தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை - 12

குமரி ஆதவன்

06th Jul 2019

A   A   A

நாகர்கோவில் அரசு பிற்பட்டோர் மாணவர் விடுதியில் நான் சேர்ந்தது, புதிய அனுபவமாக இருந்தது. சுமார் எழுபது பேர் தங்கிப் படித்தோம். எழுபது பேரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்களாகவும், பல்வேறு சாதி மதங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியாகவும், குடும்பச்சூழல் நிலையிலும் பின்தங்கிய பெற்றோரின் பிள்ளைகளே!

விடுதியின் பிள்ளைகள் அனைவரும் என்னைப்போல் வறுமையின் பிடியில் சிக்குண்டு தவித்தவர்கள்தான். நித்திரவிளையைச் சார்ந்த ரேணு என்ற கணிதத்துறை மாணவன் இரவு மர வேலைக்குச் சென்றுவிட்டு அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் விடுதிக்குள் நுழைவதைப் பார்த்திருக்கிறேன். காரணம் அப்பா இல்லாத அவன்தான் குடும்பத்தையும் வழிநடத்தியாக வேண்டும். இரவு கூடடையவும் பசியாறவும் கிடைத்த விடுதி ஏராளம் நண்பர்களையும் அவர்களது அனுபவ அறிவையும் எனக்குத் தந்தது. 1988 முதல் 1991 வரை ஒவ்வொரு நாளும் ஏக்கத்தோடும் பெருமூச்சோடும்தான் நகர்ந்தது.

வாழ்க்கையில் அரிதாகவே கிடைக்கிற தூய நட்புகள், ஓட ஓடத் துரத்திப் பிடித்து நேர்வழியில் நகர்த்திச் சென்று, என் கவிதைகளுக்கு உரமும் உயிரும் தந்த நட்புகள் எல்லாம் கண்முன் விரிகின்றன.

இளைஞர்களில் பெரும்பாலோர் வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்களாக இருந்தாலும் எல்லோரிடமும் தனித்திறன் இருந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் போலவே பாடுகின்ற ஜேக்கப் சுந்தர் சிங், மேத்தாபோல் கவிதை எழுதுகிற துரைமுருகன், நன்றாகப் பேசவும் கவி புனையவும் செய்கிற அண்ணன் கமல.செல்வராஜ், கராத்தே வீரர் அண்ணன் ஜெயகுமார், கணிதப்புலி சந்திரகுமார், ஆங்கிலத்தில் அசத்தும் தோழன் சன்னி ஜோஸ், பொருளாதார விவாதம் புரியும் அருள்தாஸ், போராளி சதிஷ் இப்படித் தனித்திறனாளிகளின் கூடாரமாக இருந்தது எங்கள் மாணவர் இல்லம். மற்றவர்களின் திறன் வெளிப்பாடுகள் எனக்குள் இருந்த புதையலையும் வெளிக்கொணர்ந்தது.

வறுமையும் வெறுமையும் வாட்டியதால் பல்வேறு நேரங்களில் நான் மனம் தளர்ந்து போவதுண்டு. அப்போதெல்லாம் விடுதியின் மூன்றாம் மாடியில் போய்த் தனியாக உட்கார்ந்து எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். அவ்வப்போது கண்ணீர்த் துளிகள் இமைதாண்டி வெளியேறும். என் கண்ணீருக்கு ஆறுதல் சொல்வதுபோல் அறை எண் பதினேழிலிருந்து அமுதகானம் ஒலிக்கும். என்னையறியாமலே என் கால்கள் அவ்வறை நோக்கி நகரும். ஓற்றையாளாக இருந்து பாடும் சகோதரன் ஜேக்கப்க்கு ரசிகனாக நான் போய் அமர்வேன். எனக்குப் பிடித்தப் பாடல்களை எல்லாம் பாடச் சொல்லுவேன். இதயக்கோவில் படத்தில் வரும் “இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்” என்ற வைரமுத்துப் பாடலை எனக்காகப் பலமுறை பாடுவார். ‘என்னால் இப்படிப் பாட முடியாதா?’ என்ற ஏக்கத்தோடு ஜேக்கப் நாட்குறிப்பேடு ஒன்றில் எழுதி வைத்திருக்கும் பாடல்கள் அனைத்தையும் எழுதி எடுத்து தனியாகப் போய்ப் பாடிப் பார்ப்பேன். ஆனால் பாடல் எனக்குச் சரியாக வரவில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன். சக நண்பர்கள் இசை படித்தால் பாடல் சரியாக வந்துவிடும் என்று சொன்னார்கள்.

