தொடர்புடைய கட்டுரை


நெஞ்சம் மறப்பதில்லை - 2

குமரி ஆதவன்

19th Jan 2019

A   A   A

தாய் வயிற்றில் சுமப்பாள்; தந்தை நெஞ்சில் சுமப்பார் என்று முற்காலங்களில் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். நிஜத்தைச் சொன்னால், தந்தை நெஞ்சில் மட்டுமல்ல, தன் தோளிலும் சுமக்கிறார். தன் குழந்தையின் பாரத்தோடு, அக் குழந்தையின் எதிர்காலம் குறித்த கனவுகளையும் சுமக்கக்கூடியவர் தந்தை. ஆனால் வெளியே சொல்லாத அந்தக் கனவு யாருக்கும் தெரிவதில்லை.

வீட்டில் கடைசிப் பிள்ளையாக நான் இருந்த காரணத்தால், கொஞ்சம் செல்லப்பிள்ளையாகவே இருந்தேன். என் தந்தை திரு. செபாஸ்டின் அவர்கள் என்னை தன் தோளில் சுமந்து சென்று பள்ளிக்கூடத்தில் விடுவார். வீட்டிலிருந்து பள்ளிக்கு குறுக்கு வழி என்றால் ஒரு வேலியைத் தாண்டினால் போதும். நேர்வழி என்றால் ஐந்து நிமிடம் நடந்தால் வந்து சேர்ந்து விடலாம். பள்ளிக்கு போகும் வழியிலேயே கார்த்திகேயன் நாயர் கடையில் புட்டு, பயிறு, பப்படம் வாங்கித் தந்து என் வயிற்றை நிறைத்து விட்டு, தோளிலேயே சுமந்தபடி வகுப்பறை வரைக்கும் அழைத்துச் செல்வார். எனது வகுப்பாசிரியை அன்னாள் அவர்களிடம், ‘பையன இடை நேரத்துல வீட்டுக்கு விட்டுராதுங்க. வீட்டுக்கு வந்தா அம்மாட்ட பால் குடிக்கிறதுக்காக தொந்தரவு செய்வான். வயசு ஐந்து தொடங்கியாச்சு, இன்னும் பால் குடி மறக்கல்ல’ என்று சிரித்துக் கொண்டே சொல்வார். இதை அன்னாள் ஆசிரியை உயிரோடு இருந்தது வரைக்கும் சொல்லிச் சிரிப்பார்கள். என் மனைவியிடம் வேறு இந்தக் கதையைச் சொல்லிக் கொடுத்து விட்டார்கள்.

அன்றெல்லாம் பெரும்பாலான வீடுகளில் அப்பா உணவருந்த உட்கார்ந்தாலே, பிள்ளைகளும் அப்பாவைச் சுற்றி உட்கார்ந்து கொள்வார்கள். அப்பா வருவதற்கு முன்னரே, உணவருந்தி விட்டு, உட்கார்ந்திருக்கும் நாங்களும் அப்பாவைச் சுற்றி உட்கார்ந்து விடுவோம். அப்பா சோற்றைப் பிசைந்து உருட்டும் போதே, எங்கள் கை நீளும். அப்பா ஒவ்வொருவருக்கும் உருட்டி உருட்டித் தந்துவிட்டு, கடைசியாய் மிஞ்சுவதில் தண்ணீரை விட்டு குடித்துச் செல்வார்.

இரவானால் உறங்கும் வரைக்கும் கதை சொல்வார். பத்தாயத்திற்கு மேல் படுத்திருக்கும் அவர் மார்பிலேயே பலநாட்கள் நான் தூங்கிப் போவேன். அவர் மார்பு வலிக்கிறதென்றோ, கீழே இறங்கிப் படு என்றோ சொன்னதில்லை. இந்த அனுபவம் வாசகர்கள் அனைவருக்கும் இருக்கும் எனக் கருதுகிறேன். 

ஒரு தந்தை தன் குழந்தைகளை நெஞ்சில் சுமக்கிறார் என்பதை, எனது இரண்டாம் வகுப்பு பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வுதான் நெஞ்சில் நிறுத்திச் சென்றிருக்கிறது.

