உயிர்

Dr. பா. நாகராஜன்

20th Jun 2018

A   A   A

இதில் எனக்கு உடன்பாடு இல்லை. உயிர், உடல், வாழ்வு இவை மூன்றும் இருந்தால் மட்டுமே உணர்ச்சிகளும், உணர்வுகளும் நமக்கு தோன்ற முடியும். ஆதி மனிதன் உணர்ச்சிகளுடனும், உணர்வுகளுடனும் உயிர் வாழ்ந்திருக்க கூடும். வாழ்க்கை என்பது சமூகம் என்ற ஒன்று தோன்றிய பின்னரே முழுமை அடைந்திருக்க முடியும். ஆதி மனிதனுக்கும் மூன்று வயதிற்குள் இருக்கும் குழந்தைக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிகளுக்கும், உணர்வுகளுக்கும் ஓசையை கூட்டிய பின்னரே அது வார்த்தையாகவும், வார்த்தைகள் வாக்கியங்களாகவும், வாக்கியங்கள் பின்னர் மொழியாகவும் பரிணாமம் எடுத்தது.

மொழிக்கு இலக்கணங்கள் சேர்ந்தபின் இலக்கியங்கள் உருவாயின. கவிதைகள் உருவாயின. புராணங்கள் உருவாயின. எழுத்தே இல்லாத எத்தனையோ மொழிகள் நம் நாட்டில் பேசப்படுகின்றன. அம்மனிதர்கள் காட்டுவாசிகளாக இருக்கின்றனர். எழுத்து அற்றவைகளாக இருக்கும் மொழிகள் இலக்கியம் அற்றவை ஆகும். ஒட்டுமொத்தமாக கற்பனை குறைந்ததாகவும் இருக்கக்கூடும். அம்மொழிகளில் உணர்ச்சியும், உணர்வுகளுமே முதன்மையாக இருக்கின்றதாம்.

கற்பனைகள் இல்லையெனில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இருக்காது. கற்பனைகள் இல்லையெனில் எதிர்காலம் பற்றிய நினைவுகள் எழாது. கற்பனைகள் இல்லையெனில் கடந்த காலம் பற்றிய உணர்வுகள் எழாது. எண்ணம், சொல், செயல் இவை மூன்றிலும் எண்ணங்களே அளவிலடங்கா! சொற்களோ சில ஆயிரங்கள், செயல்களோ சில நூறு மட்டுமே. செயல்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் தரும் நபர் யாருமே தன் வாழ்வின் எல்லைக்கு செல்லவே மாட்டார்கள். நான் எல்லை என்று கூறுவது வாழ்வின் முடிவாகிய உயிரைப் போக்குதலே ஆகும்.

உலகம் முழுவதும் எத்தனை வகையான நோய்கள், எத்தனை வகையான மருத்துவங்கள். ஒரு சிறு நோயிலிருந்து கடுமையான நோய்வரை நூற்றுக்கணக்கான சிகிட்சை முறைகள். தம் உயிரை காப்பதற்காக லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் செலவழிக்கவும், ஏன் தனது சொத்து முழுவதும் அழிந்தாலும் கூட உயிரைப் பிரிவதற்கு துணிய மாட்டார்கள்.

இத்தகைய உயிரை கண நேரத்தில் மாய்த்துக்கொள்வதற்கு எத்துணை துணிகரம் ஒருவருக்குத் தேவை. அந்த துணிகரத்தை, மன உறுதியை, தற்கொலை வெறியை ஏன் திசைமாற்றி உயிர் வாழ்வதற்கு பிரயோகிக்கக் கூடாது. சிறு வயதில் இருந்தே நாம் பேய், பிசாசு, மந்திர தந்திரம் என ஏகப்பட்ட மூடநம்பிக்கைகளை நம் சமூகத்திடமிருந்து பெற்றிருக்கிறோம். ஆனால் ஒரு மனிதனுடைய முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு சமூகம் காரணமாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. குழந்தைகளுக்கு முழுமையான ஆளுமை வளர்ச்சியை அவர்களது பெற்றோர்களே உருவாக்கித் தர கடமைப்பட்டவர்கள். ஆனால் பெற்றோர்களே அவ்வகையிலான ஆளுமையை பெற்றிருக்காவிட்டால் அந்நபர் தன்னைத் தானே வளர்த்துக்கொள்ள முயற்சித்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் உயிரை மாய்த்துக் கொள்வது என்பது மிக கேவலமான ஒரு காரியமாகும். எனக்கு தெரிந்தவரை கத்தோலிக்க மதத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களுக்கு உடலை அடக்கம் செய்ய அவர்களது கல்லறைத் தோட்டத்தில் இடம் கிடைக்காது என நினைக்கிறேன்.

