தொடர்புடைய கட்டுரை


தேவதாரு போல் காட்சியளிக்கும் “யு” மரம்

Dr. பா. சாம்ராஜ்

20th Jul 2018

A   A   A

ஆங்கிலத்தில் காமன் யூ (Common Yew) என்று அழைக்கப்படும் இது ஒரு பசுமை நிறைந்த புனிதமரம். இதன் அறிவியல் பெயர் டாக்ஸஸ் பக்கற்றா (Taxus baccata) என்பதாகும். இது சாதாரணமாக 15 மீ உயரத்திற்கு வளருகிறது. இதன் கிளைகள் 2.5 - 4 செ.மீ நீளத்தில் தட்டையாக மேல்பாகத்தில் பளபளப்பாகக் காணப்படும். இளம் மஞ்சள் கலந்த தவிட்டுநிறத்தில் அல்லது இரும்புத்துருவின் அடர்த்தி சிவப்பு நிறத்தில் இலைகளின் அடிப்பாகம் உள்ளது. பூக்கள் நீள உருளையாக, தண்டில் தனியாகவோ (ஆண் பூ) அல்லது தண்டில் ஒற்றையாகவோ (பெண் பூ) காணப்படுகிறது. இதன் கனிகள் ஒற்றை விதையாக 0.8 செ.மீ நீளத்தில் சிவப்புநிற கூழ்மத்தில் உள்ளன.

மார்ச்சிலிருந்து மே மாதம் வரை பூக்கள் காணப்படுகின்றன. செப்டம்பரிலிருந்து நவம்பர் வரை இதன் கனிகளைக் காணலாம். இமயமலையின் மிதவெப்பப்பிரதேசத்தில், 1800 - 2300 மீட்டர் உயரத்திலும், மேகாலயா, மணிப்பூர் பிரதேசங்களில் 1500 மீட்டர் உயரத்திலும் இது வளர்ந்தோங்குகிறது. இதன் இனவிருத்தி என்பது விதைகள் முலமாக மட்டுமே நடைபெறுகிறது.

இதன் தடி மரச்சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மரத்தில் சிற்பவேலைகள், தடுப்புகள், விளையாட்டுப்பொருட்கள், சாதாரண பென்சில் வகைகள் செய்யப் பயன்படுகின்றன. இதன் இளம் இலைகள் மற்றும் குருத்துகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவித மருந்துப் பொருள் மருத்துவ பயன்பாடுள்ளது. மரத்தின் பல பாகங்களிலிருந்தும் பிரித்துக் கிடைக்கப்பெறும் சாறுப்பொருள். கேசவர்த்தினி, சவரம் செய்யப் பயன்படும் கிரீம் போன்ற அழகுசாதனப் பொருட்களில் பயன்படுகிறது. இந்த மரத்தின் கிளைகள் மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்க வெட்டப்படுகிறது.

இந்தமரம் வாசனைப் பொருளாக எரித்துப் பயன்படுத்தப்படுகிறது. இதன் கிளைத்தண்டுகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமய சார்பின் விழாக்களில் வீடுகளை அலங்கரிக்கிறார்கள். (குமாவுஸ்). இமாச்சலம் மற்றும் காசிக்குன்று பிரதேசங்களில் இந்த மரம் மிகத்தெய்வீகமான மரமாகக் கருதப்பட்டு தேவதாரு 'கடவுளின் மரம்' என அழைக்கப்படுகிறது. இது வேதாகமத்தில் வேத ஆராய்சியாளர்களால் தேவதாரு, கேதுரு போன்ற மரங்களோடு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

 


பெப்ரவரி 2018 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.