26th Jul 2018
வருடந்தோறும் திருவள்ளுவர் நாளன்று கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலையின் பாதங்களில் மலர்தூவி மரியாதை செலுத்துவதற்காக தமிழறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து படகில் அழைத்து செல்வார் திருக்குறள் கேசவசுப்பையா அவர்கள். நானும் குமரித்தமிழ்வானம் அமைப்பின் பொறுப்பாளர்களும் வருடந்தோறும் அவரோடு படகில் சென்று வருவோம். இவ்வருடம் 16.1.2018 அன்று அவர் கன்னியாகுமரிக்கு அழைத்து செல்லவில்லை. ஏன் என்று வினவியபோது திருக்குறளாருக்கு உடல்நிலை சரியில்லையென்று பதில் வந்தது. 7.2.2018 அன்று தனது தமிழ்ப்பணியை நிறைவு செய்துவிட்டு ஆழ்ந்த துகில் கொண்டார். என் போன்ற தமிழ் ஆர்வலருக்கு பேரிழப்பாகவே உள்ளது. அவர் விட்டுச்சென்ற தமிழ்ப்பணியை தொடர்ந்து செயலாற்ற தமது அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு கட்டளையிட்டு விடை பெற்றுள்ளார்.
தனது 86 வயதிலும் தீராத தமிழ்ப் பற்றோடு சுறுசுறுப்பாகச் செயல்பட்ட திருக்குறள் கேசவசுப்பையா அவர்கள் உருவத்தில் சிறிய, அறிவார்ந்த மனித யானை. பல்லாற்றல் மிக்க பண்பாளர். சிரித்த முகம். உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசாத் தன்மை, அரவணைக்கும் பாங்கு, திருவள்ளுவருடைய புகழ்பாடும் பண்பு, பொதுப்பணிகளில் நாட்டம் ஆக அவர் ஒரு பொது அறிவுக்களஞ்சியம். 32 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்றாலும், தனது சமூகப் பணிகளில் அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.
1996 இல் திருக்குறள் ஆய்வு மையம் எனும் அமைப்பை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக இருந்து இறுதி வரை திருக்குறளின் புகழைப் பாடியவர். 26.12.1999 இல் கன்னியாகுமரியில் தனது சொந்த செலவில் முதன்முதலில் திருக்குறள் மாநாட்டை நடத்தியவர். இம்மாநாட்டில் தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரான வ. அய். சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 1992 இல் திருக்குறள்பால் உள்ள ஈடுபாட்ட்டால் கோட்டாறு, நாராயணகுரு ஆங்கிலப் பள்ளியில் வெள்ளிக் கிழமைத்தோறும் காலை 8.30 முதல் 9.30 வரை 5 ஆண்டு காலம் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தார். நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் கருத்தரங்குகள் நடத்தி வரவே, சென்னையை சார்ந்த தமிழறிஞர் மோகனராசு நடத்தி வரும் உலகத் திருக்குறள் மையத்தோடு தொடர்பு கொண்டு அங்கு நடைபெறும் கருத்தரங்கு, விழாக்களில் பங்கேற்ற காரணத்தால் 1995 இல் ‘திருக்குறள்’ எனும் பட்டம் உலகத் திருக்குறள் மையம் வழங்கியது. குமரிமாவட்டத்தில் நடைபெறும் சைவ சித்தாந்த வகுப்புகளில் ‘திருக்குறளும் சைவ சித்தாந்தமும்’ எனும் தலைபிலும், இரண்டரை மணிநேரம் பல்சமய உறவு அமைப்பில் ‘திருக்குறளும் விவிலியமும்’ எனும் தலைப்பிலும் சீறிய உரையாற்றியுள்ளார். நாஞ்சில் நாதம் தொலைக்காட்சியிலும் ‘நாள்தோறும் ஒரு திருக்குறள்’ எனும் தலைப்பில் நூற்றுக்கணக்கான திருக்குறளுக்கு விளக்கமளித்துள்ளார். திருநயினார் குறிஞ்சியில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டிலும் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