எங்கள் ஊர் அருகில் ஒரு கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், சித்திரை மாதம் (ஏப்ரல்) ரோகினி நட்சத்திரம் அன்று கொடியேற்றுதல் நடைபெறும். கொடியேறிய ஒன்பதாம் நாள், பள்ளி வேட்டை என்றொரு நிகழ்ச்சி பயங்கரமான ஆக்ரோஷத்தோடு நடைபெறும். அதில் கிருஷ்ணன் பன்றியைக் கொல்வதாகக் காட்டுவார்கள். இந்த பள்ளி வேட்டை முடிந்த இரவு, கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்லமாட்டார் என்பதால், அடுத்த நாள் பத்தாம் திருவிழா அன்று அத்தம் நட்சத்திரத்தில் ஆறாட்டுத் திருவிழா முடிந்த பிறகே கோவிலுக்குள் கிருஷ்ணனை கொண்டு செல்வார்கள். பதினான்கு யானைகள் ஒருசேர வலியாற்றுமுகத்துக்கு கிருஷ்ணனை எடுத்துச் சென்று ஆறாட்டி இரவு கொண்டு வருவார்கள். இதைப்பார்க்க கூட்டம் அலை மோதும். வான வேடிக்கை ஒருபுறம், பக்திப் பாடல்களும், கேரள இசைக் கலைஞர்களின் வாத்திய இசையும் மேளமும் மற்றொரு புறம் என திருவிழா களைகட்டும்.

எல்லா சமயங்களையும் ஒன்றெனக் கருதும் என் தந்தை ஆறாட்டன்று யானை ஊர்வலத்தைக் காணத் என்னைத் தோளில் தூக்கிச் சென்றார்.  அப்போது சூசை எனும் அவரது நண்பர், “என்னடே, பய தரையில நிக்க மாட்டானோ?” என்றார்.  அதற்குப் பதிலாக என் தந்தை அவரிடம் சொன்ன வார்த்தையின் ஆழமும் விரிவும் தான் என்னை அவரை நெஞ்சத்தில் சுமக்க வைத்திருக்கிறது. “சூச, அவன் நான் பார்த்ததைவிட அதிகமா பார்க்கணும், இந்த உலகத்துல நெறைய தெரிஞ்சுக்கணும். என்னோட கடைக்குட்டிப் பிள்ளை ரொம்ப உயரத்துல இருக்கணும்ணு தான் தோளில் தூக்கி வச்சிருக்கேன்” என்றார். இதை என் தந்தை இறந்த அன்று திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தினார், நான் மேற்சொன்ன சூசை என்பவர்.

கதை கேட்டு உறங்க அவரது மார்பும், தரையில் கால் படாமல் பள்ளிக்குச் செல்ல அவரது தோளும், பசி தீர்ந்த பிறகும் ஆசைக்குச் சாப்பிட அவரது பிடிச் சோறும் எட்டரை ஆண்டுகள் மட்டுமே எனக்குக் கிடைத்தது.  நல்ல மலையாளக் கவிஞராக, நில அளவையாளராக, ஒரு கூர்வடியாக (நெல் அறுக்கிற குழுவின் தலைமையாள்) எங்கள் ஊர் கோவிலின் எட்டு ஆண்டு கால உபதேசியாராக தன் வியர்வைத் துளிகளை இம் மண்ணில் சிந்திவிட்டு, வயிற்றில் வளர்ந்த கட்டியை நீக்க நடந்த அறுவை சிகிச்சையில் (23.12.1978) மரணமடைந்தார்.

வன்முறையை விரும்பாத, அனைத்து மக்களிடமும் சாதிமத வேறுபாடின்றி அன்பு செலுத்திய, வறுமையில் வாடியவர்களுக்கு உதவும் பெருந்தன்மை கொண்ட அவரை அடையாளம் காட்டுவதற்கு என்னிடம் வார்த்தைகளைத் தவிர எதுவும் இல்லை. காணாமல் போன அப்பாவின் ஒற்றைப் புகைப்படம், மலையாளத்தில் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டிருந்த என் தந்தை எழுதி அவரது நண்பர்கள் சிலரால் வாசிக்கப்பட்டு, அச்சுவடிவம் காணாது கையெழுத்துப் பிரதியாக காணாமல் போன கண்ணீர் துள்ளிகள் எனும் கவிதைத் தொகுப்பு இவற்றை இன்றைக்கும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

எனது தந்தையைப் போல் எத்தனையோ தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுக்காக தங்களையேத் தியாகம் செய்கிறார்கள். ஆனால் இந்த தலைமுறையிடம் அவர்களை நேசித்து பராமரிக்கிற பண்பாடோ, நன்றிக் குணமோ இல்லை. அவர் ஒரு பணம் காய்க்கிற மரமாக இருக்க வேண்டும்; சொத்து சேர்த்து வைத்திருக்க வேண்டும்; இவ்வளவு தான். தந்தையின் மரணத்திற்குக் கூட வந்து பார்க்காத எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள். தந்தை இருக்கிற வரைக்கும் பேணுவதும், இறந்த பிறகு நெஞ்சத்து இருத்தி வைத்தலும் நமது கடமை.

(நெஞ்சின் ஞாபகங்கள் தொடரும்)

 


பெப்ரவரி 2018 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.