மேடையேறிப் பாட வேண்டும் என்ற ஆசையிலிருந்து பின்வாங்கி, இசை மீது வெறியானது. நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்தபோது டிரம் வாசிக்கப் படிக்க வேண்டுமென்ற ஆவல் என்னை ஆட்டிப்படைத்தது. ஆனால் அதற்கான களமோ, மாதம் தோறும் செலுத்துவதற்கான கட்டணமோ என்னிடம் இல்லை. இந்த ஏக்கச் சூழலை எல்லாம் கவிதையாக்கி வைத்திருந்தேன். அவற்றை முதலில் கவனித்தது இந்துக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்று கொண்டிருந்த விடுதி வாசி அண்ணன் கமல.செல்வராஜ் தான். அவர் என்னை ‘எழுது… எழுது’ என்று உற்சாகப்படுத்தினார். கவிதைகளைப் படித்துவிட்டுப் பாராட்டினார். எதையும் நேர்மறையாகச் சிந்திப்பவர் அவர். எனவே கவிதைகளைக் குறை சொல்லவே மாட்டார். எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானபோதும் வந்து வாழ்த்தினார். அது இன்றுவரைத் தொடர்கிறது.

மாணவர் இல்லத்தில் என்னை மிஞ்சும் அளவில் ஒரு கவியரசன் இருந்தான். அவன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த துரைமுருகன். எனது கவிதைகளைப் படித்துவிட்டு நிறைவடையாது, விமர்சிப்பான். முதன்முதலாக மேத்தா, வைரமுத்து புத்தகங்களை எனக்குப் படிக்கத் தந்தது இந்தக் கவி விமர்சகன்தான். எனது கவிதைகளின் சிறந்த வரிகளை அடிக்கோடிட்டுப் பாராட்டும் துரை, ஆழமும் விரிவும் இல்லாத வரிகளை வெட்டி எறிந்துவிட்டு நக்கீரன் போல் விரல் நீட்டுவான். காட்சிக்கு குள்ளமாய் ஆடையில் எளிமையாய் இருக்கும் துரைதான் என் கவிதை வலிமை பெறக் காரணமாய் இருந்தான்.

கவிதை எழுதினாலும் எனக்குக் கிடைத்த அதிகப்படியான நேரம் என்னை ஆட்டிப்படைத்தது. கல்லூரி விடுதிகள் பெரும்பாலும் கட்டுப்பாடுகள் இல்லாததாகவே இருக்கும். அங்கே திறன் வளர்க்கவும் வாய்ப்பிருக்கும், தவறிப்போகவும் வாய்ப்பிருக்கும். நேரம் மிச்சமில்லாத அளவுக்கு பணிகள் இருந்தாலொழிய சில தவறுகளிலிருந்து தப்ப முடியாது. விடுதி மாணவர்களுள் ஒருசிலர் ஆபாசப் புத்தகங்களைப் படிக்கவும் அறையின் பொது இடங்களில் போடவும் ஆரம்பித்தார்கள். அதுவரைப் பார்த்திராத அப்புத்தகங்கள், அதிலிருந்த கவர்ச்சிப் படங்கள் என்னையும் மெதுவாக கையிலெடுக்க வைத்தன. ‘அந்த மாதிரிப் புத்தகங்களைப் படிக்காதவன் ஆண்மகனா?’ என்கிற கேலியும் வந்து விழுந்தது. வயதின் கோளாறும் மற்றவர் கேலியும் என்னையும் படிக்க வைத்தது. 

மேத்தா, வைரமுத்து என்று புதைந்து கிடந்த என்னைப் ‘பருவகாலம்’ பற்றிக் கொண்டது. சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ‘காமலோகம்’ படிக்கத் துவங்கினேன். சுமார் மூன்று மாதங்கள் (1988 ஜூலை வரை) நான் ஒரு பைத்தியக்காரனைப் போல் ஏராளம் புத்தகங்களைப் படித்தேன். எனது கணித மூளை கனவு மூளையானது.