1999 இல் விஸ்வகர்ம சேவா சங்கத்தை தோற்றுவித்தார். அதன் ஆரம்ப காலத்தில் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு வானுயர சிலையை வடிவமைத்த வாஸ்து விஞ்ஞானி விஸ்வகர்ம சிற்பி வை. கணபதி ஸ்தபதி அவர்களுக்கு குமரிமாவட்டம் தக்கலையில் மாபெரும் பாராட்டு விழா நிகழ்த்தி காட்டினார். தமிழகமே வியக்கும் வண்ணம் நடைபெற்ற இவ்விழா திருக்குறள் கேசவ சுப்பையா அவர்களின் திறமைக்கு நற்சான்று ஆகும். 1997 ஜனவரியில் கேரளாவில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘தமிழ் இலக்கியத்தில் மயன்’ என்ற கட்டுரையையும், 1998 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவனந்தபுரம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற அகில கேரள விஸ்வகர்ம சமாஜத்தில் கலந்துகொண்டு பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விஸ்வகர்மா என்ற கட்டுரையையும் சமர்பித்து தான் தோன்றிய குலத்திற்கு பெருமை சேர்த்தார்.
திருமந்திர ஆய்வு மையத்தை நிறுவி 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழும் திருமூலர் அருளிய திருமந்திரத்தை மாதம் இரண்டு நாட்கள் வகுப்பு நடத்தி அன்பர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராது இலவசமாக விரிவுரை ஆற்றிவந்தார். நன்னெறி மன்ற மாநாட்டில் திருமந்திரம் பற்றி ஆய்வுரை நிகழ்த்திய கேசவ சுப்பையா அவர்கள், பிரம்மஞான சங்கத்தில் ‘திருமந்திரத்தில் ஒரு வார்த்தை’ எனும் தலைப்பில் நான்கு மணிநேரம் ஆற்றிய உரை அன்னாரது சித்தாந்த அறிவிற்கும் ஆற்றலுக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. மெய்கண்டார் சைவ சித்தாந்தப் பேரவையில், ‘தேவாரத்தில் சைவ சித்தாந்தம்’ எனும் தலைப்பில் அருமையாக உரையாற்றி இன்புறச் செய்தார்.
1983 இல் ‘குமரிக்கலைக்கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கி வருடந்தோறும் 3000 பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொள்ளும் 25 விதமான போட்டிகளை நடத்தி பிரபலங்களை கொண்டு பரிசுகளை வழங்கியுள்ளார். குமரிக்கலைக் கழகத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது அப்போதைய மத்திய இணை அமைச்சர் க. வேங்கடபதி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி விழா மலரும் வெளியிட்டுள்ளார். விழாவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நாட்டக மேதைகள் டி.கே. சண்முகம், டி.கே. பகவதி, பூதை. அருணாச்சலம் அண்ணாவி, அளத்தங்கரை துரைசாமி நாடார் போன்ற மறைந்த கலைஞர்களின் படங்களையும் திறந்து வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுமையும் புரட்சியும் ஏற்படுத்திய மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பெயரில் ‘பாரதியார் சங்கம்’ அமைத்து எட்டு வருடங்களாக மிகச்சிறப்பாக நடத்தியுள்ளார். மாதந்தோறும் மூன்றாம் சனிக்கிழமைகளில் சிறந்த தமிழ் அறிஞர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து பாரதியின் கருத்துக்களை உரைகளின் வாயிலாகவும் பட்டிமன்றம் வாயிலாகவும் பரப்பி வந்தார். பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த பாரதியின் சிந்தனைகளை சிரமேற்று பாரதியார் சங்கத்திலும் சரி, குமரிக்கலைக் கழகத்திலும் சரி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் சக்தியை மதிக்கும் புதுமை பாரதியாகவே திகழ்ந்தார். 1.6.2012 அன்று இலங்கைத் தமிழ் சங்கமும், சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து கொழும்பு தமிழ் சங்கத்தில் நடந்த கருத்தரங்கில் ’பாரதி புகழ் பரப்புநர் பட்டயம்’ இலங்கை இந்தியத் தூதரகத் தலைமைச் செயலர் ஜஸ்டின் மோகன் வழங்கி சிறப்பித்துள்ளார்.
