட்சை எடுத்துக்கொள்ள மறுத்து உயிர் விட்டது என் மனக்கண்ணில் தெரிந்தது. என் ஆத்ம திருப்திக்காக இந்த நபருக்கு சிறிய முயற்சி செய்துள்ளேன் என்று எண்ண முடிந்தது.

மனிதர்களால் நடத்த மற்றும் முடிக்க முடியாத சில காரியங்களை மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீகம் நடத்தக்கூடும் என்பது ஐதீகம் அல்ல அது முற்றும் உண்மை. ஏனெனில் அதே முப்பது வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த ஒரு வக்கீல் புற்றுநோயால் அவதிப்பட்டு அனைத்து மருத்துவர்களாலும் கைவிடப்பட்டு கடைசியில் திருவண்ணாமலையில் ஒரு துறவியிடம் ஆசிப்பெற்று முழு குணம் அடைந்ததும் எனது நினைவிற்கு வருகிறது.

எது எப்படியோ எல்லாம் நன்மையாக நடந்தால் போதும்.

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது...

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.