தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை - 9

குமரி ஆதவன்

15th Apr 2019

A   A   A

மணலிக்கரை புனித மரிய கொரற்றி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடிக்கிறபோது, எனக்கு அறிமுகமாகியிருந்த ஒரே கல்லூரி ஸ்காட் கிறித்தவக் கல்லூரி மட்டும்தான். காரணம் எனக்கு பாடம் நடத்திய பெரும்பாலான ஆசிரியர்கள் இங்குதான் பயின்றிருந்தார்கள். அவர்கள் பாடம் நடத்தும்போது கூறிய கதைகள் எனக்குள் ஒருவிதமான பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்லூரியைப் பார்காமலே இந்தக் கல்லூரியில்தான் படிக்க வேண்டுமென்ற காதல் எனக்குள் உருவாகியிருந்தது.

மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ் கிடைத்த அன்றே, எருசலேம் நகரைப் பார்க்கச் செல்கிறவனுடைய மனநிலையோடும் பிரமிப்போடும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நோக்கி குலசேகரம் நாகர்கோவில் பேருந்தில் ஏறி உட்கார்ந்திருக்கிறேன்.  நாகர்கோவிலுக்கு அதற்குமுன் ஒரேயொரு முறைதான் வந்த அனுபவம் உண்டு. அதுவும் வீட்டிற்குத் தெரியாமல். கல்லூரிக்கு முன் என்னை இறக்கிவிட வேண்டுமென்ற எனது வேண்டுகோள்படி நடத்துனர் சரியாக என்னை இறக்கி விட்டார்.

மதிய நேரத்தில் கல்லூரியின் முதன்மை வாசலைக் கடந்து வந்தபோதே ஏதோ புதிய உலகத்திற்குள் நுழைகிற ஓர் அனுபவம். பச்சைப் பசேலென்று இருபுறமும் முந்திரிக் காடாக இருக்க, பூக்களும் காய்களும் நிறைந்த சுற்றுச் சூழலில், ஆண்களும் பெண்களும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டே நடக்கிறார்கள்; புத்தகங்களை பிடுங்கி எடுக்கிறார்கள்; மிட்டாய் பரிமாறிக் கொள்கிறார்கள்; ஆண் பெண் பேதமின்றி சேர்ந்தே நடக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் பேசினாலே அடி தந்து அதட்டுகிற பள்ளியில் பயின்ற எனக்கு இதுவெல்லாம் ஆச்சரியமாகவே இருந்தது. ஏதோ விலங்கு தெறித்து சுதந்திரக் காற்றை நானும் இங்கு சுவாசிக்கப் போகிறேன் என்ற மகிழ்வு என்னையும் தொற்றிக் கொண்டது.

பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை விழி விரித்துப் பார்ப்பது மாதிரி ஒவ்வொரு அணுவையும் ரசித்துக் கொண்டே, கல்லூரியின் இரண்டாம் வாசல் அருகே வந்து கொண்டிருந்தபோது, மூன்று சகோதரிகள் சேலை அணிந்தபடி ஆசிரியைகளைப் போல் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம், ‘அப்ளிகேஷன் எங்க குடுப்பாங்க?’ என்று கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே, ‘இங்க குழந்தைகளுக்கு அப்ளிகேஷன் குடுக்க மாட்டாங்க தம்பி என்று சிரித்துக் கொண்டே என் கையில் இருந்த பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் செய்முறை நோட்டை பிடுங்கிக் கொண்டு நடந்தார்கள். அதில்தான் எனது மதிப்பெண் சான்றிதழ் இருந்தது. எனக்கு அழுகையும் கோபமும் சேர்ந்தே வந்தது. இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘அக்கா! நான் தமிழ் இலக்கியம் படிக்கப் போகிறேன். என்னோட மார்க் இந்த ரெக்காடுலதான் இருக்கு. விளையாடாம திருப்பித் தந்திருங்க என்றேன். ‘குழந்தைக்கிட்ட விளையாடாதுங்கடி!’ என்றபடி என் கையைத் தட்டி விட்டு நடந்தார்கள்.