இந்த நேரத்தில்தான் எர்ணாகுளத்தைச் சார்ந்த அருட்பணியாளர் பீட்டர் பாராப்புல்லில் அவர்களின் நெருக்கமான அறிமுகம் கிடைக்கிறது. எனது குடும்ப நிலை, எனது இசைக் கனவுகள் அனைத்தையும் அறிந்த அவர் இசை படிக்க உதவுவதாகச் சொன்னார். ‘ஒருபோதும் சோம்பேறியாக இருக்கக்கூடாது. சோம்பேறியின் மனம் சாத்தானின் கூடாரமாகும். நமக்குக் கிடைக்கிற அதிகப்படியான நேரத்தை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தணும். அப்பதான் நாம் தூய்மையாக இருக்க முடியும்’ என்று மலையாளத்தில் அறிவுரைச் சொல்லி விட்டு எனது மாணவர் இல்ல முகவரியைப் பெற்றுக் கொண்டார்.

அடுத்த மாதம் பிறந்ததுமே, எனது பிறந்த நாளுக்காய் ஒரு வாழ்த்துக் கடிதமும் 300 ரூபாய் பணவிடையும் (Money order) வந்தது. இவ்வளவுகால வாழ்க்கையில் இவ்வளவு அழகான ஆங்கில கையெழுத்தை நான் கண்டதே இல்லை. இந்த மகிழ்ச்சியை எனது மாணவர் இல்லத்தில் முதுகலை பொருளியல் படித்துக் கொண்டிருந்த ஜெயகுமார் அண்ணனிடம் காண்பித்தேன். காரணம் அவர்தான் ஒரு முதியவர்போல் எனக்கு அடிக்கடி அறிவுரைச் சொல்லுவார்.

‘இந்தப் பணத்தை சினிமா பார்த்து சீரழிக்கவா போற?’ என்றார். ‘இல்ல அண்ணா! டிரம் இசை படிக்கணும்ணு ஆசை. அதுக்கான வகுப்பு இங்க எங்கயும் காணல்ல. எங்க ஊரு பக்கம் வழிக்கலம்பாடுண்ணு ஒரு இடத்துல தபேலா படிச்சு குடுக்குறாங்க. மாசம் எழுபத்தஞ்சு ரூபாய் கட்டணம்;. சனி, ஞாயிறு அங்கப் போய் படிக்கப் போறேன்’ என்றேன்.

‘மீதி பணத்த என்னப் பண்ணப் போற?’ என்றார். ‘நான் வீட்டுல குடுப்பேன்’ என்றேன். ‘நான் ஒரு ஐடியா சொல்றேன் தம்பி, ‘ஷாவோலின் குங்பு கராத்தே கிளாஸ்’ ஒண்ணு ஆசாரிப்பள்ளத்துல தொடங்குறது மாதிரி இருக்கு. நம்ம பசங்க கொஞ்சம் பேரு வந்தாண்ணா உடனே ஆரம்பிக்கலாம். தேவையில்லாம பணத்தை வீணடிச்சிராத. கராத்தே படிச்சா உடம்புக்கும் நல்லது, நம்ம குடும்பத்துக்கோ, நமக்கு ஒரு ஆபத்துண்ணு வரும்போ தற்காப்புக்காகவும் பயன்படும்’ என்றார்.

ஆகஸ்ட் மாதமே இரு வகுப்புகளுக்கும் செல்ல ஆரம்பித்தேன். மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தான் கட்டணம் வந்தது. தபேலா, கராத்தே இரு வகுப்புகளுக்கும் செல்வதை நண்பன் சன்னி ஜோஸ் உதவியோடு ஆங்கிலத்தில் எழுதி அருட்பணியாளர் பீட்டர் அவர்களுக்கு அனுப்பினேன். மிகவும் மகிழ்ச்சியுற்ற அவர் தொடர்ந்து இரு மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 300 அனுப்பினார்.

எனது பருவகாலம் வாசிப்பு கலையில் கடந்துபோய் அப்படியொரு எண்ணமே இல்லாமல் போனது. காமம் சுமந்த என் மனது கலைகளைச் சுமக்க ஆரம்பித்தது. வாரத்தில் மூன்று நாள் கராத்தே, இரண்டு நாள் தபேலா மற்ற இரு நாட்களும் போட்டிகள், கவிதை, நாட்டுநலப்பணித் திட்டம் என வேறெதையும் சிந்திக்கவே நேரமில்லாமல் போய்விட்டது.