திருக்குறள் கேசவ சுப்பையா அவர்கள் ‘உணர்வும் நினைவும்’ எனும் கவிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் மறைந்த எழுத்தாளர் சுந்தரராமசாமி கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். ஐந்திரமா! ஐந்திறமா, எனும் ஆய்வு நூலையும் 2014 ஆம் ஆண்டில் ‘தென்பாண்டி தந்த திருவள்ளுவர்’ எனும் ஆய்வு நூலை எழுதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முனைவர் மோகனராசு, முனைவர் பா. வளன் அரசு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நூலுக்கு கலைமாமணி வி.ஜி.சந்தோஷம், அருட்செல்வர் நா. மகாலிங்கம், வரலாற்று ஞாயிறு வே.தி.செல்லம், வெள்ளிமலை சிவா, பா. வளன் அரசு, ஔவை நடராசன், கீழப்பாவூர் ஆ. சண்முகையா ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர். இந்நூலில் திருவள்ளுவர் பிறப்பிடம் குறித்து தனது ஆய்வை கேசவ சுப்பையா நிலைநிறுத்தியுள்ளார்.
திருக்குறள் கேசவ சுப்பையாவின் சேவையைப் பாராட்டி 2008 இல் சர்வதேசத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மலேசியா, கோலாலம்பூரில் ‘மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. 2011 இல் சர்வதேசத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம், 56 நாடுகள் பங்கேற்ற அமைதி மாநாட்டில் ‘ஆசிய நட்சத்திரம்’ எனும் பட்டத்தை அளித்து சிறப்பித்தது. மேலும் தமிழ்மாமணி, மனிதநேயர், திருக்குறள் திலகம், சேவைச்செம்மல், அருங்கலை வித்தகர், இலக்கியத் தென்றல், சமுதாயச்சிற்பி போன்ற எண்ணற்ற விருதுகளை பல அமைப்புகள் இவருக்கு வழங்கி பெருமைப் படுத்தியுள்ளது. 5.8.2007 அன்று தனது பவள விழாவை நாகர்கோவில், தங்கவேல் திருமண மண்டபத்தில் தமிழ் அறிஞர்கள் புடைசூழ கொண்டாடி மகிழ்ந்துள்ளார். திருக்குறளாரின் 85 வது அகவை நிறைவு பாராட்டு விழா நாகர்கோவில் எஸ்.ஏ.ராஜா திருமண மண்டபத்தில் 25.2.2017 அன்று நடைபெற்றது. அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு திருக்குறள் கேசவ சுப்பையா அவர்களை வாழ்த்தினார்கள். இவ்வாறு தன் வாழ்நாளில் பல்வேறு பணிகளை ஆற்றிய திருக்குறள் கேசவ சுப்பையா அவர்கள் கடிகை ஆன்றணி போன்ற திறமை மிக்க பல்வேறு இளைஞர்களையும் இனங்கண்டு கொண்டு அடுத்த தலைமுறைக்கும் தன்னைக் கடத்தியுள்ளார்.
நாகர்கோவில் குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற பாரதி விழாவிலும் நான் எழுதிய ‘அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம்’ நூல் வெளியீட்டு விழாவில் திருவள்ளுவர் படத்தை திருக்குறள் கேசவ சுப்பையா அவர்கள் திறந்து வைத்து உரையாற்றிய நிகழ்வும் என் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும்.
மார்ச் 2018 அமுதம் இதழில் வெளியானது.
Copyright © 2018 Amudam Monthly Magazine