அப்போதுதான் நான் ஒரு உண்மையான கிராமத்தானாக மாறினேன். ‘பெண்ணே!, ரெக்காட தந்துட்டுப் போறியா? கல்லெடுத்து எறிச்சண்ணா மண்ட பொளந்து போவும் என்றேன். திரும்பி வந்த அவர்கள் மூவரும் என் முதுகில் தட்டியபடி, ‘தம்பி! தமாசுக்குத்தாண்டே புக்க வாங்குனோம். நாங்க இங்க எம்.ஏ படிக்கிறோம். நீ இங்கதான் வரணும்.?’ என்று சிரித்தபடி என்னோடு வந்து விண்ணப்பம் வாங்கித் தந்து பார்வதிபுரம் வரை அழைத்து வந்து தக்கலைக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.

எனக்கு எல்லாம் கனவுபோல் இருந்தது. விண்ணப்பத்தை நிரப்பி விட்டு, கல்லூரிக்கு வர இருந்த நேரத்தில் எனது அண்ணன் ஸ்டீபன்சன் சென்னையிலிருந்து வந்தான். நான் பாடப் பிரிவு ‘தமிழ் இலக்கியம் என எழுதியிருந்ததை அவனே வெட்டிவிட்டு, ‘தமிழ் படிச்சு கிழிக்கப் போறான். கணக்குண்ணா, நாலுபேருக்கு டியூஷனாவது எடுத்து பொழைக்கலாம் என்று முணுமுணுத்தபடியே, ‘கணிதம் என எழுதினான். என்னோடு வந்து கணிதப் பிரிவிலேயே என்னைச் சேர்த்தும் விட்டான்.

கல்லூரி நாட்களில் கணிதப் பிரிவில் இருந்தாலும், தமிழ்பிரிவு வகுப்பையே நான் சுற்றிச் சுற்றி வலம் வந்தேன். பேராசிரியர் திரு. இயேசுதாஸ் அவர்கள் செந்தமிழில் பாடம் நடத்துவதை வாய்பிளந்தபடி நின்று கவனிப்பேன். எனது இரண்டாவது செமஸ்டரில் அவர் எனக்கு தமிழ் கற்பிக்க வந்த பிறகே என் மனம் சாந்தியடைந்தது. எனக்குள்ளிருந்த கவிதை ஊற்று மீண்டும் வெளிவந்தது. ஒவ்வொரு கணித நோட்டிலும் கடைசி பத்துப் பக்கங்கள் வகுப்பறையில் நான் எழுதிய கவிதைகளாகவே இருக்கும்.

கணிதத்துறையில் எனது முழுக்கவனமும் இல்லை என்பதை எனது கணிதப் பேராசிரியரும் எங்கள் துறைத்தலைவருமான திரு. ஜெயசிங் அவர்கள் கண்டுபிடித்து வகுப்பிலேயே சொன்னார்கள். காரணம் நான் தினமும் வகுப்பறையிலேயே கவிதை எழுதுவதை அவர் அறிந்துவிட்டார். ‘உனக்கு தமிழ்தான் புடிச்சிருக்குண்ணா அங்கப் போயிரணும்; இங்க இருந்து நேரத்தை போக்கிட்டு இதும் இல்லாம அதும் இல்லாம ஆயிரும் என்றார். அவர் சொன்னது உண்மை போலவே எனக்கும் தோன்றியது. காரணம் முன்னாள் காதலியை நினைத்துக் கொண்டே மனைவியோடு வாழ்கிற உண்மையற்ற கணவனைப்போல் தான் நான் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தேன்.

