தொடர்புடைய கட்டுரை


கால்நடைத் தீவனப்பயிர் சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்

Dr. பா. சாம்ராஜ்

19th Jun 2018

A   A   A

வேளாண்மையுடன் இணைந்தது கால்நடை வளர்ப்பு. கால்நடை வளர்ப்பின் அவசியத்தை நம் நாட்டு விவசாயிகள் நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் கால்நடைகளை பேணிக் காத்தனர். கால்நடைகள் உழவு தொழிலுக்கும், விவசாயத்துக்கும் அதிகமாக தேவைப்பட்டது. மேலும், அதன் மூலம் அவர்களுக்குத் தேவையான பால், இறைச்சி போன்ற சக்தி நிறைந்த உணவுப்பொருட்கள் கிடைத்தன. ஆகவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்களையும் வளர்த்தனர். ஆடு, மாடுகள் வளர்ப்பின் மூலம் கிடைக்கக்கூடிய சாணம் வேளாண்மையை பெருக்கி மக்களின் வாழ்வையும் மேம்படுத்தியது. குறிப்பாக ஒரு டண் சாண உரம், 1 ஹெக்டேருக்கு கூடுதலாக 50 கிலோ அதிகமாக மகசூல் கொடுப்பதாக கணித்துள்ளனர். ஆகவே தான் கால்நடைகளை பெருக்க அதற்கு தகுந்த தீவனப் பயிர்களையும் நாம் விஞ்ஞான ரீதியில் சாகுபடி செய்ய வேண்டும்.

உலகில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையில் 5 ல் 1 பாகம் நம் நாட்டில் இருந்த போதிலும், அவற்றில் இருந்து நமக்கு தேவையான பாலின் அளவான 280 கிராமுக்கு பதில் 180 கிராம்தான் கிடைக்கின்றது. இதற்கு காரணம் கால்நடைகளுக்கு தேவையான சத்து நிறைந்த தீவனத்தை கொடுக்காததே ஆகும். அவற்றிற்கு 50% தீவனம்தான் நாம் கொடுக்கின்றோம். ஆகவே தீவன உற்பத்தியை அதிகரிக்க தீவனப்பயிர்கள் சாகுபடித் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நிலப்பரப்பையும் அதிகரிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இது சாத்தியம் இல்லை. காரணம் நமக்கு அதிக புல்நிலம் கிடைப்பது அரிது. இருக்கும் நிலங்களிலோ அல்லது தரிசு நிலங்களிலோ இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம்.

நம் இந்திய நாட்டில் விவசாய நிலங்கள் பாரம்பரியமாக பராமரிக்கப்பட்டு வருவதால், அநேகமாக ஒவ்வொரு விவசாயிக்கும் ஒருசில ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த விவசாய நிலத்தில் பயிர் செய்வதற்கும், தன்னுடையத் தேவைக்கு வேண்டிய பால்வளத்தைப் பெருக்குவதற்கும் சில கால்நடைகளை இந்திய விவசாயிகள் பராமரித்துத்தான் ஆக வேண்டும். விவசாய நிலத்திலிருந்து மகசூல் குறைவாகக் கிடைக்கும் நிலையில் கால்நடைகளைப் பராமரிக்கும் செலவு அதிகமாகிறது. தீவனங்களை விலை கொடுத்து வாங்கி கால்நடைகளுக்குத் தர இயலாத நிலை ஏற்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒவ்வொரு விவசாயியும் தன்னிடம் உள்ள விவசாயம் செய்ய இயலாத நிலத்தில் தீவனப் பயிர்களையோ அல்லது தீவன மர வகைகளையோ வளர்க்கும் முறையை அறிந்து அதற்கேற்ப தனது சாகுபடி முறையை மாற்றித் தரிசாகக் கிடக்கும் நிலத்தை வளம் பெறச்செய்ய வேண்டும். நமது நாடு இயற்கை வளமும், செழிப்பும் நிரம்பப் பெற்றது. அதனால் தட்பவெப்ப நிலைக்கேற்ப அதிக மகசூல் தரும் தீவனப்பயிர்களையும், புதிய இரகங்களையும் பயிர் செய்து தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக இலாபமும் பெற்றிடலாம்பசுந்தீவனம்

