எண்ணங்களால் நோய்கள்

Dr. பா. நாகராஜன்

15th Oct 2019

A   A   A

சில நாட்களுக்கு முன் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியை எனது ஆலோசனை அறைக்கு அழைத்து வந்தனர். சுற்றுப்புற சூழ்நிலை எதுவும் தெரியாத நிலையில் அவர் இருந்தார். கேள்விக்கு பதில் இல்லை. முகத்தில் உணர்ச்சி வெளிப்பாடுகள் இல்லை. உடல் அசைவுகள் மிகவும் குறைந்திருந்தன. வாயிலிருந்து எச்சில் ஒழுகி கொண்டிருந்தது. கண்கள் அசைவற்று இருந்தது. ஒட்டுமொத்தமாக ஒரே வார்த்தையில் கூறுவதென்றால் ரோபோட் போன்று இருந்தார். ஏற்கனவே அவர் மனநோய் சிகிட்சைக்கான மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது.

அவரது கதை பின்வருமாறு. திருமணத்திற்கு முன்பும் பின்பும் ஒரு துணி மொத்த விற்பனை கடையில் விற்பனையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். கர்பிணியானதும் அந்த வேலையை விட்டுவிட்டு வேறொரு கடையில் ஓர் ஆறு மாதம் வேலை பார்த்திருக்கிறார். இவரது இப்போதைய நோயின் அறிகுறிகள் கீழ் வருமாறு,

1. தூக்கமின்மை

2. பசியின்மை

3. தன்னையும், குழந்தைகளையும் கவனிக்காது இருத்தல்

4. வீட்டு வேலைகள் செய்யாது இருத்தல்

5. திடீரென்று வேகம் வந்து தாறுமாறாக பேசுவது

6. தான் போட்டிருக்கும் துணியை கழற்ற முயற்சிப்பது

7. தன்னை நிர்வாணமாக படம் எடுத்துவிட்டார்கள் என்றும், தான் கெட்டு விட்டதாகவும் திரும்பத் திரும்ப கூறுவார்.

என்னிடம் வரும் முன்பே இரண்டு மனநல மருத்துவர்களை பார்த்துவிட்டு தான் வந்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது. அம்மருந்துகளாலேயே இவரது உடல்நிலை வித்தியாசமாக இருந்துள்ளது. ஆனால், மனநிலை, அதே நிலையில் தான் இருந்திருக்கிறது. பொதுவாக மக்களில் ஒரு பிரிவினருக்கு எத்தகைய மருந்துகளும் சட்டென ஒத்துக்கொள்ளாத நிலை உண்டு. உதாரணமாக சில நபர்களுக்கு மது சிறிதளவு உட்கொண்டால் கூட மிகுந்த போதையும், கூடுதல் கலாட்டாவும் செய்யக்கூடும். வேறு சிலரோ ஒரு முழு பாட்டில் (750 மி.லிட்டர்) குடித்தால் கூட குடித்த அடையாளமே தெரியாமல் அமைதியாக இருப்பதுண்டு. அவ்வாறே மருந்துகளிலும் சரியான முறையில் வேலை செய்யாமல் போவதுண்டு. அறுவை சிகிட்சைகளில் குறைவான மருந்திலேயே மயக்கம் வருவதுண்டு. சிலருக்கோ கூடுதல் மயக்க மருந்து கொடுத்தாலும் மயக்கம் வராமல் இருப்பதுண்டு. அவ்வண்ணமே அனைத்து மருந்துகளுக்கும். எண்ணங்களுக்கு அத்தனை வலிமையுண்டு.

எண்ணங்களே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. வாழ்க்கையின் உயர்வும் தாழ்வும் எண்ணங்களால் தான் ஏற்படுகிறது. ஆரோக்கியமும், வியாதியும் எண்ணங்களால் தான் ஏற்படுகிறது. மனவியாதியும், உடல்வியாதியும் கூட எண்ணங்களால் ஏற்படுகிறது. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட எண்ணங்களால் ஏற்படும் உடல் வியாதி என்னும் ஒரு பகுதியே உள்ளது (Psychosomtic medicine). சாதாரண சளி மற்றும் ஆஸ்துமாவில் இருந்து புற்றுநோய் வரை இதில் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. இப்பொழுது ஜனத்தொகையில் பெரும்பங்கினரை அவதிப்பட வைக்கும் நோய்களாக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு (பெண்களுக்கு மட்டும்) இவற்றை முக்கியமாக கருதுகின்றனர். பத்தில் ஒரு பங்கினர் இந்நோய்களில் அவதிப்படுவதாக சமீபத்திய கணக்கு கூறுகிறது.

இப்பெண்ணிற்கு தன்னை யாரோ கவனிக்கிறார்கள், பின் தொடர்கிறார்கள் என எண்ணி தான் எதையோ இழந்துவிட்டோம் என்றும் உறுதி செய்து சிறுபிள்ளை தனமான உடையை கழற்றும் பழக்கம் வந்திருக்கிறது. மிக சிறிய குழந்தைகளுக்கு உடலில் போட்ட உடைகளை கழற்றும்படி அடம்பிடிக்கும் மனநிலை உள்ளது. உடை இல்லாதபோது மிக சுதந்திரமாக இருப்பதாக எண்ணிக்கொள்ளும் இப்பெண் மனதளவில் மிக குறைந்த வயதுள்ள குழந்தையாக பாவித்துக் கொள்கிறார்.