பட்டப்படிப்பை நான் முடித்த வருடம் 1991 வரை அருட்பணியாளர் பீட்டர் அவர்கள் பணம் அனுப்பித் தந்தார்கள். தபேலா வகுப்பை 1990 ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்குப் பின் என்னால் தொடர முடியவில்லை. குடும்பத்தில் நடந்த சில பிரச்சினைகள் காரணமாக என்னால் ஆறு மாதங்கள் ஊருக்கே வரமுடியாமல் போனது. தபேலா இதனால் தடுமாறினாலும் கராத்தே வகுப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு தேர்வாக கடந்து கறுப்புப் பட்டைக்கு முந்தைய பர்பிள் பட்டை வரைக்கும் வளர்ந்தேன். எனது கராத்தே குருக்கள் பிரான்ஸ் லியோ, ஜெயகுமார் அண்ணன், பொன்னன் ஆகியோர் மறக்க முடியாதவர்கள். தபேலா கற்றுத் தந்த கண்ணன் பலமுறை தொடர்ந்து படிக்க அழைத்தும் தொடர முடியாமல் போனது, இன்றளவும் இழப்பாகவேத் தெரிகிறது.

அருட்பணியாளர் பீட்டர் அவர்கள் எனக்கு இந்த வரத்தை தராமலிருந்திருந்தால், என்னுடைய நேரமெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போயிருக்கும். எனது ஒழுக்கம்கூட நல்லொழுக்கமாக அமைந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

ஒரு மூத்த சகோதரனைப் போல் என்னை திசைமாற்றிவிட்ட அருட்பணியாளர் பீட்டர் அவர்களை எங்கள் வீட்டுக்கு வரவேண்டுமென்று தொடர்ந்து தொந்தரவு செய்தேன். எனது தொந்தரவு பொறுக்காமல் ஒருமுறை வீட்டிற்கு வந்தார். வீட்டில் உணவருந்திவிட்டு, ‘நடந்து ரோட்டுக்குப் போகலாமா?’ என்றார். சாலையில் சென்றதும், ‘நகை செய்பவர்கள் கடை இருக்கிறதா?’ என்றார். நான் அழைத்துச் சென்றேன். தனது கை விரலில் கிடந்த ஒரு சிறிய மோதிரத்தைக் காண்பித்து, ‘இறுக்கமாயிருச்சி வெட்டி எடுத்திருங்கோ’ என்றார். மோதிரத்தை வெட்டி எடுத்தார்கள். திரும்ப நடந்தோம். திடீரென்று அந்த மோதிரத்தை என் கையில் தந்தார், நான், ‘வேண்டாம், உங்கள் வீட்டில் யாருக்காவது கொடுங்கள்’ என்றேன். ‘துறவிக்கு எதுக்கு மோதிரம்? ஒரு பங்குல பாசமா தந்தாங்க. இரண்டு வருசம் போட்டாச்சு. இனி போடமுடியாது. கை தடியாயிருச்சி, நீ வச்சிக்கோ. இந்தக் கால் பவுன் மோதிரத்தால எங்க வீட்டுல யாருக்கும் ஒரு பயனும் இல்ல’ என்று திணித்தார்.

நல்ல இதயங்களை கடவுள் உயர்த்திக் கொண்டே இருப்பார். தொடர்ந்து அவரோடு நல்லுறவில் தான் இருக்கிறேன். எனது ஆசிரியப் பணி, எழுத்துப் பணி, கலைப்பணி அனைத்தையும் ஒரு தந்தையைப் போல் நேசிக்கிறார். வட இந்தியாவில் மிக நீண்டகாலம் ஆதிவாசி மக்களுக்காகச் சேவை செய்த அவர் தற்போது ஜான்சி மறைமாவட்டத்தின் ஆயராக இருக்கிறார். ஆயர் பணியேற்புக்கு அழைத்தும் நான் செல்லவில்லை. ஆயராகி முதலில் அவரது சொந்த ஊர் எர்ணாகுளத்துக்கு வந்தபோது குடும்பத்தோடு போய்ப் பார்த்தேன். மனைவி இரு குழந்தைகள் அனைவரையும் பார்த்து பெருமகிழ்வு கொண்டார். அவரது சீருந்தில் அந்தப் பகுதியிலுள்ள முக்கியமான கோவில்கள், வரலாற்று இடங்கள் அனைத்திற்கும் அழைத்துச் சென்றுவிட்டு, என் குழந்தைகளுக்கு புதிய ஆடையும் எடுத்துக் கொடுத்து மகிழ்ந்தார்.

என்னை நான் வளர்த்தெடுக்க, அறிவுரையும், பொருளுதவியும் செய்த அவரது செயலை என்னால் எந்த காலத்திலும் மறக்கமுடியாது. என் உயிர் இருக்கும் வரை அவரது பெயரை நான் சுவாசிப்பேன். என் இறப்பிற்குப் பிறகு, எனது நூல்கள் அவரது பெயரைச் சுமந்து நிற்கும்.     

(நினைவுகள் தொடரும் ….)

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.