பசுந்தீவனம் என்பது பச்சைப்புல் மட்டுமல்லாது மரங்களின் இலைகளும் தளைகளும் அடங்கியதே ஆகும். ஆதலால், தீவனப் புற்களையும், தீவன மரங்களையும், வேளாண் பயிர்களுடன் இணைத்து வளர்க்கும் வேளாண் காடுகளை அமைத்து பசுந்தீவனப் பற்றாக்குறையைப் பெருமளவு தவிர்க்கலாம். பசுந்தீவனத்தில் மூன்றில் இரண்டு மடங்கு பயறு வகை அல்லாத தீவனப் புற்களும், தானியத் தீவனப் பயிர்களும், மீதமுள்ள மூன்றில் ஒரு மடங்கு பயறு வகை தீவனங்களையும் தகுந்த காலத்தில் அறுவடை செய்து தகுந்த அளவு கொடுத்தால், பசுக்கிடாரிகள் 15-18 மாதங்களில் பருவமடைந்து, 200 முதல் 250 கிலோ உடல் எடையும் கூடி, 28-30 மாதங்களில் முதல் கன்றை ஈனும். மேலும் 12-14 மாத இடைவெளியில் மீண்டும் மீண்டும் கன்றுகளை ஈன்று சிறந்த பால் உற்பத்திக்கு வழி வகுக்கும்தீவனப் புற்கள்

இறவையில் சாகுபடி செய்யும் தீவனப் புற்கள் நேப்பியர் புல், கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல் ஆகியவை ஏற்றவை. இவை அனைத்து மண் வகைகளிலும், தட்பவெப்ப நிலைகளிலும் நன்றாக வளர்கின்றன. சதுப்பு நிலமாக இருந்தால் எருமைப்புல் அல்லது நீரடிப்புல்லான பாராப்புல் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்மானாவாரிக்கு ஏற்ற புற்கள்

மானாவாரியில் ரோட்ஸ்புல், ஆஸ்திரேலியாப்புல், கொழுக்கட்டைபுல், நீலக்கொழுக்கட்டைபுல், மார்வல்புல், ஊசிபுல் மற்றும் தீனாநாத்புல் ஆகியவை முக்கியமானவை. இவை வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை. மேலும், இவை 3 முதல் 5 அறுவடைகளில் ஒரு ஹெக்டேருக்கு 25 முதல் 40 டன் வரை மகசூல் தரவல்லவைபயறுவகைத் தீவனப் பயிர்கள்

கால்நடைகளுக்கு, புல் எப்படி அவசியமான தீவனமோ அப்படியேதான் பயறுவகைத் தீவனங்களும் அவசியப்படுகிறது. பயறுவகைத் தீவனப் பயிர்களில், குதிரை மசால், வேலி மசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிப்பயறு, சணப்பு, கொள்ளு, சங்குபுஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, செண்ட்ரோ, டெஸ்மோடியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பயறுவகைத் தீவனங்களில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து மற்றும் தாதுப்பொருட்கள் அதிகமாக உள்ளன. இந்தப் பயறுவகைத் தீவனங்களைத் தனியாக அல்லது சோளம், மக்காச்சோளம் போன்றவற்றுடன் சேர்த்து கலப்புப் பயிராகச் சாகுபடி செய்யலாம்சிறுதானியத் தீவனப் பயிர்கள்

தீவனத்திற்காகப் பயிரிடப்படும் சிறு தானியங்களில் சோளம், மக்காச்சோளம், கம்பு, ஓட்ஸ் முக்கியமானவைகளாகும். சிறு தானிய தீவனப் பயிர்களை, பயிர் சுழற்சியில் சேர்ப்பதன் மூலம் நிரந்தரமாகப் பசுந்தீவனம் கிடைக்கச் செய்யலாம்.  தீவன மரங்கள்

மர இலைகள் மற்றும் தளைகள் ஊட்டச்சத்து மிகுந்ததாக விளங்குகின்றன. ஒரு ஹெக்டேருக்கு மானாவாரி நிலத்தில் உருவாக்கப்படும் ஊடுபயிர்முறையில், வருடம் ஒன்றுக்கு 4-5 மாடுகளுக்குத் தேவையான மர இலைகளை உற்பத்தி செய்ய இயலும்.

அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காப்புளி, ஆச்சா, முருங்கை, கல்யாணமுருங்கை, அரசு, வாகை, வேம்பு, மலைவேம்பு, வெள்வேல், கருவேல், சீமைக்கருவேல், குடைவேல், ஆல், அத்தி, பலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை, இலுப்பை, முசுக்கொட்டை, வேங்கை, நாவல், மஞ்சக் கடம்பு, நெல்லி முதலியவை தமிழகத்திற்கு ஏற்ற தீவன மரங்களாகும்அடர்தீவனப் பொருட்களின் வகைகள்

அடர்தீவனத்தில் பலவகையான புண்ணாக்கு வகைகள், தானிய வகைகள், தானிய மற்றும் பயறுவகைகள், உப பொருட்கள் அதாவது தவிடுகள், குறுணைகள், பருப்பு தொலிகள், பருப்புகள், வெல்லப்பாகு, பீர் கழிவு மற்றும் தாது உப்புக் கலவை மற்றும் உப்பு ஆகியவை உள்ளடங்குகிறது. இவற்றைக் கொண்டு பல்வேறு விகிதாச்சாரத்தில், கறவை மாடுகளின் உற்பத்தித் திறன், பாலில் உள்ள சத்துக்கள் முதலியவற்றை அடிப்டையாகக் கொண்டு அடர்தீவனம் தயாரிக்கப்படுகிறது

எரிசக்தி மிகுந்த உணவுப்பொருட்கள்

தானிய வகைகள் அடர்தீவனத்தில் கலப்பதன் முக்கியத்துவம் யாதெனில், கால்நடைகளுக்கு வேண்டிய எரிசக்தியை எளிதில் கொடுக்கவல்லது. மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, சாமை, கோதுமை போன்ற பயிர்களில் எரிசக்தி அதிகமாகவும், நார்சத்து குறைவாகவும், சுமார் 10 விழுக்காடு வரை புரதச்சத்தும் உள்ளது, நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு வரை இவ்வகையான தானியவகைகளையும் அல்லது 30 விழுக்காடு வரை கிழங்கு வகை மாவுப்பொருட்களையும் கலக்கலாம், குறிப்பாக, மக்காசோளம் அதிகமாக கலப்பது சாலச்சிறந்தது. ஏனெனில், உயிர்ச்சத்துஉடைய முன்னோடு பொருளானகரோட்டின்இதில் அடங்கி உள்ளது.

புரதச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள்

சூரியகாந்தி, சோயா, நிலக்கடலை, எள்ளு, தேங்காய் மற்றும் பருத்தி விதை முதலிய புண்ணாக்குகளை அடர்தீவனத்தில் கலப்பதன் மூலம் கால்நடைகளுக்கு வேண்டிய புரதச்சத்து கிடைக்க ஏதுவாகிறது. புண்ணாக்குகளில் 30 முதல் 45 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது, அடர் தீவனத்தில் சுமார் 30 விழுக்காடு வரை புண்ணாக்குக்களை சேர்க்கலாம். தானியம் மற்றும் உபப்பொருட்களின் விலையைவிட புண்ணாக்கு விலை குறைவாக இருப்பின் 45 விழுக்காடு வரை சேர்க்கலாம். அடர்தீவனத்தில் பல வகைப்பட்ட புணணாக்குகளை கலப்பதன் மூலம் கறவை மாடுகளுக்கு வேண்டிய அமினோ அமிலங்கள் சமச்சீராகக் கிடைக்க ஏதுவாகிறது.

தானிய உபப்பொருட்கள்

தவிடு வகைகள், குருணை, கடலைப்பொட்டு போன்ற பொருட்கள் அடர்தீவனத்தின் கொள்ளளவை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இவ்வகைப் பொருட்களின் எரிசக்தி சராசரியாகவும், பயறுவகைக் குறுணைகள் மற்றும் பீர்கழிவு ஆகியவைகளின் புரதச்சத்து சமச்சீரான அளவிலும் உள்ளது. வெல்லப்பாகு அடர் தீவனத்தில் கலப்பதன் மூலம் எரிசக்தியை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் ருசியையும் அதிகப்படுத்துகிறது. தீவனத்தில் தூசித் தன்மையை கட்டுப்படுத்துகிறது

பல்வேறு வகைகளில் மக்களுக்குப் பயன்படும் கால்நடைகளுக்கு போதிய தீவனம் அளிப்பதில் நாம் அக்கறை காட்டினாலே ஓரளவு கால்நடைகளின் மூலம் கிடைக்கும் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் மற்றும் தரிசு நில மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து தமிழகத்தில் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்குகால்நடை வளர்ப்பில் வேளாண்காடுகளின் பங்குபற்றி சிறந்த பயிற்சி அளித்து வருகிறது. கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து கால்நடைத் தீவனப்பயிர் சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தை பயன்படுத்தி, பால் வளத்தைப் பெருக்கி பயன் அடையலாம்.

 


டிசம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.