இதற்கு அடிப்படை காரணம் என்னவென்று முழுவதும் குணமடைந்த பின் ஆற அமர இருந்து கேட்டு ஆராய வேண்டும். ஒன்று இரண்டு அமர்வுகளில் முடியக்கூடிய சமாச்சாரம் அல்ல இது. இப்பொழுது அப்பெண்ணிற்கு உடல் முழுவதும் தோலில் ஒவ்வாமை ஏற்பட்டு மடிப்பு இடங்களில் புண்ணாகி இருந்தது. சிறிது காய்ச்சலும் இருந்தது. ஒட்டுமொத்தமாக மனநிலையும், உடல்நிலையும் சரியில்லாத நிலையில் சிகிட்சை அளிப்பது மிகசிக்கலான ஒன்று.

மனதில் குழப்பம் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை மிக சுலபமாக வந்துவிடுகிறது. எதையும் ஏற்றுக்கொள்ள அதாவது வெற்றி - தோல்வி, நன்மை - தீமை, லாபம் - நஷ்டம், நட்பு - விரோதம், பிறப்பு - இறப்பு, நல்லநேரம் - கெட்டநேரம் இப்படியாக எதையுமே இருமை படுத்தாமல், பிரிக்காமல் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஒருவருக்கு இருப்பின், அவரால் உடலிலோ மனதிலோ குழப்பம் இன்றி உற்றார் உறவினரிடையே எவ்வித பிரச்சனையும் இன்றி வாழ்க்கை நடத்த இயலும் என்பது உண்மை.

உடலில் செயல்பாடுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடும். அவ்வாறே இந்த பெண்மணிக்கும் எந்த மருந்துகளும் சட்டென்று உடலில் பிடித்து சேர்ந்து நல்ல விதமான மாற்றங்களை ஏற்படுத்தாத ஒரு நிலை இருந்தது. மருந்துகள் எவ்வளவு கூட்டிக் கொடுத்தாலும் சரியான சிகிட்சைக்கு வந்து சேராது என தெரிய வந்தது. இருப்பினும் இதுவரை கொடுக்காத மாத்திரைகளை கொடுத்து அனுப்பினேன். மூன்று நாட்கள் ஆன பிறகும் எந்த மாற்றமும் தெரியாத நிலையில் மருத்துவ மனையில் உள்ளிருப்பு நோயாளியாக சேர்த்து மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினோம். அவரை உள்ளிருப்பு நோயாளியாக சேர்த்த பிறகுதான் தெரிந்தது, அவருக்கு எவ்வளவு தூக்க மாத்திரைகள் கொடுத்தாலும் தூக்கம் வருவதில்லை என்று.

ஒருவார காலத்தில் சில நேரங்களில் நல்லவிதமாக பேசுவது தெரிய வந்தது. எனவே அதே மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு அனுப்பினேன். திரும்பவும் நான்கைந்து முறை கூட்டி வந்தனர். ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக நோயின் தன்மையில் முன்னேற்றம் தெரிய வந்தது. எனக்கும் மகிழ்ச்சி, குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி.

ஆனால், அது அதிக நாள் தொடரவில்லை என தெரியவந்தது. அப்பெண் அதுவரை தன் தாயின் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இவர் நன்றாகத்தானே இருக்கிறார் என எண்ணி கணவர் வீட்டிற்கு கூட்டிச் சென்றிருக்கின்றனர். ஏனெனில், கணவரது வீட்டில் கணவரின் இளைய சகோதரருக்கு திருமணம் நிச்சயமாகி அதற்கான நிகழ்ச்சி நடக்க இருப்பதாலும் இவர் வீட்டின் மூத்த மருமகளாக இருப்பதாலும் இவரது வருகை கட்டாய தேவையாக இருந்தது. அந்நிகழ்ச்சியில் இவர் வழக்கம் போல் தான் அணிந்திருந்த உடைகளை கழற்ற ஆரம்பித்திருக்கிறார்.

இப்பெண்மணி தன் உடலில் இருக்கும் துணியை கழற்றுவதைப் பற்றியும், என்னை மன்னித்துவிடுங்கள், என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதையும் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம். இது மட்டுமின்றி சி சி டிவி பற்றியும் அடிக்கடி பிதற்றுகிறார். இது மூன்றையும் ஆராய்ந்து அலசி பார்த்தால் கீழ்காணும் சில உண்மைகளை அனுமானிக்கலாம். இப்பொழுது அனைத்து கடைகளிலும், நிறுவனங்களிலும் சி சி டிவி வைத்து கண்காணிப்பதை காண்கிறோம். நிறுவனங்களில் திருட்டுக்கள் நிகழாமல் இருக்க இவ்வாறு பொருத்துகின்றனர். இதன் காரணமாக பயந்த சுபாவம் உள்ள சந்தேகப்படும் பெண்மணிகளுக்கு சிலசமயம் வித்தியாசமான எண்ணங்கள், கற்பனைகள் மனதில் பதிந்துகொள்ள வாய்ப்புள்ளது. ஒரு எண்ணம் மனதில் பதிந்துவிட்டால் அதை பற்றிய கற்பனைகளும், ஆழமான நம்பிக்கைகளும் கட்டிடம் போல் எழுந்து விட வாய்ப்புள்ளது.

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்Error
Whoops, looks like something went wrong.