தற்கொலை என்பது தோல்விகளுக்கு, நஷ்டங்களுக்கு, கஷ்டங்களுக்கு நம் மனதில் இருந்தும், மூளையிலிருந்தும் நடைபெறக்கூடிய ஒரு எதிர் செயல் ஆகும். ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு கஷ்ட நஷ்டங்களையும், தோல்விகளையும் தன்னுடைய ஆளுமையை செதுக்குதல் போன்று எடுத்துக் கொள்ளுதல் நலமாகும். அடிபடாத இரும்பு, தங்கம் முதலிய உலோகங்களோ, வெட்டப்பட்டு சீராக்கப்படாத மரங்களோ, பட்டைத் தீட்டப்படாத வைரமோ, உழப்படாத நிலமோ, ஏன் உழைக்காத மனிதனும் கூட உயர் நிலையை அடைவதில்லை.

பசி வந்திட பத்தும் பறந்துபோகும் எனக் கூறுவர். அந்தப்பசிக்கு காரணம் அந்த உயிருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம். உயிரைக்கொடுத்து ஒரு மனிதன் என்ன சாதிக்க முடியும். நான் இத்தனை காரணங்களை இவ்வாறு கூற காரணமே, கடந்த மாதத்தில் நான் பத்திரிகையில் கண்ட இளம் வயதில் செய்துகொண்ட தற்கொலைகளே.

1. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பு படிக்கும் மாணவன் கல்லூரியில் இடைநீக்கம் செய்ததன் விளைவாக தற்கொலை செய்து கொண்டான்.

2. கள்ளக்குறிச்சியில் இயற்கை மற்றும் யோகா சிகிட்சை மருத்துவக் கல்லூரியில் மூன்று பெண்கள் கூட்டாக கயிற்றை கட்டிக் கொண்டு கிணற்றில் வீழ்ந்ததாக செய்தியில் கண்டேன். இந்த இரண்டு சம்பவங்களிலும் எந்த காரியம் அவர்களை தன் உயிரை மாய்க்கும் அளவிற்கு தூண்டியதோ, அக்காரியங்களை எதிர்த்து நிற்க வேண்டுமல்லவா! இப்பரந்த உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று எந்த வேலையிலாவது ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்திருக்க முடியும்.

நம் நாட்டில் ஒவ்வொரு நிறுவனங்களிலும் ஜாதி, மத, அதிகார, அரசியல் துஸ்பிரயோகம் இருக்கிறது, இல்லையென்று கூறவில்லை. ஆனால் தன் உயிரை மாய்க்கும் நிலைக்கு செல்ல வேண்டுமா? என்பதுதான் எனது கேள்வி. இவ்விரண்டு சம்பவங்களிலும் அவர்களது அணுகுமுறை சரியானது அல்ல என்று மனநல மருத்துவராக கூறுகிறேன்.

மூன்றாவது சம்பவமான அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிர் நீத்தது. தற்கொலையா? அல்லது விபத்தா? எனக் கூற இயலவில்லை. இரண்டில் ஏதாவது ஒன்று நடந்திருக்கலாம். எதுவாயினும் அம்மாணவியின் கவனமின்மை என்றே கூற இயலும். இறப்பதற்கு சற்றுமுன் ஒரு மாணவனிடம் பேசியதாகவும், மன உழைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. படிக்க அல்லது தூங்க செல்லும், இரவு நேரத்தில் மாடியில் அலைபேசியில் பேசிக்கொண்டு நடப்பது மிக ஆபத்தானதாகும். சமீபத்தில் இளைஞர்கள் மத்தியில் பித்து பிடித்த காரியம் செல்ஃபி என்பதாகும். செல்ஃபி எடுத்து பாலத்தில் இருந்து விழுவது, பள்ளத்தாக்கில் விழுவது, எதிரில் வரும் ரயிலை படம் எடுத்து தண்டவாளத்திலே அடிபட்டு சாவது, இம்மாதிரியான செய்திகளை அடிக்கடி பத்திரிகைகளில் காண முடிகிறது.

உயிர் என்பது அநேக சமயங்களில் அநேக மனிதர்களுக்கு மிக சாதாரணமாக தோன்றக் கூடும். உயிரைக் கொடுத்து இந்த காரியம் செய்தேன் என்று கூறுவதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு நபரும் வாழ்வில் முதன்மை இடம் கொடுக்க வேண்டியது உயிருக்கு மாத்திரமே. உயிருக்கு மரியாதை கொடுத்து மிக சிரத்தையும், கவனமும் கொண்டு அன்றாட வாழ்வை வாழ்வதே ஒரு மனிதனின் கடமையாகும். மானம் போய்விட்டது என ஒவ்வொருவரும் உயிரை மாய்த்துக்கொண்டால் திரை உலகிலும், அரசியல் உலகிலும் ஒருவரைக்கூட உயிருடன் காண முடியாது. இந்த இரு தரப்பினருமே ‘கிசு கிசு’ களுக்கு சொந்தக்காரர் ஆவர். உம்மன்சாண்டிகளும், சரிதா நாயர்களும் சகஜமாக உலா வரும்போது உனக்கென்ன?

எவரும் கவரிமானாக இருக்க வேண்டாம்.

 


மார்ச் 2016 அமுதம் இதழில் வெளியானது. . .

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.