இந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ்

F.A.M. சேவியர்

19th Jun 2018

A   A   A

ஒரு நாடு உலக அரங்கில் தன்னிகரற்று விளங்க அந்த நாடு பல்வேறு துறைகளிலும் தன்னிறைவு பெற வேண்டியது இன்றியமையாதது. அந்த வகையில் இந்தியா ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு சவால் விடும் நிலையினை அடைந்துள்ளது. இந்தியாற்கு அந்த இடத்தினை பெற்றுக் கொடுத்தது அக்னி ஏவுகணை ஆகும். இந்த மாதம் நாம் தெரிந்துகொள்ள இருக்கும் சாதனை பெண்மணி இந்த அக்னி ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குனராக பணியாற்றி, இந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி என்றும் ஏவுகணை பெண்மணி என்றும் அக்னிபுத்ரி என்றும் அழைக்கப்படும் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் ஆவார்.

டெஸ்ஸி அவர்கள் 1963 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தின் ஆலப்புளாவில் பிறந்தார். இவரது தந்தையார் நடுத்தர தொழில் முனைவோர் ஆவார். இவரது சிறு வயதில் இவர்களது குடும்பம் தும்பா ராக்கெட் ஏவுதளத்தின் அருகில் குடி இருந்தது. அப்போது அங்கு ராக்கெட் ஏவப்படுவதை பார்த்து டெஸ்ஸிக்கு ராக்கெட் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இளம் பருவத்தில் அறிவியல் மீதும் கணிதம் மீது டெஸ்ஸி தாமஸ் மிகுந்த காதல் கொண்டவராக விளங்கினார். பள்ளி நாட்களில் இவரது கவனம் இயற்பியலின் பக்கம் திரும்பியது.

திருச்சூரிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்த இவர், அடுத்து புனேயிலுள்ள ஆயுதத் தளவாட தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து, ஏவுகணை பிரிவினை தேர்ந்தெடுத்து எம்.டெக் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் இவர் சிறந்த பாட்மிண்டன் வீராங்கணையாகவும் விளங்கினார்.

அடுத்ததாக குடிமையியல் தேர்வு எழுதினார். அதற்கான அடுத்தக்கட்ட தேர்வுக்கு செல்ல வேண்டிய அதே சமயத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகமான டிஆர்டிஓ விலிருந்து பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. ராக்கெட் தொழில்நுட்பம் மீதான இவரது ஆர்வத்தால் ஐஏஎஸ் தேர்வினை புறக்கணித்து டிஆர்டிஓ வில் பணியில் சேர்ந்தார். 1985 – இல் ஹைதராபாத்தில் உள்ள ஏ.எஸ்.எல் மையத்தில் இளநிலை விஞ்ஞானியாக இணைந்தார்.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் ராக்கெட் தயாரிப்பு ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த நேரம் அது. டெஸ்ஸி தாமஸின் திறமையையும் ஆர்வத்தையும் உணர்ந்த அவர் டெஸ்ஸி அவர்களை ஏவுகணை திட்டக்குழுவில் 1988 – ல் சேர்த்தார். ஆரம்பத்தில் அக்னி-3 ஏவுகணைத் திட்டத்தின் உதவி திட்ட இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார்.

அக்னி-3 இன் ஆரம்பக்கட்டத் தோல்விகளுக்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்ததில் டெஸ்ஸியின் பங்களிப்பு முக்கியமானது. 2008 ஆம் ஆண்டு 3000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கினை தாக்கவல்ல அக்னி 3 வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கவல்ல அக்னி4 ஏவுகணைதிட்ட ஆய்வு துவங்கியது. அதில் டெஸ்ஸி அவர்கள் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

பெரும் சவால்கள் நிறைந்த அப்பணியை திறம்பட செய்ய, அவரது தொழில்நுட்பத் திறனும், எடுத்த பணியை முடிக்கும் ஈடுபாடும் துணை புரிந்தன. 2011 – இல் அக்னி-4 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பின்னர் 5000 கிலோமீட்டர் தொலைவு செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஆய்விலும் டெஸ்ஸி திட்ட இயக்குநராக பணியாற்றினார். அத்திட்டம் 2009 இல் ஆரம்பிக்கபட்டு, ஏப்ரல் 19 2012 இல் வெற்றிகரமாக இலக்கினை தாக்கியது.

இதில் டெஸ்ஸியின் பங்களிப்பாக கருதப்படுவது, வளிமண்டலத்தில் கடுமையான வேகத்தில் பயணிக்கும் ஏவுகணையின் வெளிப்புறத்தில் உருவாகும் உச்சபட்ச வெப்பமான சுமார் 3000 டிகிரி செல்சியஸ் ஐ சமாளிக்கும் தொழில்நுட்பமாகும். வளிமண்டல ஏவுகலன் நுழைவு முறை என்று அழைக்கப்படும் ரி என்ட்ரி வெகிக்கிள் சிஸ்டம் – RVS தொழில்நுட்பம் டெஸ்ஸி தாமஸின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல் ஏவுகணைகள் இலக்கினை அடைவதில் ஏற்படும் உத்தேச பிழை 40 மீட்டருக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது உலக அரங்கில் மிகத் துல்லியமாக தாக்கும் ஏவுகணையாக அக்னி ஏவுகணைகள் மதிக்கப்படுகின்றன.

இவரை காதல் திருமணம் புரிந்துகொண்டுள்ள இவரது கணவர் சரோஜ்குமார் இவருடன் புனே கல்லூரியில் படித்தவர். இவர் கப்பற்படையில் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தேஜாஸ் பட்டேல் என்ற ஒரு மகனும் உள்ளார். இவர் ஃபோர்டு டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். சிறந்த விஞ்ஞானி என்பதையும் கடந்து சிறந்த குடும்பத் தலைவியாகவும் டெஸ்ஸி தாமஸ் விளங்குகிறார்.

இவரது சாதனைகளுக்காக இவருக்கு லால்பகதூர் சாஸ்திரி விருது, மதிப்புறு முனைவர் உள்ளிட்ட பல பட்டங்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை இவரது ஏவுகணை திட்ட பணிகள் தொடர்ந்து வருகின்றது.

 


டிசம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது. . .



Error
Whoops, looks like something went wrong.