தினம்தோறும் கவிதை எழுதவது; அதுவும் கல்லூரிச் சூழலையே கவிதையின் பாடு பொருளாக்குவது; அதை பாட நேரத்திலேயே வகுப்பறை முழுவதும் சூழல விடுவது என நடந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவர் மூலம் அவை ஆசிரியர்களிடமும் சிக்கிக் கொண்டன.  இப்படித்தான் ஒருநாள் ‘பாரதிக்கு ஒரு கடிதம்’ என்ற கவிதை பேராசிரியர் இயேசுதாஸ் அவர்களிடம் பிடிபட்டது. என் வகுப்பில் பாரதி என்று ஒரு பெண் படித்துக் கொண்டிருந்தாள். தலைப்பைப் பார்த்துவிட்டு, இக் கவிதை நான் அவளுக்கு எழுதியது என்றுதான் முதலில் சந்தேகப்பட்டார். முறைத்துக் கொண்டே வகுப்பை முடித்துவிட்டுப் போனவர், மதியம் வந்து என்னை அழைத்துப் போனார். என் தோளில் ஒரு நண்பனைப்போல் கைபோட்டார். ‘தம்பீ! நீங்க கவிஞன் ஆயிருவீங்க. இந்த வயதில் காதல் கவிதைதான் இளைஞர்கள் எழுதுவாங்க. நீங்க சமூக அக்கறையோட மகாகவி பாரதிக்கு ஒரு கடிதம்ணு கவிதை எழுதிருக்கீங்க. அதுவும் சமூகக் கொடுமைகள் கண்டு பொங்கி எழுந்தியிருக்கீங்க. இதுல ஒரு பிரதி எழுதி எங்கிட்ட தந்து வையுங்க. ஏதாவது பத்திரிக்கைக்குக் கொடுக்க முடிஞ்சா கொடுத்துருவேன். தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்!’ என்று ஏதோவொரு வயது முதிர்ந்தவரிடம் பேசுவதுபோல் பேசிச் சென்றார்.

எனக்கு ‘தரையில்தான் நிற்கிறேனா?’ என்றொரு சந்தேகமே வந்துவிட்டது. எனது வகுப்புத் தோழர்கள் பிரதாப், பிரசாத், பெல்லார்மின், கிறிஸ்துதாஸ், சிவா, அஜய், ஐயப்பன், குறும்பனை ஜோசப், அகஸ்டஸ்; என் பாசத்துக்குரிய கல்லூரிச் சகோதரிகளான பாரதி, திருவரம்பு ரெத்தின சரோஜா, குலசேகரம் ஜெயராணி, சென்பகராமன்புதூர் சுகந்தி இவர்களெல்லாம் கவிஞன் ஆகிவிடுவாய் என்று சொன்னபோது ஏற்படாத மகிழ்ச்சி, நம்பிக்கை எனது ஆசிரியர் வாயிலிருந்து வந்ததும் துள்ளிக் குதிக்க வைத்து விட்டது.    

என் கவிதையை பேராசிரியர் இயேசுதாஸ் அவர்கள் தமிழ்துறையிலும் வாசித்துக் காட்டியதாகப் பின்னர் அறிந்தேன். அதற்குப் பிறகு தமிழ்துறை ஆசிரியர்கள் வகுப்பறையில் என்னை கரிசனையோடு பார்க்கத் துவங்கினார்கள். திரு. ஜாண் தங்கத்துரை ஆசிரியர் என்னை அழைத்து, ‘சமூக அக்கறையோட கவிதை எழுதியிருக்கிறடே, நீ நாட்டு நலப்பணித் திட்டத்துல சேந்திரு. உனக்கும் கல்லூரிக்கும் நல்லதா இருக்கும் என்றார். ஏற்கனவே தேசிய மாணவர் படையில் இருந்தேன். இருப்பினும், இயல்பிலேயே சமூகப் பணி செய்வதில் ஆர்வத்தோடு இருந்த எனக்கு இது ஒரு வரம் எனக் கருதி அதில் இணைந்து விட்டேன்.

அந்த ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இணைந்து காளிகேசத்தில் நடத்திய நாட்டு நலப்பணித் திட்ட முகாம் எனக்கு நல்ல நண்பர்களையும், நான் கலைத்துறையில் வளர்வதற்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது. இன்று நாவலாசிரியராக வளர்ந்திருக்கின்ற மீரான் மைதீன் அந்த முகாமில்தான் அடங்காபிடாரி என்ற தனது முதல் நாடகத்தை எழுதினார். அதில் நான் நடித்தேன்.  முகாம் நடந்த அத்தனை நாட்களிலும் நான் கவிதை எழுதிப் படித்தேன். சிறு சொற்பொழிவுகளைச் சொன்னேன். இவை என் வகுப்பறைத் தாண்டி, எனக்கு அறிமுகத்தைத் தந்தன.  

இந்த நேரத்தில்தான் நானும் மீரானும் பேச்சுப் போட்டிகளுக்கு அழைக்கப் பட்டோம். திருநெல்வேலி பேட்டை இந்து கல்லூரியில் நடந்த சுதந்திரதினப் பேச்சுப் போட்டியிலும், மாவட்ட ஆட்சியர் நடத்திய அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றபோது முதல்வராக இருந்த சுந்தர்சிங் அவர்கள் அவரது அறைக்கு அழைத்துப் பாராட்டியது, நான் பேச்சாளனாகிவிட வேண்டுமென்ற வெறியை உருவாக்கியது.

எனது எழுத்திற்கும் பேச்சிற்கும் உரமிட்டது கல்லூரி நூலகம்தான். கல்லூரி மாணவர் போராட்டங்களின் போதும், வகுப்பறை புறக்கணிப்புகளின் போதும் நான் நூலகத்தில்தான் கூடுகட்டிக் கொண்டேன். ஜெயகாந்தனை, கல்கியை, சாண்டில்யனை, அப்துல் ரகுமானை, பாரதியை, மாக்சிம் கார்க்கியை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்தது இந்த நூலகம் தான். ஒரு நாள் நூலகர் திரு. சுந்தரம் அவர்கள் ஒரு பழைய புத்தகத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் புத்தகத்தின் தலைப்பு History of the Protestant Church in Travancore. பளுப்பு நிறத் தாள்களோடு தொட்டால் பொடிந்துவிடும் நிலையில் இருந்த அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சி.எம். ஆகுர் (C.M. Augur).  அந்தப் புத்தகத்தை அவரிடமிருந்து பெற்று தாள்களை மெல்லமாய் நகர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தபோது பக்கம் 857 - இல் எங்கள் ஊர் குமாரபுரம் கொற்றிகோடு பற்றி வந்தது. ஆவலோடு பார்த்தால் 1830 - இல் கொற்றிகோட்டிற்கு வந்து பணியாற்றிய இங்கிலாந்தைச் சார்ந்த சார்லஸ் மீட் என்ற மிஷனரி கி.பி. 1832 - இல் இங்கிருந்த வில்லுப்பாட்டு குழுவிடமிருந்து வில், வில்லடிக்கும் அம்பு, குடம் போன்ற உபகரணங்களையும், கொற்றிகோடு பொட்டைக்குளக்கரையில் அம்மக்கள் கிறித்தவர்கள் ஆவதற்குமுன் வணங்கிவந்த காளி, இசக்கி ஆகிய தேவதைகளின் சிறு சிலைகளையும் பெற்று, லண்டனிற்கு கொண்டு சென்று, அங்குள்ள ஆஸ்டின் பிரேயர்ஸ் (Austin Friars) என்ற பொருட்காட்சி சாலையில் பாதுகாப்பாக வைத்திருப்பதாகக் ஒரு செய்தி இருந்தது. அன்று நான் குறிப்பெடுத்த இந்த செய்தி தான் எங்கள் மண்ணின் கலைகளைத் தேடவும் எனக்குள் வரலாற்றுணர்வை ஏற்படுத்தவும் செய்தது. நான் கல்லூரியிலிருந்து கணிதம் படித்ததைவிட இலக்கிய நூல்கள்தான் அதிகம் படித்தேன். நூலகர் சுந்தரம் அவர்களின் அன்பு, நூல் தெரிவு செய்துதரும் அக்கறை இவற்றையெல்லாம் இன்று நினைக்கையில் என்னுடைய உருவாக்கம் உண்மையில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில்தான் நடந்திருக்கிறது.

எனது மூன்றாமாண்டு நிறைவில் கல்லூரியிலிருந்து ஒரு ஆண்டுமலர் வெளியானது. அது என் கையில் கிடைத்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம் தமிழ்ப் பேராசிரியர் திரு. இயேசுதாசன் அவர்கள் எனது பாரதிக்கு ஒரு கடிதம் கவிதையைப் பிரசுரித்திருந்தார்கள். நூலகத்திற்குள் என்னை மூழ்க வைத்த சுந்தரம் அவர்களும், என் கவிதைக்கு அங்கீகாரம் தந்து அதன் முதல் பிரசவத்தை நடத்தி வைத்த என் தமிழாசான் திரு.இயேசுதாசன் அவர்களும் இன்று உயிரோடு இல்லை. இருவரையும் என் நெஞ்சம் மறக்கவில்லை.

 


2018 செப்டம்பர் மாத அமுதம் இதழில் வெளிவந்தது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.